Published : 24 Nov 2013 12:00 AM
Last Updated : 24 Nov 2013 12:00 AM
கோலிவுட்டுக்கு வந்து வருடக் கணக்காகி விட்டாலும் நுனி நாக்கு ஆங்கிலத்தி லேயே பேசும் நடிகைகளுக்கு மத்தியில் சஞ்சிதா ஷெட்டி வித்தியாசமானவர். வந்து கொஞ்ச நாட்களிலேயே தமிழை தீவிரமாகக் கற்று வருகிறார். கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் கொஞ்சும் தமிழிலேயே திக்கித் திணறி பதிலளிக்கிறார்.
தமிழ் கற்றுக்கொண்டீர்கள். இனி எப்போது இங்கேயே குடியேறப் போகிறீர்கள்?
இப்போதெல்லாம் எனக்கு பிடித்ததே சென்னை சூழல்தான். பெங்களூர் கிளைமேட்டில் கொஞ்ச நாட்கள் இருந்துட்டாலே தலைவலி, ஜுரம் வந்துவிடுகிறது. சென்னை வந்துவிட்டால் எல்லாம் போய்விடுகிறது. தமிழில் இரண்டு புதுப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். தெலுங்கிலும் ஒரு படம் நடிக்கிறேன். 2014 ல் கண்டிப்பாக சென்னையில் குடியேறி விடுவேன்.
திகில் படங்கள் மீது ஏன் இவ்வளவு காதல்?
‘சூது கவ்வும்’ கதையை முதலில் சொன்னபோது கொஞ்சம் யோசனை யோடுதான் கேட்டேன். குறைவான சீன்கள், ஒரு பாட்டு இதையெல்லாம் யோசித்தாலும், கிடைத்த வாய்ப்பை இழக்கவேண்டாம் என்று உள்ளுக்குள் ஒரு சிந்தனை இருக்கவே செய்தது. பெங்களூரில் இருந்து சென்னைக்கு நேரில் வந்து கதை கேட்டேன். இயக்குநர் கதை சொல்லி முடித்தபோதே இதை நாம் நிச்சயம் பண்ணவேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன். அந்தப் படத்தோட கடைசிக் கட்டப் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது ‘வில்லா’ படத்தின் கதையை தயாரிப்பு தரப்பினர் என்னிடம் சொன்னார்கள். இதையும் முயற்சி செய்து பார்ப்போம்னு இறங்கினேன். இதுக்கெல்லாம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இனிமேலும் கவனமாகப் படங்களைத் தேர்ந்தெடுக்கணும்.
நந்திதா, மனிஷா, சஞ்சிதா - இந்தப் பெங்களூர் ராணிகளில் யாரை போட்டியில் ஜெயிப்பீங்க?
சத்தியமா எனக்கு யாருமே போட்டி யில்லை. கிடைக்கிற ரோலை அழகா நடிக்கணும். நடிக்கிற படத்தோட வெற்றியில் என்னோட பங்கும் கொஞ்சம் இருக்கணும் அவ்வளவுதான். குறிப்பா மணிரத்னம், ஷங்கர், செல்வராகவன் இயக்கத்தில் எவ்ளோ சீக்கிரம் நடிக்கணுமோ, நடிச்சிடணும் அவ்ளோதான் ஆசை.
சினிமாவில் நடிக்க உங்கள் வீட்டில் எப்படி ஒப்புக்கொண்டார்கள்?
என் விருப்பத்துக்கு வீட்ல எப்பவும் மறுப்பு சொல்லமாட்டாங்க. என்ன ஒண்ணு, நடிக்க வந்ததால் வீட்டில் என்னோட சமையல்தான் மிஸ்ஸிங். நான் சமைக்கும் சாப்பாட்டை வீட்டில் போட்டி போட்டுக்கொண்டு ருசிப்பாங்க. எனக்கும் அது ரொம்ப சந்தோஷமா இருக்கும். இப்ப அதை நான் இழந்துட்டேன்.
தொடர்ந்து கிளாமராக நடிக்கிறீர்களே?
கதையோட ஒன்றிவரும் பட்சத்தில் கிளாமருக்கு ஓகே. ‘சூது கவ்வும்’ படத்தில் அந்த வகை கொஞ்சம் இருக்கும். என்னைப் பொறுத்தவரை படங்களில் குறிப்பிட்ட ஒரு எல்லை வரைக்கும் கிளாமர் பண்ணலாம்.
உங்களுக்கு உடற்பயிற்சின்னா ரொம்பப் பிடிக்குமாமே?
தினமும் ஒன்றரை மணி நேரம் ஜிம்ல இருப்பேன். சூரிய நமஸ்காரம், யோகா, டயட் உணவு, கிரீன் டீ, டான்ஸ் இதெல்லாம்தான் என் பிட்னஸுக்கு காரணம்.
உங்கள் கண்களைப் பார்த்தால் எதோ சொல்ல வர்ற மாதிரி இருக்கே?
‘நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடி சஞ்சிதா!’னு சொல்லும். வேறென்ன. ‘‘உன்னோட கண்கள் அழகு!’’ என்று பிரண்ட்ஸும் சொல்லுவாங்க. அது கடவுள் தந்த பரிசு. என்னோட அம்மாவுக்குத்தான் நன்றி சொல்லணும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT