Published : 22 Jul 2015 11:51 AM
Last Updated : 22 Jul 2015 11:51 AM
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திரைப்படத் தயாரிப்பாளர் அ.செ.இப்ராகிம் ராவுத்தர் நேற்று காலமானார். அவருக்கு வயது 63.
‘ராவுத்தர் பிலிம்ஸ்’ சார்பில் பல படங்களை தயாரித்தவர் இப்ராகிம் ராவுத்தர். உடல்நலம் பாதிப்பட்டு சிறுநீர கங்கள் மற்றும் கல்லீரல் செய லிழந்ததால் சில நாட்களுக்கு முன்பு சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அவருக்கு இதய பாதிப்பு இருந்ததாகவும் தொடர்ந்து ரத்த சுத்தகரிப்பு செய்து வந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை 10.50 மணிக்கு இப்ராகிம் ராவுத்தர் காலமானார்.
இப்ராகிம் ராவுத்தர் திருமணம் ஆகாதவர். தயாரிப்பாளர் சங்கத் தலை வராக இருந்தவர். அவரது உடல் வடபழனி 100 அடி சாலையில் உள்ள ராவுத்தர் பிலிம்ஸ் வளாகத்தில் திரைத் துறையினர், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் 1 மணிக்கு சாலிகிராமம் மசூதியில் அவரது உடல் அடக்கம் செய்யப் படுகிறது.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பால்ய நண்பரான இப்ராகிம் ராவுத்தர், அவரை வைத்து ‘உழவன் மகன்’ என்ற படத்தை முதலில் தயாரித்தார். தொடர்ந்து விஜயகாந்தை வைத்து ‘புலன் விசாரணை’, ‘கேப்டன் பிரபாகரன்’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்தார். கடைசியாக, சமீபத்தில் வெளியான ‘புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்’ என்ற படத்தை ராவுத்தர் தயாரித்தார். கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரிந்தனர். பின்னர் ராவுத்தர், அதிமுகவில் இணைந்தார்.
சில நாட்களுக்கு முன்பு ராவுத்தர் உடல்நிலை மோசமாக இருப் பதை அறிந்த விஜயகாந்த், மருத்துவமனைக்கு சென்று நண்பரைப் பார்த்து கண்கலங்கினார். ‘நண்பா, மீண்டு எழுந்து வா’ என உருக்கமான கடிதத்தையும் எழுதினார்.
இப்ராகிம் ராவுத்தர் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘அதிமுக நட்சத்திர பேச்சாளரும் திரைப்பட தயாரிப்பாளருமான அ.செ.இப்ராகிம் ராவுத்தர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். கட்சியின் கொள்கைகளையும், அரசின் சாதனைகளையும் எதிர்க்கட்சிகளின் பொய்ப் பிரச்சாரங்களையும் நாட்டு மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் எடுத்துரைத்தவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
சென்னை வடபழனியில் உள்ள ராவுத்தர் பிலிம்ஸ் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள இப்ராகிம் ராவுத்தர் உடலுக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் பா.வளர்மதி, கே.டி.ராஜேந்திர பாலாஜி, எஸ்.அப்துல் ரஹீம் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், நடிகர்கள் சத்யராஜ், அருண் பாண்டி யன், மன்சூர் அலிகான், இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர் கதிரேசன் உள்ளிட்ட திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.
நடிகர் சங்கம் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘திரைப்படக் கல்லூரியில் பயின்று வந்த இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்தவர் இப்ராகிம் ராவுத்தர். திரைப்பட தொழிலாளர்களுக்கு அதிகம் வேலை கொடுத்தவர். அவரது இழப்பு திரையுலகுக்கு பேரிழப்பு. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்’ என கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT