Published : 14 May 2014 12:12 PM
Last Updated : 14 May 2014 12:12 PM

குறும்படங்கள்தான் என்னை அடையாளம் காட்டியது: நடிகர் சிம்ஹா

நாடகத்தின் மூலமாக நடிகர்கள் சினிமா உலகில் நுழைந்து வெற்றிக்கொடி நாட்டியது அந்தக் காலம். இப்போது நாடகங்களின் எண்ணிக்கையும் மவுசும் குறைந்து வருவதால் அதற்கு வாய்ப்புகள் குறைந்துவிட்டது. இந்நிலையில் நாடக உலகின் இடத்தை குறும்படங்கள் பிடித்திருக்கிறது. பல குறும்படங்களில் நடித்து வெற்றி பெற்ற விஜய் சேதுபதி, சினிமா உலகில் இன்று முன்னணியில் இருப்பது இதற்கு ஒரு உதாரணம்.

அவரது வழியிலேயே குறும்படங்களில் நடித்து இன்று ‘உறுமீன்’ என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் சிம்ஹா. இப்படத்தில் நாயகனாக நடிப்பதற்கு முன்பே ‘சூது கவ்வும்’ படத்தில் குணச்சித்திர நடிகராகவும், ‘நேரம்’ படத்தில் வில்லனாகவும் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் இவர். சினிமா உலகில் படிப்படியாக ஹீரோ பாத்திரத்துக்கு முன்னேறி இருக்கும் அவரைச் சந்தித்தோம்.

நாயகனாக நடிக்கிற 'உறுமீன்' படத்தைப் பற்றிச் சொல்லுங்க..

'உறுமீன்' ஒரு த்ரில்லர் மற்றும் ஆக்‌ஷன் படம். நான் ரெண்டு விதமான கேரக்டர் பண்ணியிருக்கேன். மிடில் கிளாஸ் குடும்பத்துல பிறந்து வேலை தேடிக்கிட்டு இருக்கிற பையனா நடிச்சிருக்கேன். அந்த கேரக்டருக்கு வர்ற பிரச்சினையை அவன் எப்படி முடிக்கிறான் அப்படிங்கிறது தான் 'உறுமீன்'. ஒருத்தன் சுருங்கி இருக்கிறதுக்கும், வெடிக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கு. 1990ல நடந்த ஒரு உண்மை சம்பவத்தை வைத்து ஒரு வித்தியாசமான கதை பண்ணியிருக்கார் இயக்குநர் சக்தி.

நான் குறும்படம் பண்றப்பவே எனக்கு இயக்குநர் சக்தி ரொம்ப பழக்கம். நாம படம் பண்ணனும் அப்படினு உட்காந்து நிறைய கதைகள் பேசுவோம். இப்போ இணைந்து ஆரம்பிச்சுட்டோம்.

நீங்க நாயகனாக நடிச்சுட்டு இருக்கீங்க. ஆனா வில்லனா நடித்த 'ஜிகர்தண்டா' படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கே..

'ஜிகர்தண்டா'ல வில்லன் ரோல் 'சேது' அப்படிங்கிற கேரக்டர் பண்ணியிருக்கேன். படம் பாத்தீங்கன்னா ரொம்ப புதுசாயிருக்கும். நானும் அந்த படத்துக்காக தான் ரொம்ப ஆவலா காத்துக்கிட்டு இருக்கேன்.

நான் பயங்கரமா கஷ்டப்பட்டு, இஷ்டப்பட்டு நடிச்ச ரோல் அது. ஷுட்டிங்கிற்கு முன்னாடியே 3, 4 மாசம் டிரெயினிங் எல்லாம் பண்ணி நடிச்சிருக்கேன். உடம்பு தோல், மதுரை பாஷை, கேரக்டர் எப்படி பேசணும், 38 வயசு வேற.. இப்படி அந்த ரோலுக்காக நிறைய ஹோம் வொர்க் பண்ணியிருக்கேன். முழுக்க முழுக்க எனக்கு சொல்லிக் கொடுத்து, நான் சேதுவா மாறினதுக்கு காரணம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தான்.

கம்மியான படங்கள் நடிச்சு, உடனே நாயகனா ஆயிட்டீங்களே?

கம்மினு சொல்ல மாட்டேன். 2005ல இருந்து உழைச்சுக்கிட்டே இருக்கேன். நிறைய வாய்ப்புகள் தேடுறது, தயாரிப்பு நிறுவனங்கள்ல ஏறி புகைப்படங்கள் கொடுக்கிறதுனு முயற்சி பண்ணிட்டு தான் இருந்தேன். நிறைய பெரிய இயக்குநர்கள் எனக்கு நண்பர்களா இருந்தாங்க. அவங்க எல்லாருமே என்னை நண்பரா தான் பார்த்தாங்க, ஒரு நடிகரா பார்க்கல. ஒரு நண்பரா இருக்கலாம், ஆனால் கேமிரா முன்னாடி கொண்டு வந்தா நடிப்பானா, நடிக்க மாட்டானா அப்படினு பயந்தாங்க. அதை உடைச்சது குறும்படங்கள் தான்.

ஒவ்வொரு குறும்படம் பண்ணும் போதும், ஒவ்வொரு லுக் வைச்சிருப்பேன். அதுல நல்ல நடிக்கிறான் அப்படிங்கிற நம்பிக்கை அவங்களுக்கு வந்துச்சு. இப்போ என்னை நம்பி படத்துக்கு நாயகன் வேஷம் தர்றாங்கன்னா அதுக்கு குறும்படங்கள் தான் காரணம்.

குறும்படங்களுக்கும், வெள்ளித்திரை படங்களுக்கும் என்ன வித்தியாசம் பாக்குறீங்க?

நான் வித்தியாசம் எதையுமே பார்க்கல. கதை கம்மி, நேரம் கம்மி மற்றபடி நான் குறும்படங்கள்ல என்ன பண்ணினேனோ அதையே தான் வெள்ளித்திரை படங்களிலும் பண்ணிட்டு இருக்கேன். வெள்ளித்திரை படங்களைப் பொறுத்தவரை நாட்கள் அதிகம். மற்றபடி, அதே பொறுப்போடு தான் நடிச்சிட்டு இருக்கேன்.

Dark Humour படங்கள் தான் சிம்ஹாவுக்கு பெஸ்ட் சொல்றாங்க?

அப்படியில்ல, நான் பண்ணது 4 படம் தான். இப்போ வரப்போற படங்கள் பாத்தீங்கன்னா அப்படி இருக்காது. Dark Humour அப்படிங்கிறது நலனோட கதை. 'பீட்சா', 'நேரம்' இப்படி வித்தியாசமான படங்கள் தான் பண்ணியிருக்கேன். 'உறுமீன்' படத்துல நீங்க என்னை வித்தியாச ரோல்ல பார்க்கலாம்.

நடிக்க போறேன்னு சொன்னப்போ உங்க வீட்டுல என்ன சொன்னாங்க?

எங்க வீட்டுல முதல்ல தெரியாது. சென்னை போய் வேலை பார்க்க போறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன். இல்ல டிகிரி முடிச்சிட்டு உன்னோட வாழ்க்கையை நீ பாத்துக்கோ அப்படினு சொல்லிட்டாங்க. BCA படிச்சிட்டு சென்னை வந்து வேலை கிடைச்சிடுச்சுனு பொய் சொல்லிட்டே இருந்தேன். 4 வருஷம் கழிச்சு தான் அவங்களுக்கு நாளைய இயக்குநர் மூலமா தெரிந்தது. டிவில நான் நடிச்ச குறும்படங்கள் எல்லாம் பாத்தாங்க. இதுவரைக்கும் நான் என்ன பண்றேன், அப்படிங்கிற எந்த ஒரு விஷயமும் வீட்டுக்கு முழுசா தெரியாது. நடிப்புல ஆசையா, ஏதோ பண்ணிட்டு இருக்கான்னு மட்டும் தெரியும்.

உங்களோட படங்கள் எல்லாம் பாத்துட்டு, வீட்டுல எதும் பாராட்டி இருக்காங்களா?

எங்கப்பா வந்து 'சூது கவ்வும்' பாத்துட்டாரு. 'நேரம்' பார்க்கல. இப்போ கொடைக்கானல் வீட்டுக்கு போனப்போ, எங்கப்பா "'நேரம்' அப்படிங்கிற படம் நடிச்சியாமே. நல்லா நடிச்சியாம். நிறைய பேரு சொன்னாங்க. சி.டி இருந்தா கொடு"னு கேட்டார். அப்புறம் இதே மாதிரி சின்ன சின்ன கேரக்டர் பண்ணி வாழ்க்கைல முன்னேறு, ஹீரோ எல்லாம் பண்ணாதே. மாட்டிக்குவ அப்படினு சொன்னார். உடனே எங்கம்மா "ஏன் பண்ணக்கூடாது. என் பையன் ஹீரோவாவும் பண்ணுவான்"னு சொன்னாங்க. அவங்களோட ரியாக்‌ஷன் இப்படி தான் இருந்தது. அடுத்து அடுத்து படங்கள் பாக்குறப்போ கண்டிப்பா மாறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x