Last Updated : 01 Feb, 2014 12:00 AM

 

Published : 01 Feb 2014 12:00 AM
Last Updated : 01 Feb 2014 12:00 AM

எம்.ஜி.ஆர் வாங்கிய கடன்

எம்.ஜி.ஆர் நடித்த படங்களிலேயே மாபெரும் வெற்றியைக் குவித்த படங்களில் ஒன்று ‘நாடோடி மன்னன்’. ஆனால் இந்தப் படத்தை எடுத்து முடிக்க, அவர் பட்ட பாடுகள் அதிகம்.

சொந்தப்பட நிறுவனம் தொடங்கிய போதே எம்.ஜி.ஆருக்கு மறைமுக அர்ச்சனைகள் நடந்தன. “'நடிச்சு நாலு காசு சம்பாதிச்சோம்னு இல்லாம இதெல்லாம் தேவையா?” என்று பலரும் அக்கறை(?)ப்பட்டார்கள் . அவர்தான் இயக்கப்போகிறார் என்பதை அறிந்ததும் விமர்சனங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது.

எதைப்பற்றியும் கவலைப்படாமல் களத்தில் இறங்கினார் எம்.ஜி.ஆர். தனக்கு திருப்தி தராத காட்சிகளை மீண்டும் மீண்டும் படம்பிடித்தார். காட்சிகளின் நேர்த்தி கருதி, ஆயிரக்கணக்கான அடி பிலிம் சுருள்களை வீணாக்கவேண்டிய சூழ்நிலை எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது. அப்போதெல்லாம் ஸ்டுடியோக்களில் இருந்து குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே ஒரு படத்துக்கான பிலிம் ரோல்களை வாங்கமுடியும். ஆயிரம் அடி பாசிட்டிவ் பிலிமின் நியாயமான விலை 75 ரூபாய் மட்டுமே. அதுவே வெளிமார்க்கெட்டில் 500 ரூபாய் கொடுத்து வாங்கவேண்டி இருந்தது. ஆனாலும்

எம்.ஜி.ஆர் காசைப்பற்றிக் கவலைப்படாமல் பிலிம் ரோல்களை வாங்கிப் படமெடுத்தார்.

படப்பிடிப்பும் இறுதிக்கட்ட பணிகளும் முடிந்தன. படத்தை சென்சாருக்கு அனுப்பவேண்டிய கட்டம் வந்தது. கூடவே கஷ்டமும் வந்தது. பாசிட்டிவ் பிலிம் வாங்குவதற்கு 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கவேண்டிய நிலை. யாரிடமாவது கடன் கேட்கலாம் என்று முடிவு செய்தார்.

எதிரிக்கும் கொடுத்துப் பழகிய எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு உதவ, ஒரு ராமச்சந்திரன் வந்து சேர்ந்தார். அவர்தான் 'கெயிட்டி' திரையரங்கத்தை நடத்திவந்த ராமச்சந்திர ஐயர். ஏவி.எம் நிறுவனத்தில் பேசி, தேவையான தொகையை வாங்கித்தருவதாக உறுதி யளித்தார். எம்.ஜி.ஆரின் முகத்திலும் அகத்திலும் பரவிய மகிழ்ச்சி ரேகையை அழிப்பதற்காகவே புறப்பட்டவர்போல வந்துசேர்ந்தார் எம்.கே.சீனிவாசன். அவரது ஆலோசனைப்படிதான் ஏவி.எம் நிறுவனம் கொடுக்கல்- வாங்கல்களுக்கு சம்மதம் சொல்லும்.

கடன் வாங்கவேண்டும். ஆனால் கடன் பத்திரத்தில் எம்.ஜி.ஆர் கையெழுத்துப் போடும் சூழ்நிலை வந்துவிடக்கூடாது, வந்தாலும் ஒப்புக்கொள்ளக்கூடாது என் பதில் உறுதியாக இருந்தார் 'எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்' நிர்வாகி ஆர்.எம்.வீரப்பன். “கடன் கொடுப்பதற்கு ஏவி.எம் நிறுவனம் தயாராக இருக்கிறது. ஆனால், ஒரே ஒரு கண்டிஷன், எம்.ஜி.ஆரின் கையெழுத்து அவசியம்” என்றார் எம்.கே.சீனிவாசன்.

கடைசியாக ஒரு திட்டத்தைக் கையில் எடுத்தார் ஆர்.எம்.வீரப்பன். “எங்களது தயாரிப்பான 'நாடோடி மன்னன்' படத்தின் இலங்கை வெளியீட்டு உரிமையை சினிமாஸ் லிமிடெட் என்ற கம்பெனிக்கு கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளோம். அந்த நிறுவனம் எங்களுக்குத் தரவேண்டிய தொகையை, நாங்கள் வாங்கும் கடனுக்கு அடமானமாக வைத்துக்கொள்ளும் வகையில், ஒப்பந்தத்தின் மூலப்பிரதியை உங்களிடம் தந்துவிடுகிறோம். நானும் எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்ரபாணியும் கையெழுத்துப் போடுகிறோம்”என்று சீனி வாசனிடம் சொன்னார் ஆர்.எம்.வீரப்பன். இந்த டீல் ஓகே ஆனது.

பணம் கிடைப்பது உறுதியாகிவிட்டது. எனவே, பிலிம் சுருள் வாங்குவதற்கான ஏற்பாட்டைச் செய்துவிட்டார் எம்.ஜி.ஆர். பணம் வாங்கி வருவதற்காக எவிஎம்முக்குச் சென்றார் ஆர்.எம்.வீ. “எந்த பத்திரத்திலும் எம்.ஜி.ஆர் கையெழுத்துப் போடமாட்டார் என்கிறீர்கள். ஆனால், இலங்கை சினி மாஸ் நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத் தில் எம்.ஜி.ஆர்தான் கையெழுத்துப் போட்டிருக்கிறார். அந்த ஒப்பந்தத்தை அட மானம் வைத்துதான் கடன் கேட்கிறீர்கள். அப்படியானால், நீங்கள் வாங்க விரும்பும் தொகைக்கான கடன் பத்திரத்தில் எம்.ஜி.ஆரின் கையெழுத்து வேண்டும்” என்று கறாராக சொல்லிவிட்டார் சீனிவாசன்.

ஆர்.எம்.வீயும் சக்ரபாணியும் எம்.ஜி.ஆருடன் ஆலோசனை நடத்தினார்கள். அவர்களிடம் எம்.ஜி.ஆர் ஒரு அணுகு முறையை சொல்லி அனுப்பினார். அதையே ஆர்.எம்.வீரப்பன் பின்பற்றினார். “ இலங்கை சினிமாஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டபோது எங்களது படக்கம்பெனியின் பெயர் 'எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்' என்று இருந்தது. அந்த நேரத்தில் அதன் நிர்வாக இயக்குநராக எம்.ஜி.ஆர் இருந்தார். அதனால் ஒப்பந்தத்தில் அவரது கையெழுத்து இடம்பெற்றது. இப்போது கம்பெனியின் பெயர் 'எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்று மாற்றப்பட்டுவிட்டது. நிர்வாக இயக்குநராக நான்தான் இருக்கிறேன். எனவே, நானும் இன்னொரு இயக்குநருமான சக்ரபாணியும் கையெழுத்துப் போட்டாலே செல்லுபடி ஆகும்” என்றார் ஆர்.எம்.வீரப்பன். கம்பெனியின் பெயர்மாற்றம் தொடர்பான கோப்புகளையும் ஒப்படைத்தார்.

“கடன் கொடுப்பதற்கு சம்மதிக்கிறோம்” என்றார் சீனிவாசன். கையெழுத்துகள் பதிவானது. இந்த பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கும்போது வேறொரு அறையில் இருந்தார் ஏவி.எம் முதலாளியான ஏவி.மெய்யப்ப செட்டியார். பிறகு பஞ்சாயத்து அறைக்கு வந்தார். “எம்.ஜி.ஆரின் கையெழுத்தைக் கடன்பத்திரத்தில் வாங்கிவிடவேண்டும் என்று நாங்களும் எவ்வளவோ முயற்சி செய்துவிட்டோம். கடைசியில் அவர்தான் ஜெயித்துவிட்டார்” என்று ஆர்.எம்.வீயிடம் சொன்ன செட்டியார், உடனடியாக பணத்தைக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x