Last Updated : 04 May, 2014 09:31 AM

 

Published : 04 May 2014 09:31 AM
Last Updated : 04 May 2014 09:31 AM

ரஜினியின் ‘லிங்கா ஷூட்டிங்கிற்கு எதிர்ப்பு: கன்னட அமைப்பினரை சமாதானப்படுத்த அம்பரீஷ் முயற்சி

காவிரி விவகாரத்தில் தமிழகத் துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்தின் பட ஷூட்டிங்கை கர்நாடகாவில் நடத்தக்கூடாது என கன்னட அமைப்பினர் ராம்நகரில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஷூட்டிங்கை நிறுத்தாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டத்தில் குதிக்கப்போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படமான 'லிங்கா' படத்தின் பூஜை மைசூரில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அடுத்த 40 நாட்கள் மைசூர், மண்டியா, ராம்நகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளில் ஷூட்டிங் நடைபெற உள்ளது.

கன்னட தயாரிப்பாளரான ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கும் இந்த படப்பூஜையில் நடிகரும் கர்நாடக மாநில வீட்டுவசதித் துறை அமைச் சருமான அம்பரீஷ், அவரது மனைவியும் நடிகையுமான சுமலதா உள்ளிட்ட கன்னட திரையுலகை சேர்ந்த பலர் கலந்துகொண்டனர். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி பட ஷூட்டிங் கர்நாடகாவில் நடைபெறுவது மகிழ்ச்சியளிப்பதாக கன்னட திரையுலகினர் கூறியிருந்தன‌ர்.

ரஜினி காலில் விழுந்த சோனாக் ஷி சின்ஹா

மைசூர் அருகே 'லிங்கா' படத்தின் ஷூட்டிங் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்பதற்காக காலை 8 மணிக்கே ரஜினி வந்தார். அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை சோனாக் ஷி சின்ஹா நடிப்பதால் அவரும் வந்தார். அப்போது ரஜினியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து இருவரும் பங்கேற்கும் காட்சிகளை ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய கே.எஸ்.ரவிகுமார் இயக்கினார். ரஜினியின் பட ஷூட்டிங்கிற்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வண்ணம் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்

ரஜினி உருவ பொம்மை எரிப்பு

இந்நிலையில் கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கஸ்தூரி கர்நாடக ஜனபிரவேதிகே என்ற அமைப்பினர் ரஜினிக்கு எதிராக சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ரஜினிக்கு எதிராக கடுமையான கோஷங்களை எழுப்பியும் அவரின் உருவ பொம்மையை எரித்தும் தங்களுடைய எதிர்ப்பைக் காட்டினர்.

அந்த அமைப்பின் தலைவர் ரமேஷ் கவுடா பேசு கையில், “தன்னை கன்னடராக சொல்லிக்கொள்ளும் ரஜினி, இதுவரை கர்நாடக மக்களுக்காக ஒன்றுமே செய்ததில்லை. அவர் எங்களுக்கு நன்மை செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகாவையும் ஆறு கோடி கன்னடர்களையும் கடுமையாக‌ தாக்கி பேசியிருக்கிறார். அதுமட்டு மில்லாமல் காவிரி, ஒகேனேக்கல் விவகாரங்களின் போதெல்லாம் கர்நாடகாவிற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் கலந்துகொண்டு தமிழகத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கிறார்.

கன்னட மக்களுக்கும் கர்நாடகாவிற்கும் எதிராக கருத்து தெரிவித்த ரஜினியை கடுமையாகக் கண்டிக்கிறோம். அவர் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் மைசூர், மண்டியாவில் மட்டுமல்ல, கர்நாடகாவில் எங்கும் நடக்கக்கூடாது. மீறி நடத்தினால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவோம்'' என்றார்.

மாற்றப்படுமா ஷூட்டிங்?

கர்நாடகாவில் ரஜினி பட ஷூட்டிங்கிற்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்த போதும் மைசூர் அருகே சனிக்கிழமை ஷூட்டிங் தொடர்ந்து நடைபெற்றது. எக்காரணம் கொண்டும் ஷூட்டிங்கை கர்நாடகாவில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றும் எண்ணமில்லை என்கின்றனர் படக்குழுவினர்.

இதனிடையே கன்னட அமைப்பினரை சமாதானப் படுத்தும் முயற்சியில் ரஜினியின் நெருங்கிய நண்பரும் கர்நாடக மாநில வீட்டுவசதித் துறை அமைச்சருமான‌ அம்பரீஷ் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x