Published : 08 May 2014 10:52 AM
Last Updated : 08 May 2014 10:52 AM
‘ஜெய்ஹிந்த் -2’ படத்தின் இறுதிக்கட்ட வேலைகளுக்காக பம்பரமாய் சுற்றி வருகிறார் அர்ஜூன். கதை, திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு, நடிப்பு என்று படத்தின் முக்கியமான பொறுப்புகள் அனைத்தையும் சுமந்திருப்பதால் ஓய்வில்லாமல் உழைத்து வருகிறார்.
படத்தின் டூயட் மற்றும் சண்டை காட்சிகளை ஐரோப்பிய நாடுகளில் படமாக்கி சென்னை திரும்பியவரை ‘தி இந்து’வுக்காக சந்தித்தோம்.
தேசப்பற்றுள்ள கதைகளையும் உங்களையும் பிரிக்க முடியாதுபோல் இருக்கிறதே?
இந்தப் படமும் தேசப்பற்றை சொல்லும் படம்தான். ஆனால் கதை செல்லும் பாதையை வித்தியாசப்படுத்தி இருக்கிறேன். திரைக்கதை வேறு வேறு கிளைகளைத் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். நாட்டுப்பற்றோடு, இங்கே கல்வி முறைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றியும் கொஞ்சம் தொட்டிருக்கிறேன். அதே நேரத்தில் இப்படத்தில் காவல்துறை அதிகாரியாகவோ, ஐ.ஏ.எஸ் அதிகாரியா கவோ நான் நடிக்கவில்லை. ஒரு சாதாரண பொது மனிதனாகவே நடிக்கிறேன்.
‘ஜெய்ஹிந்த் 2’ படத்தின் படப்பிடிப்பு எந்த அளவில் இருக்கிறது?
இன்னும் பாடல் காட்சிகளை மட்டும் ஷூட் செய்ய வேண்டும். சில பாடல்களை ஐரோப்பிய கண்டத்திலும், சிங்கப்பூரிலும் படமாக்கி வந்திருக்கிறோம். படத்தில் 4 பாடல்கள் இருக்கிறது. அதில் 3 பாடல் காட்சிகளை படமாக்கி இருக்கிறோம். பாடல்களுக்கு அர்ஜூன் ஜெனியா என்கிற புதிய இசையமைப்பாளர் இசை அமைத்துள்ளார். பாடல்கள் வெளிவந்த தும் அவர் நிச்சயம் கவனிக்கப்படும் இளைஞராக மாறுவார். இதுவரை நான் எடுத்த படங்களிலேயே அதிக பொருட்செலவில் எடுக்கும் படம் இதுவாகத்தான் இருக்கும். 3 மொழிகளில் இப்படத்தை எடுத்துவருவதால் நேரமும் பணமும் அதிகம் தேவைப்படுகிறது.
மனிரத்னம், ஷங்கர் போன்ற சிறந்த இயக்குநர்களுடன் பணிபுரிந்தவர் நீங்கள்? அவர்களிடம் நடிக்கும்போது கற்றுக்கொண்ட விஷயங்கள் என்ன?
100க்கும் மேற்பட்ட படங்களில் நான் நடித்துவிட்டேன். ஒவ்வொரு இயக்குநரிடம் இருந்தும் ஏதாவது ஒரு விஷயத்தைக் கற்றிருக்கிறேன். சிலரை பார்த்து நாம் எதையெல்லாம் செய்யக்கூடாது என்பதையும் கற்றிருக்கிறேன். மணிரத்னம், ஷங்கர் போன்றவர்கள் வெறிமிகுந்த ஈடுபாடு கொண்ட மனிதர்கள். ‘அடடே’ என்று ஆச்சர்யப்பட வைக்கும் நிறைய விஷயங்களை கண்முன்னே வைப்பார்கள். சினிமாவை ரொம்பவே ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுபவன், நான். அதை இவர்கள் இருவரிடமும் நிறையவே பார்க்கிறேன்.
இப்போது வரும் இளம் இயக்குநர்கள் எப்படி இருக்கிறார்கள்?
புதியவர்கள் சினிமாவை விதவிதமான வடிவங்களில் கொண்டு வருகிறார்கள். அவர்களை நாம் வரவேற்க வேண்டும். குறிப்பாக இந்த இளம் கலைஞர்கள் நல்ல பயிற்சியோடு வருகிறார்கள். சினிமாவில் தெளிவாக இயங்க பயிற்சிதான் அவசியம். இப்போது வருபவர்களிடம் அது நிறையவே இருக்கிறது.
அப்படியென்றால் பயிற்சி இல்லாமல் சினிமாவில் பயணிக்க முடியாதா?
என் நெருங்கிய நண்பன் ஒருத்தன் சதா சர்வ நேரமும் காமெடியாக பேசி வயிறு குலுங்க சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பவன். இவ்வளவு அழகாக பேசுகிறானே என்று கேமராவிற்கு முன் நிற்க வைத்தேன். கப்சிப் என்று சீரியஸாகி விட்டான். ‘ஸ்பீட்’ என்ற ஒரு படம் வந்தது. முழுக்க ஆக் ஷன் படம். அந்த படத்தை 52 நாட்களில் படமாக்கினார்கள். அவங்களின் திட்டமிடலும் பயிற்சியும்தான் இதற்கு காரணம். நல்ல பயிற்சியோடு களத்தில் இறங்கினால் நல்ல படைப்புகளை கொடுக்க முடியும்.
நாயகனாக நடித்துவரும் நீங்கள்‘மங்காத்தா’, ‘கடல்’ மாதிரியான படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நடிக்கிறீர்களே?
‘குருதிப்புனல்’ போன்ற இரட்டை நாயகர்கள் படத்தில் நடித்தவன் தான் நான்.வெங்கட்பிரபு என் நண்பன். அஜித்தும், ‘இது நல்ல கேரக்டர். நீங்க செய்தா நல்லா இருக்கும். உங்களுக்கு பிடித்தா மட்டும் நடிங்க’ என்றார். ‘மங்காத்தா’ படத்தில் நடித்தேன்.
வட இந்திய நாயகிகளையே தொடர்ந்து உங்கள் படங்களில் நடிக்க வைக்கிறீர்களே?
நாயகிகள் தேர்வு என்று ஆடிஷன் வைக்கும்போது மும்பை, டெல்லி உள்ளிட்ட பகுதியில் இருந்து வரும் மாடலிங் பெண்கள் எல்லோரும் நல்ல பயிற்சியோடு வருகிறார்கள். ஆடிஷனுக்கு வரும்போது 6 மாதம் நடிப்பு பயிற்சி, சண்டை பயிற்சி, நடனப்பயிற்சி என்று ஒரு முழுமையாக குறிப்பேட்டை முன் வைக்கிறார்கள். ஒரு காட்சியை அவர்களே கற்பனை சக்தியோடு உருவாக்கி நடித்து காட்டுகிறார்கள். அவர்களை வைத்து படம் எடுக்கும்போது எளிதாக இருக்கிறது. அதனால்தான் ‘ஜெய்ஹிந்த் 2’ படத்திலும் சுர்வீன் சாவ்லா, சிம்ரம் கபூர் ஆகிய இரண்டு வட இந்திய நாயகிகள் நடிக்கிறார்கள்.
சென்னையில் நீங்கள் காட்டி வரும் ஆஞ்சநேயர் கோயிலின் பணிகள் எந்த அளவில் இருக்கிறது?
அது என் கனவுக் கோயில். அந்த கோயிலில் என் பங்கும் இருக்க வேண்டும் என்று சில செ.மீ அளவுள்ள ஒரு குட்டி ஆஞ்சநேயரை நானே செதுக்கியிருக்கிறேன்.
மிக பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் ஆஞ்சநேயர் உருவத்தின் பாதத்தின் அடிப்பகுதியில் அந்த குட்டி ஆஞ்சநேயர் உருவத்தை செதுக்கியிருக்கிறேன். இந்த ஆண்டு இறுதிக்குள் கோயில் வேலைகள் முடிந்துவிடும்.
உங்கள் மகள் ஐஸ்வர்யாவின் அடுத்த படம்?
‘ஜெய்ஹிந்த் - 2’ படத்தை அடுத்து நான் இயக்கி தயாரிக்கும் படத்தில் என் மகள் ஐஸ்வர்யாதான் நாயகி. அந்த படத்தில் ஒரு புதுமுகம் அல்லது தற்போது உள்ள இளம் நாயகர்களில் ஒருவரை ஹீரோவாக்க திட்டமிட்டுள்ளேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT