Published : 17 Jul 2015 09:42 AM
Last Updated : 17 Jul 2015 09:42 AM

எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு மெல்லிசை மன்னர் பட்டம் வழங்கியது யார்?

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு ‘மெல்லிசை மன்னர்’ பட்டம் வழங்கியது யார், எப்போது, எங்கே என்பது குறித்து பலவிதமான செய்திகள் வெளியாகின்றன.

எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும், அவருடன் இணைந்து இசையமைப்பில் ஈடுபட்ட டி.கே.ராமமூர்த்திக்கும் சேர்த்தே ‘மெல்லிசை மன்னர்கள்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. இதுதொடர்பாக 1963-ம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி வெளியான ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் வெளிவந்த தகவல் இதோ:

‘தி இந்து’ மற்றும் ‘ஸ்போர்ட் & பாஸ்டைம்’ பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்த கஸ்தூரி சீனிவாசன் நினைவாக நூலகம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அந்த நூலகத்துக்கு நிதி திரட்டும் நல்ல நோக்கத்தில் பிரபல திரைப்படக் கலைஞர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. திருவல்லிக்கேணி கல்சுரல் அகாடமி ஆதரவில் என்.கே.டி. கலா மண்டபத்தில் 1963 ஜூன் 16 மாலை 6 மணிக்கு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தலைமை தாங்கினார். கவிஞர் கண்ணதாசன் முன்னிலை வகித்தார். ஜெமினி கணேசன், சாவித்திரி, ஏ.எல்.சீனிவாசன், இயக்குநர் ஸ்ரீதர், சித்ராலயா கோபு, சந்திரபாபு உட்பட பலர் கலந்துகொண்டு விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை இரட்டையர்களை பாராட்டிப் பேசினர். அப்போது இருவருக்கும் ‘மெல்லிசை மன்னர்கள்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. அதற்கு நன்றி தெரிவித்து எம்.எஸ்.விஸ்வநாதன் பேசினார். அந்த நிகழ்ச்சியில் 45 இசைக் கலைஞர்களைக் கொண்ட குழு 3 மணி நேரத்துக்கு அற்புதமான இசை விருந்து அளித்தது. பீ.பி.ஸ்ரீனிவாஸ், பி.சுசீலா, எஸ்.ஜானகி, எல்.ஆர்.ஈஸ்வரி, வீரமணி, சந்திரபாபு ஆகியோர் பாடினர். பின்னணி இசைக் கலைஞர்கள் வழங்கிய அந்த மெல்லிசை விருந்தில் 3,000 ரசிகர்கள் மூழ்கித் திளைத்தனர். குறிப்பாக ஸ்ரீனிவாஸ், சுசீலா, ஜானகி ஆகியோரின் பாடல்களை வெகுவாக ரசித்தனர்.

இசையமைப்பாளர்கள், பாடகர்களுக்கு லட்சுமி திருவுருவம் பொறித்த கேடயங்களை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நினைவுப் பரிசாக வழங்கி நன்றி தெரிவித்தனர். நிகழ்ச்சிக்கு வந்தவர்களை வரவேற்றும், நிகழ்ச்சி முடிந்த பிறகு நன்றி தெரிவித்தும் திருவல்லிக்கேணி கல்சுரல் அகாடமி துணைத் தலைவர் ஆர்.ரங்காச்சாரி பேசினார். இவ்வாறு ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x