Published : 08 Mar 2014 02:18 PM
Last Updated : 08 Mar 2014 02:18 PM

‘இயக்குநராகப் போகிறேன்’: சிம்ரன்

தமிழ் சினிமாவின் மறக்க முடியாத நாயகிகளில் ஒருவர் சிம்ரன். சில டிவி நிகழ்ச்சிகளில் தலைகாட்டி வந்தாலும் சினிமா உலகை விட்டு விலகியிருந்த அவர், இப்போது மீண்டும் வெள்ளித்திரை பக்கம் ஒதுங்கத் தொடங்கியுள்ளார். கேரளாவில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பிய ‘த்ரிஷ்யம்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் அவர் நடிக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் அவரைச் சந்தித்தோம்.

‘த்ரிஷ்யம்’ ரீமேக்கில் கமலுக்கு ஜோடியாக மீண்டும் நடிக்கிறீர்களாமே?

மீண்டும் நான் சினிமாவுக்கு வந்திருப்பது உண்மை. ஆனால், நான் ‘த்ரிஷ்யம்’ படத்தின் ரீமேக்கில் நடிக்கவில்லை. கூடிய விரைவில், சிம்ரனை வேறு ஒரு ஆளாக பார்க்கப் போகிறீர்கள் என்பது மட்டும் உண்மை.

கல்யாண வாழ்க்கை எப்படி போயிட்டிருக்கு? குழந்தைகள் உங்களோட படங்களைப் பார்த்துட்டு என்ன சொல்றாங்க?

கல்யாண வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா போயிட்டிருக்கு. எனது குழந்தைகளோட உலகத்தில் மிகவும் சந்தோஷமா பயணித்துக் கொண்டு இருக்கேன். டிவி நிகழ்ச்சி களில் பிஸியாக இருந்தாலும் குழந்தைகளுக்கு தனியா நேரம் ஒதுக்கி அவங்களை கவனிச்சிட்டு இருக்கேன். குழந்தைகள் என்னோட நிகழ்ச்சிகளைப் பார்த்து ‘சூப்பர் மம்மி’ன்னு சொல்லும் போது அடையும் சந்தோஷத்திற்கு அளவே கிடையாது. நான் நடித்த பழைய படங்களை டி.விக்களில் பார்க்கும் போது, “மம்மி.. யூ லுக் வெரி ஸ்லிம்”ன்னு சொல்வாங்க. அந்த நிமிஷங்களில் என்னோட நெகிழ்வை சொல்ல வார்த்தைகளே கிடையாது.

நடிகர்களோடு ஒப்பிடறப்போ நடிகைகள்தான் எல்லா மொழிப் படங்களிலும் நடிக்கிறாங்க. ஏன் இப்படி?

முன்னணி நாயகியாக இருக்கணும்னு, இப்போ எல்லாருமே எல்லா மொழிகளிலும் நடிக்கிறாங்க. முன்பு எல்லாம் முன்னணி நாயகியாக 20 வருஷம் இருந்தாங்க, அப்புறம் 10 வருஷமாச்சு, அப்புறம் 5 வருஷமாச்சு, இப்போ இன்னும் குறைஞ்சுடுச்சு. புதுசு புதுசா நிறைய நடிகைகள் வந்துகிட்டே இருக்காங்க. ஒரு மொழில 100% உண்மையா உழைச்சா, முன்னணி நாயகியாக வலம் வரலாம்கிறது என்னோட எண்ணம்.

நடனம்னாலே சிம்ரன்தான் அப்படினு இப்பவும் சொல்றாங்க. இப்பவுள்ள நடிகைகள் நடனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறதில்லையே?

அதுக்கு நான் முதல்ல கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும். இன்னும் மறக்காம இருக்கிற ரசிகர்களுக்கு நன்றி. இப்பவுள்ள நடிகைகள் நடனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறாங்க. ஆனா அது ஏன் வெளியே தெரியலன்னு எனக்கு தெரியலை.

சினிமால எப்போதுமே பெண்கள் ஒரு காமப் பொருளாகவே பார்க்க படுறாங்களே?

உண்மை தான். ஆனா, அது பாக்குறவங்க கண்கள்லதான் இருக்கு. ஒரு நடிகை அப்படின்னா அனைத்து விதமான ரோல்களிலும் நடிக்கணும். நமக்கு கொடுத்த கேரக்டரை உள்வாங்கி சிறப்பா நடிக்கணும். அது எந்த மாதிரி கேரக்டரா இருந்தாலும் சரி. மற்றபடி நம்மை சுற்றி இருக்கிறவங்க பாக்குற பார்வைகளில் நம்மை இவர் எந்த கண்ணோட்டத்தோடு பார்க்கிறார் என்பதை கண்டுபிடித்து விடலாம். அது தெரிந்து அவர்களிடம் எச்சரிக்கையோடு நடந்து கொள்ள வேண்டும்

இப்பவுள்ள நடிகைகளில் யார் பெஸ்ட்?

ஹன்சிகா. எனக்கு ரொம்ப பிடிச்ச பொண்ணு.

தொடர்ச்சியாக பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரிச்சுகிட்டே இருக்கே?

கண்டிக்கவும் தண்டிக்கவும் வேண்டிய விஷயம் இது. பெண்களுக்கு தன்னம்பிக்கை ரொம்ப முக்கியம். அதுமட்டுமல்லாது நிறைய விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. உடல்நலனில் இப்பவுள்ள பெண்கள் அதிக கவனம் செலுத்துவதில்லை என்று நினைக்கிறேன். அது தான் பெண்களுக்கு மிகவும் முக்கியம்.

கூடிய விரைவில் சினிமாவில் வேறு ஒரு ஆளா என்னைப் பார்ப்பீங்கன்னு சொன்னீங்களே.. என்ன அது?

தெரிஞ்சுக்காம விட மாட்டீங்க போலயே... ஜுன் மாதம் முறையா அறிவிக்க இருக்கிறேன். படத்தயாரிப்புக்கான பணிகள் தற்போது முழுவீச்சில் தொடங்கி இருக்கிறேன். ஜுன் மாதம் முதல் ஷுட்டிங். யார் நடிக்கிறார்கள், இயக்குநர் யார் என்பது எல்லாம் முடிவான உடன் சொல்கிறேன். அடுத்த வருடம் ஒரு படம் இயக்க முடிவு செய்திருக்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x