Published : 03 Sep 2015 04:09 PM
Last Updated : 03 Sep 2015 04:09 PM
நாளை (செப். 4) திட்டமிட்டபடி அனைத்து படங்களும் வெளியாகும் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருக்கிறது.
'பாயும் புலி' படத்தின் வெளியீட்டு பிரச்சினை எழுந்தபோது, எந்த ஒரு படமும் வெளியீடு இல்லை என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்களுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது.
இந்நிலையில், இன்று காலை தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
அக்கூட்டத்தின் முடிவில் எடுத்த தீர்மானத்தில் தயாரிப்பாளர் சங்கம் கூறியிருப்பது, "ஒட்டுமொத்த தமிழ் திரையுலகின் வேண்டுகோளை ஏற்று திரையுலகின் நன்மை கருதி, தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு, தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகிய அமைப்புகள் கூடி எடுக்கப்பட்ட முடிவின்படி, ஏற்கனவே திட்டமிட்டபடி 04/09/2015 அன்று 'பாயும் புலி' உட்பட அனைத்து நேரடி தமிழ்த் திரைப்படங்களும் வெளியிடப்படும்.
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் ஒத்துழைப்பு அளித்து படத்தை வெளியீடு செய்யும்படி, மேற்கண்ட அனைத்து அமைப்பு சங்கங்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். அல்லாமல் வேறு திரைப்படங்களை மனதில் வைத்து 'பாயும் புலி' திரைப்படம் உட்பட அனைத்துத் திரைப்படங்களையும் திரையிடாமல், தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தும் திரையரங்குகள் மீது, தமிழ் திரையுலகம் ஒன்று கூடி நடவடிக்கை மேற்கொள்வது குறித்து முடிவெடுக்கும் என்று ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது" என்று தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்திருக்கிறது.
தீபாவளிக்கு படங்கள் வெளியீடு இல்லை
மேலும், இத்தீர்மானத்தைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு, "அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து அக்டோபர் 23ம் தேதி முதல் எந்த ஒரு படமும் வெளியிடுவது இல்லை என்று முடிவெடுத்திருக்கிறோம். தீபாவளிக்கு எந்த படமும் வெளியாகாது. தமிழ் திரையுலகை புதுப்பிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க தீர்மானித்திருக்கிறோம். முதலில் தயாரிப்பாளர்களை காப்பாற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு, பின்னர் ரசிகர்களை திருப்திபடுத்துவோம்" என்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT