Published : 11 Oct 2015 02:47 PM
Last Updated : 11 Oct 2015 02:47 PM
நடிகை மனோரமா மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஒரு வாரம் முன்பு அவரைச் சந்தித்தேன். நாங்கள் மூத்த சினிமா பத்திரிகையாளர்களுக்கு கவுரவிப்பு விழா நடத்திக் கொண்டிருந்தோம்.
அப்போது அனைவரும் ஆச்சரியத்தக்க வகையில் மனோரமா விழா மேடைக்கு வருகை தந்தார், பிறகு பார்வையாளர்கள் அனுமதியுடன் 65 ஆண்டுகளுக்கு முன்பாக கருணாநிதி அவர்கள் எழுதிய 3 பக்க வசனத்தை தனது நினைவிலிருந்து பேசினார்.
இதனை அவர் எதற்கு செய்து காட்டினார் என்றால் இன்னமும் தன்னால் சிறப்பாக நடிக்க முடியும் என்பதை பார்வையாளர்களுக்கு உணர்த்துவதற்காகத்தான். சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேல் அவர் நடித்து வந்துள்ளார். ஆனால் கடந்த சில ஆண்டுகள் நடிக்க முடியாமல் போனது அவரை பாதித்தது.
அன்றைய தினம் அந்த 3 பக்க வசனத்தை அவர் பேசி முடித்தவுடன் கரகோஷத்தில் அரங்கம் அதிர்ந்தது. எனது அனுமதிக்காக அவர் என்னைப் பார்த்த போது எனது கண்கள் கண்ணீரால் நிரம்பியிருந்தது.
3 வயது குழந்தை நடிகர் என்ற நிலையிலிருந்து அவர் என்னை அறிந்தவர். நேசிக்கக் கூடிய பெண்மணி, மிகப்பெரிய திறமைக்காரர். தமிழ்த் திரைப்பட நகைச்சுவைக்கு மனோரமா, நாகேஷ் ஆகியோர் தாயும், தந்தையும் போன்றவர்கள் என்றே நான் கூறுவேன்.
எனது நடிப்பை அவர்கள் பார்த்து, பாராட்டி, கருத்துக் கூறியது எனக்குக் கிடைத்த ஆகப்பெரிய மரியாதையாகப் பார்க்கிறேன். இவ்வாறு என்னை தொடர்ந்து உற்சாகப்படுத்தினார்கள்.
முதுகுக்குப் பின்னால் என்னை விமர்சிப்பவர்களிடத்தில் எனக்காக அவர்கள் வாதாடியுள்ளனர். குறிப்பாக மனோரமா அவர்கள். லட்சக்கணக்கான அவரது ரசிகர்களில் ஒருவனாக நானும் அவரை இழந்துள்ளேன். மனோரமா அவர்களுடன் பல படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளேன். சில ஆண்டுகளுக்கு முன் அவர் 1000 படங்களைக் கடந்தார்.
அவருடைய வாழ்க்கை முழுமையானது, ஆனாலும் அவரது ரசிகர்களான எங்களுக்கு இன்னமும் ஏதோ பூர்த்தியடையாதது போலவே உள்ளது.
அவரது இறுதிச் சடங்கிலும் கூட சிலர் மனோரமா அவர்கள் அளித்த மறக்க முடியாத திரைக் கணங்கள் நினைவுக்கு வர கவனக்குறைவாகவேனும் சிரித்து விடலாம். உங்களது கூர்மையான நகைச்சுவையால் எங்கள் முகங்களில் சிரிப்பை வரவழைத்த உங்களுக்கு நன்றி அம்மா.
எங்களுடன் நீங்கள் பகிர்ந்து கொண்ட மகிழ்வான, மற்றும் துயரமான தருணங்களுக்கு நன்றி. தற்போதைய தற்காலிக துயரத்தின் மீது உங்களது நகைச்சுவை பிரதிமை தாமே விரைவில் படிந்து விடும் என்பது உண்மை. அன்பும், வேடிக்கையுமான என் அம்மாவுக்கு எனது பிரியாவிடை." என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT