Published : 22 Aug 2015 01:16 PM
Last Updated : 22 Aug 2015 01:16 PM
ஆவி மார்க்கெட் இப்போது நல்லா இருந்தாலும் கூட எனக்கு நம்பிக்கை இல்லை என்று 'மய்யம்' இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் தெரிவித்தார்
'மய்யம்' படத்தில் நவீன் சஞ்சய், ஜெய் குகேனி, சுஹசினி குமரன், பூஜா தேவரேயா, ரோபோ சங்கர். முருகானந்தன் நடிக்கின்றனர். கதை திரைக்கதை, தயாரிப்பு ஏ.பி.ஸ்ரீதர். ஒளிப்பதிவு மார்டின்-அப்பு. இயக்கம் ஆதித்யா பாஸ்கர். இசை கேஆர்.
ஆதித்யா பாஸ்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'மய்யம்'. நவீன் சஞ்சய், ஜெய் குகேனி, சுஹசினி குமரன் உள்ளிட்ட பல்வேறு இளைஞர்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை எழுதி ஸ்ரீதர் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் இசையை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் வெளியிட்டார் கமல்ஹாசன்.
அதனைத் தொடர்ந்து 'மய்யம்' குழுவினருக்கு இடையே கமல்ஹாசன் பேசியது, "'மய்யம்' குழுவினருக்கு பின்புலமாக ஸ்ரீதர் இருப்பதில் எனக்கு சந்தோஷம். ஆவி மார்க்கெட் இப்போது நல்ல இருந்தாலும் கூட எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், இந்த இடத்தில் தான் 4 தலைமுறைகளுக்கு முன்பு ஆர்.சி.ஷக்தி என்ற இயக்குநரும், கமல்ஹாசன் என்ற இளைஞரும் 'உணர்ச்சிகள்' என்ற படத்தை தொடங்கினோம்.
படப்பிடிப்பு இடம் கிடைக்கவில்லை என்பதால், இங்கேயே மாடியில் படப்பிடிப்பு நடத்தினோம். அப்படத்தில் நாயகன் வேடத்துக்கு ஆள் கிடைக்கவில்லை, வேறு வழியில்லாமல் கிடைத்த நாயகன் தான் நான். அந்த படங்கள் தான் எனக்கு கே.பாலசந்தர் வாய்ப்பு கொடுக்கும் போட்டோ ஷுட் ஆக அமைந்தது. இங்கு பல முக்கிய நபர்களுக்கு போட்டோ ஷுட் நடந்திருக்கிறது.
இன்னொரு நண்பர் நல்ல சிகரெட் புடிப்பார், அவரையும் இங்கே தான் போட்டோ எடுத்தார்கள். அவர் தான் ரஜினிகாந்த். என்னுடைய அரங்கேற்றத்திற்கான ஆயத்தங்கள் எல்லாம் இங்கே தான் நடந்தது. நல்லது, கெட்டது என பல விஷயங்களை இந்த இடம் பார்த்திருக்கிறது. பல இளைஞர்களை வளர்த்துவிட்ட இடம். என்னுடைய இடம் என்பதால் சொல்லவில்லை, இங்கு நடமாடியவர்கள் எல்லாம் பெரிய மனிதர்களாக வந்திருக்கிறார்கள். இந்த இடத்தில் இன்னொரு தலைமுறை தலையெடுப்பதை பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது." என்று தெரிவித்தார் கமல்ஹாசன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT