Published : 30 Sep 2015 09:00 AM
Last Updated : 30 Sep 2015 09:00 AM

புலி முதலீட்டில் சந்தேகம்: விஜய் வீடு உட்பட பல இடங்களில் வருமான வரி சோதனை

'புலி' மற்றும் விஜய்யின் அடுத்த படத்தின் தயாரிப்பில் தொடர்புடையவர்களது வீடு, அலுவலகங்களில் இன்று (புதன்கிழமை) காலை தொடங்கி வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்று வருகிறது. இது, திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா ஆகியோர் வீடுகளில் இன்று காலை வருமான வரித் துறையினர் அதிரடி சோதனையைத் தொடங்கினர். அவர்களது அலுவலகங்களிலும் சோதனை நடந்து வருகிறது.

நீலாங்கரையில் உள்ள விஜய் வீடு மட்டுமன்றி, 'புலி' படத்தின் தயாரிப்பாளரான பி.டி.செல்வகுமார் மற்றும் ஷிபு தமீன்ஸ் ஆகியோர் வீடுகளிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

மதுரையில் சினிமா தயாரிப்புக்கு ஃபைனான்ஸ் அளிக்கும் அன்பு வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. 'புலி' படத்துக்கு அதிகமாக ஃபைனான்ஸ் அளித்தது அன்பு தான் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

மேலும், விஜய் அடுத்ததாக நடித்து வரும் இயக்குநர் அட்லீ படத்தின் தயாரிப்பில் தொடர்புடையவர்கள் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. அப்படத்தில் விஜய் நாயகியாக நடித்துவரும் சமந்தா, தயாரிப்பாளர் தாணு ஆகியோரது வீடு மற்றும் அலுவலங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

விஜய் படங்களின் தயாரிப்புகளில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரது வீடு மற்றும் அலுவலகங்கள் என 35 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், இப்படத்தின் சென்னை விநியோக உரிமையை வாங்கியிருக்கும் தேனாண்டாள் பிலிம்ஸ் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

'கணக்கில் வராத முதலீடு'

இதற்கிடையில், இந்த அதிரடி சோதனை குறித்து வருமான வரித்துறை மூத்த அதிகாரி ஒருவர் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்த தகவலில், "நடிகர் விஜய்யின் புலி திரைப்படம் தொடர்பாகவே இச்சோதனை நடைபெறுகிறது. புலி திரைப்படத் தயாரிப்பில் கணக்கில் காட்டப்படாத முதலீடுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது" என்றார்.

நயன்தாரா வீட்டில் சோதனை

இதனிடையே, புலி மற்றும் விஜய்யின் சமீபத்திய படங்களில் தொடர்பில்லாத நடிகை நயன்தாராவின் கொச்சி வீட்டிலும் சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது.

வரிச்சலுகை முயற்சி

புலி திரைப்படம் நாளை (வியாழக்கிழமை) வெளியாகிறது. சென்சார் முடிந்தவுடன், வரிச்சலுகைக்காக அதிகாரிகளுக்கு 'புலி' படத்தை திரையிட்டு காட்டினார்கள். ஆனால், வரிச்சலுகை உண்டா, இல்லையா என்பதை கூற அதிகாரிகள் மறுத்துவிட்டார்கள். முன்னணி சேனலிடம் இப்படத்தின் தொலைக்காட்சி உரிமை இருப்பதால், வரிச்சலுகை கிடைப்பது கடினம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x