Published : 03 Aug 2015 01:04 PM
Last Updated : 03 Aug 2015 01:04 PM
"நான் எதைப் பேசினாலும் அரசியலாக்கி திசை திருப்பி விடுகிறார்கள். எனவே, எதையும் அரசியலாக்க வேண்டாம்" என்று நடிகர் விஷால் வேதனையுடன் வேண்டுகோள் விடுத்தார்.
சுசீந்திரன் இயக்கத்தில் விஷால், காஜல் அகர்வால், சூரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'பாயும் புலி'. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை வேந்தர் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறார். எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் தமிழகமெங்கும் இப்படத்தை வெளியிட இருக்கிறது.
'பாயும் புலி' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அவ்விழாவில் விஷால் பேசும்போது, "இவ்விழாவுக்கு வந்த விருந்தினர்களுக்கு பூங்கொத்து கொடுக்கவில்லை. அதற்கு ஆகிற செலவுத்தொகையை இரண்டு ஏழை மாணவிகளுக்கு கல்விக்கான உதவியாக கொடுக்கலாம் என்றேன். அதை தயாரிப்பாளரும் ஒப்புக் கொண்டார். அதன்படி வழங்கப்பட்டுள்ளது.
பூங்கொத்து வாடிவிடும். கல்விக்கு உதவுவது, இரண்டு பேர் வாழ்க்கைக்கு வழிகாட்டும். உடனே நான் பூங்கொத்து தயாரிப்பவர்களுக்கு எதிரி போல பேச ஆரம்பிக்க வேண்டாம். ஏனென்றால் நான் எது பேசினாலும் அரசியலாக்கி திசை திருப்பி விடுகிறார்கள்.
நான் வாயில்லாத ஜீவன்களுக்கு குரல் கொடுத்தேன். தெரு நாய்கள் கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன். அதை அரசியலாக்கி விட்டார்கள். 'பாய்க்காட் கேரளா' வரை பேச ஆரம்பித்து அரசியலாக்கி விட்டார்கள். நான் கேரளாவுக்கு எதிரியல்ல. எதையும் அரசியலாக்கி விட வேண்டாம். அடிமாடுகள் துன்புறுத்தப்படுவதற்கும் அப்படித்தான் குரல் கொடுத்தேன். விமர்சிக்கப்பட்டேன். வாயில்லாத ஜீவன்களுக்கு குரல் கொடுப்பது தவறா?
இங்கே மேடையில் பல பெரிய சாதனையாளர்கள், பெரிய மனிதர்கள் எல்லாம் இருக்கிறார்கள். என் முதல் படம் 'செல்லமே' வந்தபோது என்னை முதன்முதலில் வாழ்த்தியவர் வைரமுத்து சார்தான். அவரது வாழ்த்து நம்பிக்கை ஊட்டியது. அதை என்றும் மறக்க மாட்டேன் எனக்கு சொத்தாக இருப்பது நண்பர்கள்தான். வேறு சொத்து எனக்கு இல்லை அவர்கள் இல்லாமல் நானில்லை.
சினிமா என் தொழில். சினிமா என் தாய். அதற்கு பாதிப்பு வரும் போது நிச்சயம் எனக்குக் கோபம் வரும். அப்படித்தான் திருட்டு விசிடிக்கு எதிராகப் போராடினேன். இதில் அரசியல் நோக்கமும் இல்லை, விளம்பர நோக்கமும் இல்லை. என்னைப் போல எல்லாரும் நினைத்தால் சினிமா இன்னும் நன்றாக இருக்கும்" என்று பேசினார் விஷால்.
'பாயும் புலி' படத்தின் இசையை இந்திய ஜனநாயக் கட்சித் தலைவர் பாரிவேந்தர் வெளியிட கோவை ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் அதிபர் சிவா பெற்றுக் கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT