Published : 14 May 2014 10:15 AM
Last Updated : 14 May 2014 10:15 AM

கமல் தலைமையிலான குழு பிரான்ஸ் பயணம்: கேன்ஸ் திரைப்பட விழாவில் பேசுகிறார்

கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள நடிகர் கமல்ஹாசன் தலைமையில் இந்திய பிரதிநிதிகள் குழுவினர் செவ்வாய்க்கிழமை இரவு பிரான்ஸ் புறப்பட்டுச் சென்றனர்.

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் உலகப் புகழ்பெற்ற திரைப்பட விழா இன்று (புதன்கிழமை) தொடங்கி 25-ம் தேதி வரை நடக்கவுள்ளது. உலகின் பல நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் இந்த விழாவில் திரையிடப்படுகின்றன. இந்தியாவில் இருந்து ‘டிட்லி’ என்ற படம் மட்டும் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்திய தொழில் வர்த்தகக் கூட்டமைப்பின் (ஃபிக்கி) ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு பிரிவுத் தலைவராக பொறுப்பு வகிக்கும் நடிகர் கமல்ஹாசன், கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்பதற்காக இந்திய பிரதிநிதிகள் குழுவுடன் செவ்வாய்க் கிழமை இரவு பிரான்ஸுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

இதுகுறித்து ஃபிக்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘இந்தியாவில் தயாராகும் மொத்த திரைப்படங்களில் 60 சதவீதத்துக்கு மேல் தென்னிந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. இந்த சூழலில் பல்வேறு பெருமைகள் கொண்ட கமல்ஹாசன் இந்தியப் பிரதிநிதிகள் குழுவுக்குத் தலைமையேற்றுச் செல்வது மிகவும் சிறப்புக்குரியது’’ என்று கூறப்பட்டுள்ளது.

பிரான்ஸுக்குப் புறப்படும் முன்பு கமல்ஹாசன் கூறுகையில், ‘‘கேன்ஸ் திரைப்பட விழாவுக்குச் செல்லும் இந்தியப் பிரதிநிதிகள் குழுவுக்கு தலைமைப் பொறுப்பை ஏற்றுச் செல்வதை பெருமையாக கருதுகிறேன். அதே சமயம், இன்றைய இந்திய திரைப்படத் துறை குறித்து அந்த விழாவில் பேச எனக்கு கிடைத்த வாய்ப்புக்காக பெரு மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x