Last Updated : 09 Jul, 2015 01:26 PM

 

Published : 09 Jul 2015 01:26 PM
Last Updated : 09 Jul 2015 01:26 PM

வாலு ரிலீஸுக்கு எதிராக சதி: டி.ராஜேந்தர் கொந்தளிப்பு

'வாலு' படத்தை வெளிவராமல் தடுக்க சதி நடக்கிறது என்று அப்படத்தை வெளியிடும் டி.ராஜேந்தர் காட்டமாக தெரிவித்தார்.

விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'வாலு'. நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை ஜூலை 17ம் தேதி சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.

'வாலு' படத்துக்கு தடைக்கோரி மேஜிக் ரேஸ் நிறுவனம் சார்பில், உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அவ்வழக்கை விசாரித்த நீதிபதி, " 'வாலு' தயாரிப்பாளர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரினார். 13ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்த நீதிமன்றம், அதுவரை 'வாலு' திரைப்படம் வெளியிட தடை விதித்தும், தற்போதைய நிலையிலேயே நீடிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

இன்று காலை 'வாலு' படம் வெளியீடு தொடர்பாக டி.ராஜேந்தர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அச்சந்திப்பில் பேசியது, "'வாலு' படத்தை ஜூன் 19ம் தேதி முதல் விளம்பரப்படுத்தி முதலே இடதுபுறத்தில் நிக் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் பெயரையும், வலது புறத்தில் மேஜிக் ரேஸ் நிறுவனத்தின் பெயரையும், நடுவில் சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் பெயரையும் பயன்படுத்தி வருகிறேன்.

நான் இறைவின் மீது மிகவும் நாட்டம் உடையவன். இறைவனும் இப்படத்தின் மீது நாட்டம் வைத்திருந்தால் கண்டிப்பாக ஜூலை 17ம் தேதி 'வாலு' வெளிவரும். இவ்வளவு நாள் வழக்கு தொடராமல் படத்தின் வெளியீட்டு தேதி நெருங்கும் சமயத்தில் வழக்கு தொடர காரணம் என்ன? உரிமையை கொண்டாட நினைக்கிறார்களா அல்லது படத்தை நான் வெளியிடுவதை தடுக்க நினைக்கிறார்களா?. 'வாலு' படத்தை வெளிவராமல் தடுக்க சதி நடக்கிறது.

மேலும், நீதிமன்றத்தில் நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டது. உடனே இந்த வழக்கு இதே நிலையிலே நீடிக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார். அதனை சில பத்திரிகைகள் இடைக்கால தடை என்று வெளியிட்டு விட்டார்கள். நீதிமன்றம் எந்த ஒரு இடத்தில் படத்துக்கு இடைக்காலத் தடை என்று கூறவில்லை. தடை என்பது போன்ற செய்திகள் எனது மனதை மிகவும் காயப்படுத்தி இருக்கிறது. மீண்டும் 13-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது நீதிபதி என்ன தீர்ப்பு வழங்கினாலும் அதற்கு நான் தலை வணங்குகிறேன்.

'வாலு', 'வேட்டை மன்னன்' ஆகிய இரண்டு படங்களிலும் என் மகன் நடித்தான். இரண்டுமே பணப் பிரச்சினையில் சிக்கித் தவித்த போது, தயாரிப்பாளர் கஷ்டப்படக் கூடாது என்று 'வாலு' படத்தை முடித்துக் கொடுத்தான். அதற்கான உரிய சம்பளம் கூட என் மகன் வாங்கவில்லை.

ஒரு விழாவில் 'நான் சொத்துக்களை எல்லாம் இழந்துவிட்டேன்' என்று சிம்பு தெரிவித்தார். அவர் சம்பாதித்த சொத்துக்களைத் தான் இழந்திருக்கிறார். நானும், எனது மனைவியும் அவனுக்கு சொத்துக்கள் சேர்த்து வைத்திருக்கிறோம். அவை எல்லாவற்றையும் விட எனது குழந்தைகள் தான் எங்கள் இருவருக்கும் மிகப்பெரிய சொத்து.

3 வருடங்கள் கழித்து 'வாலு' படம் வருவதால், அவனுடைய ரசிகர்கள் பெரியளவில் வரவேற்பு கொடுக்க தயாராக இருக்கிறார்கள். இப்பிரச்சினையில் எனக்கு உறுதுணையாக இருந்து வரும் அனைவருக்கும் நன்றி" என்று பேசினார் டி.ஆர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x