Published : 29 May 2014 09:26 AM
Last Updated : 29 May 2014 09:26 AM
வித்தியாசமான தலைப்புகளை படங்களுக்கு வைப்பது இப்போது கோலிவுட்டின் புதிய ஃபேஷன் ஆகிவிட்டது. இப்படி வித்தியாசமாக தலைப்பு வைக்கப்பட்ட படங்களில் ஒன்று ‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’. இப்படத்தை இயக்கும் ராம்பிரகாஷ் ராயப்பா, ‘எங்கேயும் எப்போதும்’ பட இயக்குநர் சரவணனிடம் உதவியாளராக இருந்தவர். படத்தைப் பற்றியும் அதன் தலைப்பைப் பற்றியும் அவரிடம் கேட்டோம்:
படத்துக்கு ஏன் ‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’ என்று தலைப்பு வைத்திருக் கிறீர்கள்?
ஒரு படம் பொதுமக்களிடம் நெருங்க வேண்டுமென்றால் அதன் தலைப்பு மிகவும் முக்கியம். அந்த தலைப்பு படத்தின் கதைக்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும். இதற்காக பல தலைப்புகளை எழுதிப் பார்த்தோம். செல்போன் சம்பந்தப்பட்ட கதை என்பதால் இந்தத் தலைப்பு மிகவும் பொருத்தமாக இருந்தது. கிராமமாக இருந்தாலும் நகரமாக இருந்தாலும் செல்போன் நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டால் ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’, ‘ஆங்கிலத்திற்கு எண் 2ஐ அழுத்தவும்’ என்றுதான் சொல்வார்கள். அதனால் இந்த தலைப்பு மக்களிடம் எளிதில் சேர்ந்துவிடும் என்பதால் இதை தலைப்பாக வைத்தேன்.
இந்த தலைப்புக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம்?
செல்போன் நம் வாழ்க்கையில் இன்றியமையாத விஷயமாகி விட்டது. சிறு குழந்தைகள்கூட இப்போது செல்போனை பயன்படுத்தி வருகிறார்கள். தொழில்நுட்பத்திற்கு நாம் எல்லோரும் அடிமையாகிவிட்டோம். ஒரு வேளை இதெல்லாம் இல்லாமல் போனால் என்ன ஆகும் என்பதை படத்தில் சொல்லியிருக்கிறேன்.
பூமியை நோக்கி வரும் காந்தப் புயலால் தகவல் தொழில்நுட்பம் முழுவதுமாக பாதிக்கப்படுகிறது. இதில் உள்ள முக்கிய கதாபாத்திரங்கள் பாதிக்கப்படுகிறார்கள். இந்த பாதிப்பில் இருந்து அனைவரும் எவ்வாறு மீண்டனர் என்பதே கதை. இந்தப் படத்தில் நகுல், தினேஷ், சதிஷ் ஆகிய மூன்று பேரையுமே நாயகர்கள் என்று சொல்லலாம்.. சதிஷை இதுவரைக்கும் காமெடியனாக மட்டும்தான் பார்த்துள்ளோம். இந்தப் படத்தில் அவரை ஒரு சிறந்த நடிகராக பார்க்கலாம்.
இந்தப் படத்தில் வீடுகள் வாங்கி விற்கும் பாத்திரத்தில் தினேஷ் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக பிந்து மாதவியும் நகுலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா தத்தாவும் நடிக்கிறார்கள்.
காந்தப் புயல் என்று அறிவியல் பூர்வமாக சொல்கிறீர்களே, இது ஏதாவது ஹாலிவுட் படத்தின் தழுவலா?
இல்லை. ஆனால் வித்தியாசமான கதைக்களத்துடன் ஹாலிவுட் தரத்தில் இப்படத்தை எடுத்துள்ளோம். இதுபோன்ற கதை இதுவரைக்கும் சொல்லப்படாத ஒரு விஷயம் தான். காந்தப் பேரழிவை நம்மளோட தினசரி வாழ்க்கையில் சம்பந்தப்படுத்தி படத்தை எடுத்துள்ளோம்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகை ஊர்வசியும் இப்படத்தில் நடிக்கிறாரே?
ஆமாம் நகுலின் அம்மாவாக ஊர்வசி நடிக்கி றார். பத்து பாத்திரம் தேய்த்து குடும்பத்தை காப்பாற்றும் பாத்திரம் அவருடையது. அப்படிப்பட்ட ஒரு அம்மா, அம்மா பேசும்போது கல்பனா சாவ்லா மாதிரி இருந்தால் எப்படி இருக்கும்? அதுபோன்ற ஒரு பாத்திரத்தை செய்திருக்கிறார். படத்தின் காமெடியிலும் அவருக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT