Published : 20 Aug 2015 03:14 PM
Last Updated : 20 Aug 2015 03:14 PM
'துருவ நட்சத்திரம்', 'யோஹான்' ஆகிய படங்களில் சூர்யா, விஜய் இருவருடன் நடந்த விஷயங்கள் என்ன என்று விவரித்துள்ளார் இயக்குநர் கெளதம் மேனன்.
பிரேம் சாய் இயக்கத்தில் நிதின் நடித்திருக்கும் 'கொரியர் பாய் கல்யாண்' படத்தை தயாரித்திருக்கிறார் இயக்குநர் கெளதம் மேனன். இப்படம் தமிழில் ஜெய் நடிக்க 'தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்' படம் தயாராகி வருகிறது.
'கொரியர் பாய் கல்யாண்' படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் ஈடுபட்டு வந்த கெளதம் மேனன் அளித்த வீடியோ பேட்டியில் 'துருவ நட்சத்திரம்', 'யோஹான்' ஆகிய படங்கள் கைவிடப்பட்டது ஏன் என்று கூறியிருக்கிறார்.
'துருவ நட்சத்திரம்', 'யோஹான்' குறித்து இயக்குநர் கெளதம் மேனன் கூறியிருப்பது "ஒருவர் என்னிடம் வந்து நாம் நண்பர்களாக இருக்க முடியாது. தொழில்முறையாக மட்டும் பேசிக்கொள்ளலாம் என்று சொன்னால் அதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் என்னை நண்பர் என்று சொல்லிவிட்டு என்னை புரிந்துகொள்ளமுடியவில்லை என்றால் அது எனக்கு கஷ்டமாக இருக்கும். அதனால் தான் சூர்யாவிடம் மனக்கசப்பு ஏற்பட்டது.
அவர் என்னிடமிருந்து 50-60 சதவீத கதையைக் கேட்டார். என்னுடன் ஏற்கெனவே 2 படங்கள் பணியாற்றியுள்ளார். நீ எப்படி செய்வாய் என எனக்கு தெரியும், நம்பிக்கை உள்ளது எனக் கூறியிருந்தால் சந்தோஷப்பட்டிருப்பேன். நிறைய கலந்து ஆலோசித்திருக்கலாம், என்ன செய்யலாம் எனப் பேசியிருக்கலாம். அது மகிழ்ச்சியாக இருந்திருக்கும். ஆனால் நண்பர் என்று சொன்னவர் சட்டென புரிந்து கொள்ள முடியாமல் போனது வருத்தமாக இருந்தது.
'யோஹான்' கைவிடப்பட்டது இப்படியல்ல. தனிப்பட்ட முறையில் விஜய்யுடன் எனக்கு பழக்கமில்லை. அவருக்கு என்னைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. படப்பிடிப்புக்கு 10 நாட்கள் முன்பு நான் கூறிய கதையைக் கேட்டு அவர் உறைந்து விட்டார். இந்தக் கதை நம்மூருக்கு அந்நியமாக இருக்கிறது என நினைத்தார். நம் மக்களுக்கான பிணைப்பு இல்லையென்று நினைத்தார். ஆனால் எனக்கு அந்த பிணைப்பு தேவைப்படவில்லை. அப்படித்தான் நான் எழுதியிருந்தேன். சர்வதேச தரத்தில் சண்டைக் காட்சிகளுடன், ஜேம்ஸ் பாண்ட் படத்தை போல ஒரு துப்பறியும் படம் எடுக்கதான் நினைத்தேன்.
கண்டிப்பாக உணர்வுப்பூர்வமான பிணைப்பு ரசிகர்களுக்கு வந்திருக்கும். இப்போது 'பாகுபலி'யை எல்லா மாநிலங்களிலும் பார்க்கிறார்கள். அது ஒரு வரலாற்றுப் படம், அது அந்நியமான களம் தான். ஆனால் உணர்வுப்பூர்வமாக மக்கள் அதை ரசிக்கிறார்கள். அப்படித்தான் யோஹானும் இருந்திருக்கும்.
கதைப்படி விஜய் வெளிநாட்டில் வாழ்பவர். அவரது அப்பா, தாத்தா எல்லோரும் இந்தியர்களாக இருந்தாலும் அயல்நாட்டுக்கு குடி பெயர்ந்தவர்கள். விஜய் சிஐஏ-வில் சேருகிறார். லாக்ராஸ் விளையாட்டு விளையாடுகிறார். ஃபாரீன் நாயகிகள் என அனைத்தும் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவர் விலகியதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அவருக்கு நான் வேலை செய்யும் விதம் பற்றி தெரியாது. என் படங்கள் அனைத்தையும் அவர் பாத்திருக்கிறாரா என்று கூட தெரியாது. எனவே அது புரிந்துகொள்ள முடிகிறது. அதையே சூர்யா செய்யும்போது அது என்னை பாதித்தது. ஏனென்றால் அவருக்கு நான் வேலை செய்யும் விதம் தெரியும்."
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT