Published : 14 Jul 2015 11:47 AM
Last Updated : 14 Jul 2015 11:47 AM
தமிழ் திரையுலகின் மெல்லிசை மன்னர் என்று அழைக்கப்படும் பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலர் நேரிலும், சமூக வலைத்தளங்களிலும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவுக்கு ஒய்.ஜி.மகேந்திரன் "மெல்லிசை மன்னருக்கு இறப்பில்லை. மெல்லிசையின் முடிவு. நான் பிறந்தது, வளர்ந்தது, சாக வேண்டும் என்று நினைக்கிறது அவருடைய இசையைக் கேட்டுக் கொண்டு தான். எனக்கு தெரிந்த ஒரே கம்போஸர் எம்.எஸ்.வி மட்டும் தான். சின்ன வயதில் இருந்தே அவருடைய பாடல்களைக் கேட்டு வளர்ந்தவன். அவருடைய காதல் பாட்டுக்களைக் கேட்டு வளர்ந்தவன். இனிமேல் மெலடி பாடல்களைப் போடுவதற்கு ஆளே கிடையாது.
நான் இந்தியனாக பிறந்ததற்கு பெருமைப்பட்டேன். இன்றைக்கு வெட்கப்படுகிறேன். இந்த மாதிரியான ஒரு மாமேதைக்கு தேசிய அங்கீகாரம் கொடுக்காதா இந்தியா ஒரு நாடா.. இப்படி ஒரு நாட்டில் வாழ்கிறோம் என்பது எனக்கு அவமானமாக இருக்கிறது. இவருக்கு கொடுக்காத அந்த விருதுக்கு இனிமேல் மதிப்பே கிடையாது.
இன்னிசை என்றால் என்ன என்று எல்லோருக்கு சொல்லிக் கொடுத்தவர் எம்.எஸ்.வி தான். இவர் போட்டுக் கொடுத்த பாதையில் மற்றவர்கள் வந்துக் கொண்டிருக்கிறார்கள். அவருடைய உடல் நம்மை விட்டு மறைந்தாலும், அவருடைய இசைக்கு என்றைக்குமே மறைவில்லை.
என்னுடைய இறுதி மூச்சு வரும் போது, சமஸ்கிருத் ஸோலகங்கள் எல்லாம் வேண்டியதில்லை. என்னுடைய உடலுக்கு அருகில் எம்.எஸ்.வி பாடல்கள் போடவும். இதை நான் என் உயிலில் எழுதி வைத்திருக்கிறேன்." என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT