Last Updated : 16 Nov, 2014 03:38 PM

 

Published : 16 Nov 2014 03:38 PM
Last Updated : 16 Nov 2014 03:38 PM

பயமில்லை... தயக்கம்தான்: அரசியலில் நுழைவது பற்றி ரஜினி பேச்சு

தனக்கும் அரசியல் பற்றி தெரியும் என்ற நடிகர் ரஜினிகாந்த், அரசியலை நினைத்து தாம் பயப்படவில்லை என்றும், அதன் ஆழம்தான் தயக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் கூறினார்.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, அனுஷ்கா, சோனாக்‌ஷி சின்ஹா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'லிங்கா' இசை வெளியீட்டு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தவிர ஒட்டுமொத்த படக்குழுவும் கலந்து கொண்டார்கள். தமிழ், தெலுங்கு இசையினை வெளியிட்டு ரஜினிகாந்த் பேசியது:

"உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருக்கும்போது, நான் பழைய மாதிரி நடிக்க முடியுமா என்று ஏங்கியது உண்டு. அது முடியாது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதற்கு பிறகு இரண்டரை வருடங்கள் உடம்பு சரியில்லை. நடிப்பதற்கு எல்லாம் வாய்ப்பே இல்லை. அப்புறம் தான் 'கோச்சடையான்' நடிச்சேன். அது முற்றிலுமே வேறு மாதிரியான படம். அந்த ஜானர் யாருக்குமே தெரியாது. அப்படத்தோட முழுச்சுமையையும் செளந்தர்யா மீது வந்தது. பாவம் அந்த பெண் மீது அவ்வளவு பெரிய மலையை வைத்து, கஷ்டப்படுத்தியது நான் தான். இராஸ் நிறுவனம், முரளி மனோகர் மாதிரியான் ஆட்கள் இருந்ததால் மட்டுமே அந்த படம் வெளியே வந்தது.

'கோச்சடையான்' மூலமாக கொஞ்சம் பணத்தை இழந்தால்கூட, செளந்தர்யாவிற்கு மிகப் பெரிய அனுபவம் கிடைத்தது. இனிமேல் வந்து அவங்க பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நான் சம்பாதித்த பணத்தை வேஸ்ட் பண்ணாமல் இருந்தாலே போதும். இனிமேல் ஜனங்க என்ன, திரையுலகம் என்ன, நேரம் என்றால் என்ன என எல்லாத்தையும் 'கோச்சடையான்' கற்றுக் கொடுத்திருக்கிறது. அந்தப் படத்தை ரிலீஸ் பண்ணாமல், மற்றொரு படத்தை பண்ண மனசு வரவில்லை. நிறைய கதை கேட்டிருந்தாலும், எதுவுமே தலைக்குள் போகவே இல்லை. முதல்ல 'கோச்சடையான்' வெளியாக வேண்டும் என்று இருந்தேன்.

ஏதாவது ஒரு பிரச்சினை வந்தால், உடனே எந்த பிரச்சினையை முடித்துவிட வேண்டும். இல்லை என்றால் அந்த பிரச்சினை பெரிய பிரச்சினையாகி விடும். எவ்வளவு பெரிய பிரச்சினை இருந்தாலும், அதை உடனே முடித்துவிட வேண்டும். 'கோச்சடையான்' வெளியான பிறகு பார்த்த 20 பேர்களில் 10 பேராவது என்கிட்ட "என்ன சார், கடைசியிலாவது ஒரு சீன் வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்" என்று சொன்னார்கள். ஆரம்பித்திலாவது ஒரு ப்ரேமிலாவது வருவீங்கன்னு எதிர்பார்த்தேன் என்று சொன்னார்கள். நீங்க இப்போ எப்படி இருக்கீங்கன்னு பார்க்க ஆசைப்பட்டோம் என்று சொல்லவும், உடனே ஒரு படம் ஆரம்பிக்கணும் என்று திட்டமிட்டேன்.

படம் ஆரம்பிக்கணும் என்று சொன்னவுடனே ஆரம்பித்துவிட முடியாது. அரசியல் ஆசை இருந்தால் உடனே வந்துவிட முடியாது. மக்கள் எதிர்பார்க்கிற மாதிரி பண்ணனும் இல்லயா.. அது எவ்வளவு பெரிய கஷ்டம். அப்போ தான் கே.எஸ்.ரவிக்குமார் "சார்.. ஒரு கதை இருக்கு. என்னுடைய உதவி இயக்குநர் பொன். குமரன் ஒரு கதை வைச்சிருக்கார். சரியா இருக்கும். கேட்குறீங்களா" என்றார். சரி சார் கேட்குறேன் என்றேன். நான் சொல்ல மாட்டேன், பொன்.குமரனே சொல்லுவார் என்று சொல்லி அனுப்பி வைத்தார். கேட்டேன், பிடித்திருந்தது.

நிறைய கேப் விழுந்துவிட்டது, இந்த படத்தை பண்ண வேண்டும் என்றால் மூன்று வருஷமாகும். 6 மாதத்தில் செய்ய முடியுமா என்றால், அதை செய்யக் கூடிய ஒரே நபர் கே.எஸ்.ரவிக்குமார் தான். இதை ஷங்கர் சாரே ஒத்துக் கொள்வார். உடனே "சார். இதை நான் பண்றேன். மே மாதத்தில் ஆரம்பிக்கிறோம். 6 மாதத்தில் முடித்து, தீபாவளிக்கு ரிலீஸ் பண்ண முடியுமா?" என்று கே.எஸ்.ரவிகுமாரிடம் கேட்டேன். குடும்பக் கதையோ, எமோஷனல் கதையோ கிடையாது, ப்ரீயட் படம். பெரிய பெரிய செட் எல்லாம் இருக்குது. எனக்கு ஒரு ரெண்டு நாள் கொடுங்க என்றார். கே.எஸ்.ரவிக்குமாரோ சுதீப்பை வைத்து படம் பண்ணுவதாக கூறியிருந்தார். அந்த நேரத்தில் அவரிடம் பேசி சம்மதம் வாங்கிவிட்டு வந்தார். உடனே யார் தயாரிப்பாளர் என்று யோசித்தோம்.

ராக்லைன் வெங்கடேஷைப் பற்றி எல்லாருக்குமே தெரியும். கர்நாடகாவில் அவர் ஆபத்பாந்தவன் மாதிரி. எதையுமே எதிர்ப்பார்க்காமல் என்ன பிரச்சினை என்றாலும் போய் நிற்பார். எனக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார் எதையும் எதிர்ப்பார்க்காமல். நான் என்றைக்குமே நன்றியை மறக்க மாட்டேன். அவரை கூப்பிட்டு இந்த படத்தை நீங்க தயாரிக்க முடியுமா. ஆறு மாசம் தான் டைம் என்றேன். நீங்க தேதிகள் கொடுத்தால் போதும் சார். நான் பண்றேன் என்றார்.

அப்போது கே.எஸ்.ரவிக்குமார் "சார்.. நீங்க எனக்கு ஒரு கண்டிஷன் போட்டீங்க. எனக்கு ஒரு கண்டிஷன் இருக்கு. ஏ.ஆர்.ரஹ்மான் இசை, வைரமுத்து பாடல்கள், ரத்னவேலு கேமிரா, சாபுசிரில் செட்" என்றார். அதெல்லாம் உங்க டிபார்ட்மெண்ட் சார். இதில் எல்லாம் நான் தலையிட மாட்டேன் என்றேன். அப்போது ஆரம்பித்தது இந்தப் படம். 10:30 மணிக்கு தான் முதல் ஷாட், மதியம் 3:30 மணி வரை ரெஸ்ட் என என்னை குழந்தை மாதிரி பார்த்துக் கொண்டார்கள். எப்போதுமே என்னைப் பார்த்துக் கொள்ள சுற்றி ஒரு 30 பேர் இருப்பார்கள். அவங்க காட்டிய அன்புக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை. இந்தப் படத்திற்காக நிறைய பெர்மிஷன் கிடைக்காத இடங்களில் எல்லாம், பெர்மிஷன் வாங்கி படமாக்கி இருக்கிறார்கள்.

இவ்வளவு பெரிய பட்ஜெட், பெரிய டெக்னிஷியன்கள் எல்லாம் வைத்து கே.எஸ்.ரவிக்குமாரால் மட்டுமே முடியும். டிசம்பர் 12ம் தேதி வெளியிடுவதற்கு எல்லா வேலைகள் நடந்துக் கொண்டு இருக்கிறது.

அரசியல் தெரியும்...

அமீர், சேரன், விஜயகுமார், வைரமுத்து எல்லாம் அரசியல் பற்றி பேசினார்கள். ரஜினியோடு நெருங்கி பழகி இருக்கிறேன். அவருடைய பற்றி எனக்கே தெரியாது என்று வைரமுத்து கூறினார். என்னைப் பற்றி எனக்கே தெரியாது. சூழ்நிலை தான் என்னை இங்கு கொண்டு வந்து வைத்திருக்கிறது. நாளைக்கும் ஒரு சூழ்நிலை தான் தீர்மானிக்கும். அரசியல் பற்றி கொஞ்சம் எனக்கு தெரியும். எவ்வளவு ஆழம், ஆபத்து என்று தெரியும். யார் யார் தோள் மீது எல்லாம் மிதித்து அங்கே போகணும் என்று எனக்கு தெரியும். அவ்வாறு போனால் கூட, அங்கு சென்று நினைத்தை எல்லாம் செய்ய முடியுமா என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. காற்று அழுத்த தாழ்வு நிலை என்பது தானாகவே அமையும். அரசியலில் ஆழத்தை நினைத்து தயங்குகிறேன். அரசியலை நினைத்து பயப்படவில்லை, தயங்குகிறேன் அவ்வளவு தான்.

இவ்வளவு பேர் அரசியல் என்று பேசியதால், பேச வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. பேசாமல் போய் இருந்தால் திமிராகி விடும். எது இருந்தாலும் கடவுள் தீர்மானிப்பார். அது என்னவோ எனக்கு தெரியாது. என்னவாக இருந்தாலும், மக்களுக்கு நல்லது செய்வேன்" என்றார். ரஜினிகாந்த்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x