Last Updated : 30 Jul, 2015 01:06 PM

 

Published : 30 Jul 2015 01:06 PM
Last Updated : 30 Jul 2015 01:06 PM

காமெடியனையும் முன்னிருத்தியவர் ஆர்யா: சந்தானம் புகழாரம்

தயாரிப்பாளர் ஆர்யாவுக்கு செலவு தான் ஆகி கொண்டிருக்கிறதே தவிர வரவு என்பதே இல்லை என நடிகர் சந்தானம் தெரிவித்தார்.

ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, சந்தானம், தமன்னா, பானு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க'. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஆர்யா நடித்து தயாரித்திருக்கும் இப்படம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக இருக்கிறது.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. தமன்னா மற்றும் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா தவிர மீதமுள்ள படக்குழுவினர் கலந்து கொண்டார்கள்.

இச்சந்திப்பில் சந்தானம் பேசும்போது, "'பாஸ் (எ) பாஸ்கரன்' படத்துக்கு முன்பு வரை காமெடியன் புகைப்படம் எல்லாம் படத்தின் விளம்பரங்களில் சிறிதாக தான் வரும். நாயகர்கள் புகைப்படம் தான் பெரிதாக வரும். இந்த முறையை உடைத்து இந்தி திரையுலகம் போல காமெடியன் புகைப்படத்தையும் நாயகன் அளவுக்கு போட்ட திரைப்படம் என்றால் 'பாஸ் (எ) பாஸ்கரன்' தான். அதற்கு சம்மதம் தெரிவித்தார் ஆர்யா.

ராஜேஷ் சாரின் படங்களில் எல்லாமே எனக்கு நாயகன் அளவுக்கு முக்கியமான வேடம் கொடுப்பார். தமிழ் திரையுலகில் காமெடியன் என்பவருக்கு என்று தனியாக ட்ராக் என்று பண்ணக் கூடாது, தனியாக கதை பண்ண வேண்டும் என ஒரு ட்ரெண்ட் செட் பண்ணியவர் இயக்குநர் ராஜேஷ். இரண்டாவது நாயகன் போல நடிக்கிறீர்கள்? ஏன் நாயகனாக பண்ணக் கூடாது என்றார்கள் உடனே 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்', 'இனிமே இப்படித் தான்' ஆகிய படங்கள் பண்ணினேன். இப்போது நாயகனாக 3 படங்கள் ஒப்பந்தமாகி இருக்கிறேன். இந்தளவுக்கு நான் வந்ததிற்கு காரணம் ராஜேஷ் என்று சொல்வேன். அவருடைய படங்களில் நான் உழைக்க கடமைப் பட்டிருக்கிறேன்.

எனக்கு ஆர்யாவுக்கு இருப்பது ஓர் உண்மையான நட்பு. கஷ்டப்பட்டு படம் எடுத்து வெளியிடுவது எவ்வளவு கஷ்டம் என்பது தெரியும். ஒரு தயாரிப்பாளராக ஆர்யா இப்படத்தை பண்ணி இருக்கிறார். இதுவரை அவனுடைய தயாரிப்பு நிறுவனத்தில் செலவு மட்டும் தான் போய் கொண்டிருக்கிறது. வரவு என்பது எதுவுமே இல்லை. இப்படத்தை உலகளவில் சொந்தமாக வெளியிடுகிறார். தயாரிப்பாளர் ஆர்யாவுக்கு அனைவருமே பெரும் ஆதரவு தர வேண்டும் என்பதை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இயக்குநர் ராஜேஷ் ஒரு ஐ-போன் மாதிரி தான். ஐ-போனில் 5, 6 என வந்துக் கொண்டே இருக்கும். 'பாஸ் (எ) பாஸ்கரன்' ஐ -போன் 4 என்றால் 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' ஐ - போன் 6 என சொல்வேன். அவருடைய அடுத்த படம் ஐ - போன் 7 ஆக இருக்கும். அது தான் அவருடைய ஸ்பெஷல்" என்று பேசினார் சந்தானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x