Published : 18 Oct 2014 05:56 PM
Last Updated : 18 Oct 2014 05:56 PM
விஜய் நடிப்பில் தயாராகி இருக்கும் 'கத்தி' படத்தை தமிழகத்தில் எங்கும் திரையிடக் கூடாது என திருமாவளவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில், தயாராகி இருக்கும் படம் 'கத்தி'. லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார்.
இலங்கை அதிபர் ராஜபக்சே ஆதரவு பெற்ற நிறுவனம் தான் லைக்கா என்று படம் ஆரம்பித்ததில் இருந்து சர்ச்சைகள் சுற்றிக் கொண்டே இருக்கின்றன. படம் முடிவு பெறும் தருவாயில், இப்பிரச்சினை விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
இந்நிலையில், இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில் கூறியிருப்பது, "நடிகர் விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான 'கத்தி' திரைப்படம் தீபாவளிக்கு வெளிவருவதாகத் தெரிய வருகிறது. இத்திரைப்படம் லைக்கா மொபைல் நிறுவனத்தாரால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ்கரன் என்பவர் தமிழீழத்தைச் சேர்ந்தவர்.
ஐரோப்பா உள்ளிட்ட புலம்பெயர்ந்த நாடுகளில் உலகத் தமிழர்களுக்கிடையே இந்நிறுவனம் சிம் கார்டு உற்பத்தியில் புலம்பெயர்ந்து விளங்குகிறது. தற்போது தமிழகத் திரைத் துறையில் அடியெடுத்து வைத்துள்ள இந்நிறுவனம் உலகத் தமிழர்களிடையே கடும் விமர்சனத்துக்கு’ள்ளாகியுள்ளது. ஏனென்னில், லைகா மொபைல் உரிமையாளரும், ராஜபக்சே மகனும் இணைந்து தொழில் செய்து வருவதாக தமிழ்ச் சமூகத்தினரிடையே வலுவான கருத்து பரவியுள்ளது.
இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்சேவோடு தொழில்ரீதியாக நட்புறவு கொண்டுள்ள சுபாஷ்கரன் தமிழ் திரையுலகில் முதலீடு செய்வது தமிழ் மக்களிடையே பெரும் அய்யத்தை உருவாக்கியுள்ளது. ராஜபக்சே திட்டமிட்டு திரையுலகத்தின் மூலம் தமிழக அரசியலில் ஊடுருவ முயற்சிப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. தமிழகத்தில் இளைய தலைமுறையினர் சிங்கள இனவெறிக்கு எதிராக அணி திரண்டுவிடக் கூடாது என்றும், இளைஞர்களின் போர்க் குணத்தை மழுங்கச் செய்யும் வகையிலும், ராஜபக்சே திட்டமிட்டு திரைத்துறையின் மூலம் ஊடுருவுவதாக சந்தேகம் எழுந்துள்ளது. எனவே தான், 'கத்தி' திரைப்படத்திற்கு எதிராக தமிழ் உணர்வாளர்கள், தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பாக அணி திரண்டு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
அக்கூட்டமைப்பில் விடுதலைச் சிறுத்தைகள் உறுப்பு இயக்கமாக இடம்பெறவில்லை என்றாலும், ஈழத் தமிழர் பிரச்சினையில் ஒத்துழைப்பு எனும் அடிப்படையில், அக்கூட்டமைப்பு கடந்த செப்டம்பர் 24 அன்று நடத்திய பேரணியில் கலந்து கொண்டது. அத்துடன், 'கத்தி' திரைப்படத்திற்கு எதிரான போராட்ட நடவடிக்கைகளிலும் விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
குறிப்பாக, ராஜபக்சேவின் பினாமி நிறுவனம் என்று சந்தேகத்திற்குல்ளாகியிருக்கிற லைகா நிறுவனத் தயாரிப்பில் 'கத்தி' திரைப்படத்தை தமிழகத்தில் எங்கும் திரையிடக் கூடாது என்னும் கோரிக்கையை விடுதைச் சிறுத்தைகளும் வலியுறுத்துகிறது. இது, நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் ஆகியோருக்கு எதிரான நடவடிக்கை ஆகாது. ராஜபக்சேவுக்கு எதிரான கோரிக்கை என்பதை புரிந்துகொண்டு திரைப்பட வெளியீட்டாளர்களும், திரையரங்க உரிமையாளர்களும் 'கத்தி' திரைப்படத்திற்கு எதிரான எமது கோரிக்கைக்கு முழு ஒத்துழைப்பு நல்ல வேண்டுமென்று விடுதலைச் சிறுத்தைகள் சார்ப்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்." என்று கூறியிருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT