Published : 09 May 2014 12:59 PM
Last Updated : 09 May 2014 12:59 PM
ஸ்ரீதேவிக்குப் பிறகு தமிழ்த் திரையுலகில் த்ரிஷா அளவுக்கு இத்தனை ஆண்டுகள் யாரும் நீடித்த புகழ் வெளிச்சத்தில் இருந்ததில்லை. அம்பிகா, ராதா போன்ற நட்சத்திரங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தாலும் பத்து ஆண்டுகள் முன்னணியில் இருந்ததில்லை. குஷ்புவும் 10 ஆண்டுகளுக்குள்தான். ஆனால், பத்தாண்டுகளுக்கு மேல் தாக்குப் பிடித்து, முன்னணியில் இருப்பவர் என்றால் அது த்ரிஷாதான். 2002-ல் அறிமுகமாகி, இப்போதும் தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று நான்கைந்து படப்பிடிப்புகளில் பிஸியாக இருக்கிறார். மொத்தம் 12 ஆண்டுகள். சரி, த்ரிஷாவிடம் அப்படி என்ன ஸ்பெஷல்?
நிறைய சொல்லலாம். த்ரிஷா தொழிலையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் போட்டுக் குழப்பிக்கொள்வது இல்லை. தமிழ்த் திரையுலகில் அவரைப்போல் அதிகஅளவு சர்ச்சைகளில் சிக்கிய நடிகை வேறு யாரும் இல்லை. ரோட்டில் ஆட்டம் போட்டார் என்று எழுதினார்கள். நைஜீரிய போதைக் கடத்தல் ஆசாமி ஒருவர் போலீஸில் சிக்கியபோதும் த்ரிஷாவின் பெயரை இழுத்தார்கள். மேலும் பல விதமாக அவமானப்படுத்தினார்கள். ஒரு சராசரிப் பெண்ணுக்கு இதெல்லாம் நடந்திருந்தால் நிச்சயமாக உடைந்திருப்பார்.
ஆனால், மேற்கண்ட அத்தனை சம்பவங்களின்போதும் உடைந்து போகாமல், கொதித்துக் கொந்தளித்து உணர்வுகளைக் கொட்டாமல், சூழலைப் பக்குவ மாகவே கையாண்டார் த்ரிஷா. எல்லோரும் பல திசைகளிலிருந்தும் தாக்கியபோது அவற்றைப் பக்குவமாக எதிர்கொண்ட த்ரிஷா, ஒருவர் நேரடியாகத் தாக்கியபோது துணிச்சல் மிக்க பெண்ணாகத் தனது உரிமையை நிலைநாட்டவும் தயங்கவில்லை. த்ரிஷாவை இழிவு படுத்தும் விதமாகச் செயல்பட்ட ஒரு வாரப் பத்திரிகைக்கு எதிராக உடனே காவல் துறையில் புகார் கொடுத்து அதன் ஆசிரியரைச் சிறையில் தள்ள வைத்தார். இப்படியெல்லாம் எவ்வளவோ நடந்தாலும் இவை எதுவும் அவரது படப்பிடிப்பைப் பாதித்தது கிடையாது. இவை எல்லாவற்றையும் தனது தொழிலில் இருந்து வேறுபடுத்தி வைத்திருந்தார் அவர்.
கடந்த 10 ஆண்டுகளில் த்ரிஷாவைப்போல வேறு எந்தத் தமிழ் நடிகையையும் ஊடகங்கள் துரத்தியதில்லை. ரசிகர்கள் மத்தியில் த்ரிஷாவுக்கு இருக்கும் அபரிமிதமான வரவேற்பும் அளவற்ற ஈர்ப்பும்தான் இதற்குக் காரணம் என்றும் சொல்லலாம்.
‘கிரீடம்’ படம் வெளியான நேரம். அஜித்துக்கு இணையாக த்ரிஷாவுக்கு கட்-அவுட் வைத்தார்கள் த்ரிஷா ரசிகர்கள். இருவரின் ரசிகர்களுக்கும் இடையே லேசான உரசல்கூட ஏற்பட்டது. தமிழ்த் திரையுலக வரலாற்றில் எம்.ஜி.ஆர் - சிவாஜி தொடங்கி விஜய் - அஜித் வரை ரசிகர்களிடையே உரசல் ஏற்பட்டதுண்டு. முதல்முறையாக ஒரு கதாநாயகியின் ரசிகர்களுக்கும் நாயகனின் ரசிகர்களுக்கும் உரசல் ஏற்பட்டது என்றால், அது த்ரிஷாவின் விஷயத்தில் மட்டுமே.
இந்த ஆண்டு அதே மே மாதம். அஜித்தின் படம் எதுவும் இப்போது வெளியாகவில்லை. ஆனால், ஊடகங்கள் அஜித்தைப் பற்றி எழுதிக் குவித்தன. காரணம் மே 1-ம் தேதி அஜித்தின் பிறந்த நாள். அதே மே மாதம் 4-ம் தேதி த்ரிஷாவின் பிறந்த நாள். 2007-ல் த்ரிஷாவின் பிறந்த நாளை ஊடகங்கள் கொண்டாடின. இன்று அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை. காரணம், ஆண்களின் நட்சத்திர மதிப்புக்கு இங்கே வயது வரம்பே கிடையாது. பெண்களின் நிலை அப்படி அல்ல. இப்படிப்பட்ட ஒரு சூழலில் 31 வயதான த்ரிஷாவைப் பல ஊடகங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதில் வியப்பென்ன?
வீட்டுக்கு ரொம்பவுமே நல்ல பிள்ளை த்ரிஷா. குறிப்பாக, அம்மா சொல்லைத் தட்ட மாட்டார். த்ரிஷாவின் கால்ஷீட் தொடங்கி, பெரும்பான்மை நடவடிக்கைகளை முடிவுசெய்வது அவரது அம்மா உமா கிருஷ்ணன்தான். த்ரிஷா ஊடகங்களிடம் ரொம்பவும் ஒட்டவும் மாட்டார்; வெட்டிக்கொள்வதும் இல்லை. ஊடகங்களில் நான்கு பேர் அவருக்கு நெருக்கமாக இருந்தால் அதுவே அதிகம். ஆனால், பேட்டி என்று சென்றால் பெரும்பாலும் கிடைத்துவிடும். என்ன, அவரது அம்மா தருவார். அரிதினும் அரிது த்ரிஷாவின் நேரடிப் பேட்டி!
எல்லா விதமான பாத்திரங்களுக் கும் பொருந்துவது த்ரிஷாவின் ஸ்பெஷல். ‘கில்லி’யில் எளிய குடும்பத்தைச் சேர்ந்த தனலட்சுமியாக மருண்ட விழிகளுடன் அசத்தினார் என்றால் ‘ஆய்த எழுத்து’ படத்தில் அல்ட்ரா மாடர்ன் மீராவாக கிளாமரில் கிறங்கடித்தார். ‘உனக்கும் எனக்கும்’ படத்தில் வரும் துள்ளலான கவிதாவை எல்லாருக்கும் பிடிக்கும். ‘ஆதி’யில் சற்றே சீரியஸான பாத்திரத்தையும் கச்சிதமாகக் கையாண்டார்.
த்ரிஷா பெரியதாக கேரக்டர் ரோல் செய்யவில்லை என்பார்கள். அது அவரது தவறு இல்லை. தமிழ் இயக்குநர்கள் கொடுக்கவில்லை. அவருக்கு நடிக்க வராது என்பவர்கள் தெலுங்கின் ‘வர்ஷம்’, ‘நுவ்வொஸ்தானுண்டா நேனொத்துண்டானா’ பார்க்கலாம். தமிழில் ஒரே விதிவிலக்கு கௌதம் மேனனின் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’. இந்தப் படத்தைப் பார்த்த இளைஞர்கள் அனைவரும் சிம்புவுக்குப் போட்டியாக ஜெஸியைக் காதலித்திருப்பார்கள். அந்த அளவுக்குப் பாத்திரத்தோடு ஒன்றியிருப்பார் த்ரிஷா.
பாந்தமான அழகு, பாத்திரத்தோடு பொருந்துவது, ஒல்லியான உடல் வாகு, கிறங்கவைக்கும் புன்னகை ஆகியவை த்ரிஷாவைத் தமிழ் ரசிகர்களின் செல்லமாக ஆக்கியிருக்கின்றன. இவை எல்லாவற்றையும் தாண்டி த்ரிஷாவிடம் மிளிரும் குழந்தைத்தனம் அவர் மீதான ஈர்ப்புக்கு முக்கியமான காரணம். ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் ‘ஏன் உடைத்தாய் இதயம்’ பாடலில் அவர் மலர்க் கிரீடம் ஒன்றைத் தலையில் சூடிக்கொள்வார். அப்போது வெளிப்படும் பாருங்கள் வெட்கம் கலந்த அந்தக் குழந்தைத்தனம்.
ஒருவேளை அதுவே த்ரிஷாவின் ஸ்பெஷலாக இருக்கலாம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT