Last Updated : 11 Jul, 2015 01:43 PM

 

Published : 11 Jul 2015 01:43 PM
Last Updated : 11 Jul 2015 01:43 PM

ஜிகர்தண்டா விவகாரம்: கார்த்திக் சுப்புராஜ் மீது மானநஷ்ட வழக்கு தொடர முடிவு

'ஜிகர்தண்டா' விவகாரம் தொடர்பாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மீது மானநஷ்ட ஈடு வழக்கு தொடர தயாரிப்பாளர் கதிரேசன் முடிவு செய்திருக்கிறார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ஜிகர்தண்டா'. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் வெளியான இப்படத்தை பைவ் ஸ்டார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது.

'ஜிகர்தண்டா' படத்தை தெலுங்கு மற்றும் இந்தி உரிமையை விற்கும் போது கார்த்திக் சுப்புராஜ் தடைக்கோரியதால் சிக்கல் நிலவி வந்தது. இவ்விவகாரம் தொடர்பாக ‘பைவ் ஸ்டார் பிலிம்ஸ்’ கலைச்செல்வி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அச்சந்திப்பில் அவர் பேசியது, "‘ஜிகர்தண்டா’ இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், அதன் தயாரிப்பாளர் கதிரேசன் மீது உயர் நீதிமன்றத்தில் திரைப்படத்தின் இந்தி மொழி உரிமையை தனக்கு தெரியாமல் தயாரிப்பாளர் விற்க முயற்சி செய்வதாகவும், திரைப்படத்தின் உரிமை தன் வசமே இருப்பதாகவும் அந்த வகையில் தனக்கு சேரவேண்டிய சம்பள பாக்கி மற்றும் நஷ்டஈடாக ரூ.40 லட்சம் கோரி வழக்கு செய்திருக்கிறார்.

இந்தி மொழி உள்பட வேறு மொழிமாற்று உரிமையையும் தயாரிப்பாளர் கதிரேசன் வேறு யாருக்கும் விற்கக்கூடாது என்று ஒரு தடை உத்தரவும் வாங்கியிருந்தார்.

இந்த தடை உத்தரவை எதிர்த்து தயாரிப்பாளர் கதிரேசன் எதிர் மனு தாக்கல் செய்தார். அதில் தடை உத்தரவை நீக்கக்கோரி கேட்டுக்கொண்டிருந்தார். ‘ஜிகர்தண்டா’ படம் பல கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டது.

வேண்டுமென்றே, டைரக்டர் படப்பிடிப்பினை தாமதப்படுத்திய வகையில் ஏறத்தாழ ரூ.1 கோடியே 36 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது.

மேலும், கார்த்திக் சுப்புராஜ் எங்கள் நிறுவனத்தின் மீது அவதூறாகவும், எங்களை இழிவுபடுத்தும் விதமாகவும் செய்திகள் பரப்பியதால் இன்றுவரை தெலுங்கு ‘டப்பிங்’ உரிமையை விற்க முடியவில்லை. அந்த வகையில் எங்கள் நிறுவனத்துக்கு சுமார் ரூ.4 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் எங்கள் நிறுவனத்தோடு செய்துகொண்ட ஒப்பந்தப்படி ‘ஜிகர்தண்டா’ படத்தின் கதை மற்றும் அனைத்து உரிமைகளையும் ஏற்கனவே எங்களுக்கு கொடுத்தாகி விட்டது. இப்போது வேண்டுமென்றே, தவறான தகவல்களை மையப்படுத்தி உண்மைக்கு புறம்பானவற்றை கூறி கோர்ட்டில் எங்கள் மீது வழக்கு தொடுத்து தடை உத்தரவும் பெற்றிருந்தார்.

மேற்படி தடை உத்தரவை சென்னை ஐகோர்ட்டு நீக்கி இருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் எங்கள் மீது மீண்டும், மீண்டும் தவறான தகவல்களை பரப்பி வருகிறார். அவர் மீது எங்கள் நிறுவனத்தின் சார்பாக ரூ.5 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர இருக்கிறோம். " என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x