Published : 19 Apr 2015 04:44 PM
Last Updated : 19 Apr 2015 04:44 PM

டண் டணக்கா விவகாரம்: ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு டி.ஆர் நோட்டீஸ்

ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு இசையமைப்பாளர் இமான், அனிருத், தயாரிப்பாளர் நந்தகோபால், பாடலாசிரியர் ரோகேஷ் ஆகியோருக்கு டி.ராஜேந்தர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அறிமுக இயக்குநர் லட்சுமணன் இயக்கத்தில் ஜெயம் ரவி, ஹன்சிகா, பூனம் பாஜ்வா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'ரோமியோ ஜுலியட்'. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்துக்காக 'டன் டணக்கா' என்ற பாடலை அனிருத் பாடியிருக்கிறார். அப்பாடலை ரோகேஷ் எழுதியிருக்கிறார்.

ஏற்கனவே இப்பாடலுக்கு டி.ராஜேந்தர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். தற்போது படத்தின் தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் ஆகியோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். அதில் கூறியிருப்பது:

"சென்னையைச் சேர்ந்த நந்தகோபால் என்பவர் தயாரிக்கும் படம் 'ரோமியோ ஜூலியட்'. படத்தின் இயக்குனர் லட்சுமணன். இசையமைப்பாளர் டி. இமான். இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு பாடல்-‘டண் டணக்கா… ணக்கா… ணக்கா’ என்று ஆரம்பமாகிறது. இந்தப் பாடலில் டி.ராஜேந்தரின் ஒரிஜினல் குரலை காப்பியடித்து, ‘இமிடேட்’ செய்து பாடியிருக்கிறார்.

பாடலின் பின்னணியில் டி.ராஜேந்தர் பேசும் வசனம் அவர் குரலிலேயே ஒலிக்கிறது. இதன் மூலம் என் கட்சிக்காரரின் பெயரை துஷ்பிரயோகம் செய்திருக்கிறார்கள். கட்சிக்காரரிடமிருந்து முறையான அனுமதி இல்லாமலும் அவர் பேசும் வசனத்தை, பின்னணியில் ஒலிக்கச் செய்திருக்கிறார்கள்.

இது, பல ஆண்டுகளாக பல்வேறு படங்களில் நடித்து தனக்கென்று ஒரு தனிநடை ஸ்டைலை வைத்திருக்கும் என் கட்சிக்காரரின் தனி நபர் உரிமையையும், ‘காபிரைட்’ உரிமையையும் இதன் மூலம் மீறியிருக்கிறீர்கள் என்று டி.ராஜேந்தர் சார்பில் வாரான் அண்ட் சாய்ராம்ஸ் நிறுவனம் (வழக்கறிஞர்கள் தியாகேஸ்வரன், ராமகிருஷ்ணன்) வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

இதே பாட்டும், பதிவு செய்யப்படும் காட்சிகளும் ‘யூ ட்யூப்’ தளத்திலும், சாட்டிலைட் சானலிலும் வெளியிடப்பட்டுள்ளது (ஆடியோ_வீடியோ வடிவில்). படம் திரையிடப்படுவதற்கு முன்னால் இப்படி ஒரு வெளியீடு ‘பெருமைக்குரிய’ என் கட்சிக்காரரின் பெயரை துஷ்பிரயோகம் செய்யும் நோக்கத்தோடே அமைந்திருப்பதாகத் தெரிகிறது.

இந்நிலையில், இந்தச் செயலுக்காக, சட்டத்துக்குப் புறம்பாக என் கட்சிக்காரரின் முறையான அனுமதியில்லாமல் அவர் பெயரையும், இமேஜையும், அவரது தனிப்பாணி உச்சரிப்பு வசனத்தையும் பயன்படுத்தியிருப்பதற்காக ரூ.1 கோடி நஷ்டஈடு தர வேண்டும்.

மேலும் யூ ட்யூப், சாட்டிலைட் சானல் உள்பட எந்த ஒரு ஊடகத்திலும், எந்த ஒரு தளத்திலும் வெளியிடுவதை உடனே நிறுத்த வேண்டும். அதோடு வழக்கு செலவினங்களுக்காக ரூ.1000 தர வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x