Published : 21 Sep 2015 11:26 AM
Last Updated : 21 Sep 2015 11:26 AM

மதுரை சம்பவம்: ரசிகர்களின் ஆதரவால் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

"ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி, உங்கள் அன்பு எனக்கு வலு சேர்க்கிறது" என்று மதுரை சம்பவத்தையொட்டி, நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் அவரது சிலை திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக நடிகர்கள் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் ஆகியோர் நேற்று காலை ஒரே விமானத்தில் மதுரை வந்தனர்.

கமல்ஹாசனை வரவேற்க விமான நிலையத்தில் ரசிகர்கள் திரண்டிருந்தனர். ஆனால் அவர் விமான நிலையத்தில் பயணிகள் வெளியே செல்லும் வழியாக வராமல், பயணிகள் நுழையும் வழியாக வெளியே வந்து காரில் சென்றார்.

அவரை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது அங்கு நின்றிருந்த கமல் ரசிகர்கள், சிவ கார்த்திகேயனை முற்றுகையிட்டு, ரஜினி முருகன் படத்தில் நடிப்பதற்கு எதிராக கோஷம் எழுப்பியவாறு, அவரை பின் தொடர்ந்தனர்.

பாதுகாவலர்கள் சிவகார்த்திகேயனை பாதுகாப்பாக காரில் ஏற்றி அனுப்பினர். அப்போது, அவரது காரை சில ரசிகர்கள் தட்டியுள்ளனர். இதுதொடர்பாக போலீஸில் புகார் அளிக்கப்படவில்லை.

இந்நிலையில், சிவகார்த்திகேயனுக்கு ஆதரவு தெரிவித்து, ட்விட்டரில் அவரது ரசிகர்கள் உள்ளிட்ட பலர் #WeSupportSivaKarthikeyan என்ற ஹாஷ் டேக்கை பயன்படுத்தி ட்வீட் செய்து வருகின்றனர். இது தேசிய அளவில் ட்ரெண்ட் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் இந்த செயலுக்கு நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்வீட்டில், "உங்களது ஆசியினால் நான் நலமாக இருக்கிறேன். இந்த தருணத்தில் எனக்கு ஆதரவு அளிக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. உங்கள் அன்பு எனக்கு வலு சேர்க்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நேற்றே தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றில், தான் நலமாக இருப்பதாகவும், எந்த பிரச்சினையும் நடக்கவில்லை என்றும் சிவகார்த்திகேயன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x