Published : 26 Aug 2015 08:33 PM
Last Updated : 26 Aug 2015 08:33 PM
'லிங்கா' விவகாரத்தில் இன்னும் பலரும் பணம் தரவேண்டியது இருப்பதால், வேந்தர் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 'பாயும் புலி' படத்துக்கு பல்வேறு ஏரியாக்களில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் ரெட் போட்டு இருக்கிறார்கள்.
சுசீந்திரன் இயக்கத்தில் விஷால், காஜல் அகர்வால், சூரி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பாயும் புலி'. வேந்தர் மூவிஸ் தயாரிப்பில் உருவான இப்படம் செப்டம்பர் 4-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 'பாயும் புலி' படத்துக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ரெட் போட்டுள்ளது. இந்த ரெட் போடப்பட்டுள்ளதை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
ரஜினி நடிப்பில் வெளியான 'லிங்கா' படத்தின் தமிழக உரிமையை ஈராஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கியது வேந்தர் மூவிஸ் நிறுவனம்.அந்நிறுவனத்திடம் இருந்து விநியோகஸ்தர்கள் அந்த அந்த ஏரியாவுக்கான உரிமையை பெற்றுக் கொண்டார்கள்.
கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியான 'லிங்கா' படம் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, விநியோகஸ்தர்கள் தங்களுக்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார்கள். அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் ரஜினி ஆகியோர் இணைந்து பணம் கொடுத்து பிரச்சினையை முடித்தார்கள்.
ஆனால், அப்பணம் பல ஏரியாக்களில் உள்ள திரையரங்கு உரிமையாளர்களுக்கு வந்து சேரவில்லை என கூறப்படுகிறது. இதுதான் 'பாயும் புலி' படத்துக்கு ரெட் போட காரணமாம்.
இது குறித்து வேந்தர் மூவிஸ் சிவாவிடம் கேட்ட போது, "'பாயும் புலி' படத்துக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ரெட் போட்டிருப்பது உண்மை தான். திரையரங்கு உரிமையாளர் சங்கச் செயலாளர் பன்னீர் செல்வம், வேந்தர் மூவிஸ் மதனுக்கு போன் செய்து உங்களது 'பாயும் புலி' படத்தை வெளியிட மாட்டோம் என்று மிரட்டுகிறார்.
என்ன காரணம் என்று கேட்டால், 'லிங்கா' விவகாரத்தில் இன்னும் பணம் வரவில்லை. எங்களால் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷைத் தொடர்பு கொள்ள இயலவில்லை. அதனால் நீங்கள் வாங்கி கொடுத்தால் மட்டுமே 'பாயும் புலி'யை வெளியிடுவோம் என்று சொல்கிறார்.
செங்கல்பட்டு, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட ஏரியாக்களில் ரெட் போட்டிருக்கிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. 'லிங்கா' விவகாரத்தில் எங்களுக்கே பெரும் நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது" என்றார் சிவா.
தயாரிப்பாளர் சங்கம் கண்டனம்
'பாயும் புலி' திரைப்படத்துக்கு தடை விதிப்பதாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் தன்னிச்சையாக அறிவித்துள்ளது. இது மிகவும் கண்டனத்திற்குரிய செயல் என்று தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில், '''லிங்கா' திரைப்படம் வட ஆற்காடு, தென் ஆற்காடு மற்றும் செங்கல்பட்டு ஏரியாவில் வெளியிட்டதில் ஏற்பட்ட நஷ்ட ஈட்டுத் தொகையை வேந்தர் மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பான 'பாயும் புலி' படத்தை வட ஆற்காடு, தென் ஆற்காடு மற்றும் செங்கல்பட்டு ஏரியாவில் வெளியிட தடைவிதித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் தன்னிச்சையாக அறிவித்துள்ளது. இது மிகவும் கண்டனத்திற்குரிய செயல் ஆகும்.
மேலும், இது தொடர்பாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு எந்தவித முன்னறிவிப்பும் தெரிவிக்கப்படவில்லை. 'லிங்கா' வில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு 'பாயும் புலி'க்கு தடைவிதிப்பது எந்தவிதத்திலும் தொழில் தர்மம் அல்ல.
எனவே, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் உடனடியாக 'பாயும் புலி' திரைப்படத்தின் மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும், அப்படி தடையை நீக்காத பட்சத்தில் ஜனநாயக முறைப்படி தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு இப்பிரச்சினை தொடர்பாக தெரிவித்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT