Published : 23 Sep 2015 08:27 AM
Last Updated : 23 Sep 2015 08:27 AM
அக்டோபர் 1 ம் தேதி ரிலீஸாகும் ‘கத்துக்குட்டி’ திரைப்படம் தமிழகத்தில் 240 திரையரங்குகளில் வெளியாகிறது.
டெல்டா மாவட்ட மக்களின் வாழ்க்கையை பின்னணியாகக் கொண்ட ‘கத்துக்குட்டி’ திரைப்படம் அக்டோபர் 1-ம் தேதி ரிலீஸாகிறது. இப்படம் தமிழகத்தில் 240 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. நடிகர் நரேன், நடிகை ஸ்ருஷ்டி டாங்கே, இயக்குநர் பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜ், இயக்குநர் இரா.சரவணன், தயாரிப்பாளர்கள் பி.ஆர்.முருகன், ஆர்.ராம்குமார் மற்றும் படக்குழுவினர் இதில் கலந்துகொண்டனர்.
இச்சந்திப்பில் இயக்குநர் இரா.சரவணன் நிருபர்களிடம் கூறியதாவது:
‘கத்துக்குட்டி’ திரைப்படம் தஞ்சை மண்ணின் வாழ்வியலுடனும், வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவையுடனும் உருவாகி இருக்கிறது. நரேன் முதல் முறையாக நகைச்சுவை பாத்திரத்தில் நடித்திருக்கிறார். முன்னணி நகைச்சுவை நடிகரான சூரி இன்னொரு கதாநாயகனாகவே படத்தில் வருகிறார். நாங்கள் சூரியிடம் 12 நாட்கள்தான் கால்ஷீட் கேட்டோம். ஆனால், படத்தின் கதை மிகவும் பிடித்துப் போனதால் 32 நாட்களை அவர் எங்களுக்கு ஒதுக்கிக் கொடுத்தார்.
இப்படம் நகைச்சுவை படமாக இருந்தாலும், இன்றைய தலைமுறைக்கு அவசியமான கருத்துகளைச் சொல்லவும் நாங்கள் தவறவில்லை. நாம் சாப்பிடும் ஒரு கவளம் சோற்றுக்குப் பின்னால் எத்தனை பேரின் உழைப்பு இருக்கிறது என்பதைப் பற்றி படத்தில் சொல்லி இருக்கிறோம். நல்ல கருத்தைச் சொல்லும்போது ஜனரஞ்சகப் பாதையைவிட்டு விலகிப் போய்விடுவது வழக்கமாக நிகழக்கூடியது. ஆனால், ‘கத்துக்குட்டி’ படத்தின் திரைக்கதை யுக்தி, அத்தகைய நிலையை மாற்றி படம் முழுக்க ஜனரஞ்சகப் பாதையிலேயே பயணிக்கும்படி செய்திருக்கிறது. செஞ்சோற்று கடன் தீர்க்கும் விதமாக நமக்காகப் படியளக்கும் டெல்டா மாவட்ட மக்களின் வாழ்க்கையை ரசிகர்கள் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டும்” என்றார்.
நடிகர் நரேன் பேசும்போது “இரண்டு மாதங்களுக்கு முன்னால் யதார்த்தமாக நடிகர் விஜய்யை சந்தித்தோம். அப்போது அவருடைய ‘புலி’ படம் எப்போது ரிலீஸ் என்று ஆவலோடு கேட்டோம். எங்களின் ‘கத்துக்குட்டி’ படத்தைப் பற்றியும் அவரிடம் பேசினோம். ‘நல்லபடம் எப்போ வந்தாலும் ஜெயிக்கும். நீங்க கவலையே படாதீங்க’ எனச் சொல்லி எங்களுக்கு தைரியமூட்டினார். ‘புலி’ படம் வெளியாகும் நாளிலேயே அவரது அன்புடன் எங்கள் படம் வெளிவருவதில் மகிழ்ச்சி” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT