Published : 22 Apr 2014 12:47 PM
Last Updated : 22 Apr 2014 12:47 PM
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு தனது 'கோச்சடையான்' படத்தை சிறப்புக் காட்சியாக திரையிட்டு காட்ட ரஜினி திட்டமிட்டுள்ளார்.
தனது மகள் செளந்தர்யா இயக்கத்தில், ரஜினி நடிப்பில் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கும் படம் 'கோச்சடையான்'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கும் இப்படத்தினை மீடியா ஒன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஈராஸ் நிறுவனம் மே-9ம் தேதி வெளியிட இருக்கிறது.
மே 9ம் தேதி வெளியாக இருக்கும் 'கோச்சடையான்' படத்தினை, பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு தனியாக திரையிட்டு காட்ட ரஜினி முடிவு செய்திருக்கிறார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் உறுதி செய்தன.
சென்னை பிரச்சாரத்திற்கு வந்திருந்த நரேந்திர மோடி, தனது நண்பரான ரஜினிகாந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
இந்நிலையில் 'கோச்சடையான்' படத்தினைப் பார்க்க மோடி விரும்பியதாகவும், அதற்கு ரஜினி சம்மதம் தெரிவித்து இருக்கிறாராம். இதற்கான பணிகளை முடக்கி விட்டுள்ளாராம் ரஜினி.
குஜராத்தில் மோடியின் இடத்தில் நடைபெற இருக்கும் திரையிடலில், ரஜினி கலந்து கொள்ளாமல் இயக்குநர் மற்றும் மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் மட்டும் கலந்து கொள்ள இருக்கிறார். அதுமட்டுமன்றி சென்னையில் நடைபெற இருந்த 'கோச்சடையான்' ப்ரிமீயர் கைவிடப்பட்டுள்ளது. மும்பையில் மட்டும் மே 8ம் தேதி ப்ரிமீயர் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.
சென்னையில் ப்ரீமியர் நடைபெற்றால், ரசிகர்களின் கட்டுக் கடங்காத கூட்டம் இருக்கும் என்பதால் கைவிட்டு இருக்கிறார்கள்.
மோடிக்கு சிறப்புக் காட்சி தொடர்பான வெளியான தகவல் ஒன்றை, 'கோச்சடையான்' படத்தின் அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் தளத்தில் பகிர்ந்து இருப்பதும் கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT