Published : 28 Oct 2014 09:51 AM
Last Updated : 28 Oct 2014 09:51 AM
கோவை ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் கத்தி பட வெற்றி விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் இயக்குநர் முருகதாஸ், இசையமைப்பாளர் அனிருத், நடிகர் சதீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் நடிகர் விஜய் பேசியது:
கத்தி பட வெற்றி சந்தோஷத்தில் உங்களது கல்லூரி காலத்தில் உங்களை எல்லாம் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி.
கத்தி, என்னோட கேரியரில் ரொம்ப ரொம்ப முக்கியமான படம். உணவு, உடை, இருப்பிடம் ஆகிய முக்கியமானவற்றில் முதன்முதலாக உள்ள உணவைத் தருகிற விவசாயப் பிரச்சினையை சொன்னதை நினைத்துப் பெருமைப்படுகிறேன்.
விவசாயிகள் படும் துயரம் குறித்து கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால், படத்தில் நடிக்கும் போதுதான் இது படம் இல்லை, பாடம் என்பதைத் தெரிந்து கொண்டேன்.
எத்தனை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். எத்தனை பேர் வாழ்வை இழந்து வேறு தொழிலுக்குச் சென்றுவிட்டார்கள், எத்தனை பேர் வேறு நாட்டுக்குச் சென்றுவிட்டார்கள் என்பதை புரிந்து கொள்ள உதவிய படம். இந்த வாய்ப்பை கொடுத்த முருகதாஸுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
பசியுடன் இருப்பவருக்கு மீன் துண்டுகளை கொடுப்பதைக் காட்டிலும் மீன் பிடிக்க கற்றுக் கொடுக்க வேண்டும் என்பது நாம் கேள்விப்பட்ட பழமொழி. என்னைப் பொறுத்தவரை மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பது மட்டும் இல்லாமல், மீன் பிடிப்பதற்குத் தேவையான வலையையும் கொடுக்க வேண்டும். அப்போதுதான் ஏழை மக்களின் வாழ்வு உயரும்.
கத்தி படத்தில் நச்சுன்னு ஒரே வரியில் சொன்ன டயலாக் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதாவது, "நாம் பசிக்கு சாப்பிட்டது போக மீதி இருக்கிற உணவு அடுத்தவங்களுக்கு". நாளைக்கு சேர்த்து வைப்பதை விட ஏழைகளுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணினா குறைந்தா போய்விடப் போகிறோம்.
ஓர் ஊரில் நிறைய மருத்துவமனை இருந்தால் அந்த ஊரில் ஆரோக்கியம் குறைவாக இருக்குன்னு அர்த்தம். கடன் அள்ளி அள்ளி கொடுத்தால் ஏழைகள் அந்த ஊரில் அதிகம் இருக்காங்கனு அர்த்தம். எப்போது இந்த நலத் திட்டங்கள் கொடுப்பது நிறுத்தப்படுகிறதோ அன்றுதான் இந்தியா வல்லரசு நாடாகும் என்றார்.
ரசிகர் குடும்பத்துக்கு நிதி
கேரளாவில் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தபோது தவறி கீழே விழுந்து உயிரிழந்த ரசிகர் உன்னிகிருஷ்ணன் குடும்பத்தினரை விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, அந்த குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் உதவித் தொகையை அளித்தார் என ரசிகர் வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT