Last Updated : 10 Aug, 2015 10:12 AM

 

Published : 10 Aug 2015 10:12 AM
Last Updated : 10 Aug 2015 10:12 AM

ரஜினி - ரஞ்சித் படத்தில் தன்ஷிகாவுக்கு முக்கிய கதாபாத்திரம்

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் செப்டம்பர் 18ம் தேதி தொடங்க இருக்கிறது.

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பது உறுதியான உடனே, யாரெல்லாம் ரஜினியோடு நடிக்கவிருக்கிறார்கள் என்பது தான் கோலிவுட்டில் பேச்சாக இருந்தது. ஆனால், பெரிய நடிகைகள், நாயகர்கள் யாருமே இல்லாமல் ஒரு புதிய அணியாக ரஞ்சித் ஒப்பந்தம் செய்திருக்கிறார்.

ரஜினிக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இளம் வயது ரஜினிக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்கும் காட்சிகள் அனைத்துமே சென்னையில் படமாக்கப்பட இருக்கிறது. சென்னையில் 10% படப்பிடிப்பும், மீதமுள்ள அனைத்து காட்சிகளும் மலேசியாவில் படமாக்கப்பட இருக்கிறது.

வயதான தாதா வேடத்தில் நடிக்கவிருக்கும் ரஜினியின் நண்பர் மகனாக நடிக்க கலையரசன் ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும், நாசர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இப்படத்தில் முக்கியமான ரஜினிக்கு மகள் வேடத்தில், 'பரதேசி' மற்றும் 'அரவான்' உள்ளிட்ட படங்களின் மூலம் அறியப்பட்ட தன்ஷிகா நடிக்க இருக்கிறார்.

படப்பிடிப்பு ஏன் தள்ளி வைக்கப்பட்டது!

ஆகஸ்ட் முதல் வாரத்தில் படப்பிடிப்பு துவங்க திட்டமிட்டு நடிகர்களிடம் தேதிகளும் வாங்கியிருந்தார்கள். ஆனால் மலேசியா விசா விவகாரங்கள் மற்றும் நடிகர்களின் ஒப்பந்தம் முடியாததால் படப்பிடிப்பு தள்ளிப் போனது. இதனால் ஆகஸ்ட் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை.

மேலும், பிரகாஷ்ராஜிடம் தேதிகள் தள்ளி கேட்டபோது, என்னிடம் இல்லை.. நீங்கள் கேட்கும் தேதிகள் வேறு படத்துக்கு ஒதுக்கி விட்டேன் என்று தெரிவித்திருக்கிறார். இதனால், பிரகாஷ்ராஜ் இப்படத்தில் இருந்து விலகும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. ஆனால், ரஞ்சித் முக்கிய பாத்திரம் என்பதால், பிரகாஷ்ராஜ் தேதிகள் கிடைக்கும் நாளில் படப்பிடிப்பை மாற்றி வைத்திருக்கிறார். இதனால் தான் செப்டம்பட் 18ம் தேதி படப்பிடிப்பு தொடங்கப்பட இருக்கிறது என்கிறது படக்குழு.

'காளி' தலைப்பு வைக்கப்படுமா?

இப்படத்தின் தலைப்பு 'காளி' என பலரும் செய்திகளை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். இச்செய்தி குறித்து படக்குழுவினரிடம் விசாரித்த போது, "இயக்குநர் ரஞ்சித், ரஜினி சாரை சந்தித்து கதை விவாதம் நடைபெற்ற போது, 'காளி' என்று தலைப்பு வைக்கலாம் என பேச்சுவார்த்தை எழுந்தது உண்மை தான்.

ஆனால் ரஜினி சார், "இந்தத் தலைப்பை வைத்தே ஆக வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், திரையுலகில் கொஞ்சம் விசாரித்துவிட்டு வையுங்கள்" என்று சொல்லிவிட்டார். ரஜினி சார் ஏன் இப்படி சொன்னார் என்று ரஞ்சித் விசாரித்த போது அத்தலைப்பின் மீது விவகாரங்கள் தெரிந்து தற்போது என்ன தலைப்பு வைக்கலாம் என்று ஆலோசனை நடத்தி வருகிறார்கள்" என்று தெரிவித்தார்கள். மேலும், கார்த்தி நடிப்பில் வெளியான 'மெட்ராஸ்' படத்துக்கு ரஞ்சித் முதலில் வைத்த தலைப்பு 'காளி' தான் என்பது நினைவுக் கூறத்தக்கது.

'காளி' தலைப்பு விவகாரங்கள் குறித்து திரையுலகில் விசாரித்த போது, "ரஜினி நடித்த பழைய படமான 'காளி' படப்பிடிப்பில் தான் தீவிபத்து ஏற்பட்டு 5 பேர் பலியானார்கள். மேலும், 'நரசிம்மா' என்று பெயர் வைத்து படம் வெளியாகும் முன்பே இயக்குநர் மரணமடைந்துவிட்டார். ஆகையால் 'காளி', 'நரசிம்மா' போன்ற பெயர்களை எல்லாம் வைக்க தற்போது இயக்குநர்கள் தயங்கி வருகிறார்கள்" என்றார்கள்.

செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் யாரெல்லாம் ரஜினியோடு நடிக்க இருக்கிறார்கள், படத்தின் தலைப்பு என்ன என்பதை எல்லாம் அறிவித்துவிட்டு படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x