Published : 30 Sep 2013 10:36 AM
Last Updated : 30 Sep 2013 10:36 AM
'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' பாவனைகள் அற்ற படம். மிஷ்கினின் அஞ்சாதே, யுத்தம் செய் ஆகிய படங்களின் வரிசையில் வந்துள்ள நேர்த்தியான வணிகப் படம். பெருமளவில் காட்சியமைப்புகளால் படத்தை நகர்த்திச் செல்லும் உத்தி, அற்புதமான ஒளிப்பதிவு, அசாத்தியமான பின்னணி இசை ஆகியவற்றின் மூலம் இப்படம் பார்வையாளர்களை இருக்கையில் அசைய விடாமல் கட்டிப்போடுகிறது. படத்தில் தர்க்க ரீதியான குறைகளை யோசிக்க விடாமல் படம் நகருவதற்குக் காரணம் இந்த அம்சங்கள்தான்.
பல்வேறு கேள்விகளைப் பார்வையாளர்கள் மனத்தில் எழச் செய்தபடி விறுவிறுப்பாக நகருகிறது படம். ஓநாய் என்று வர்ணிக்கப்படும் எட்வர்ட் அல்லது கார்த்திக் என்னும் இளைஞனை (மிஷ்கின்) உயிருடனோ பிணமாகவோ பிடிக்கக் காவல் துறை விரும்புகிறது. அதே காரணத்துக்காக குண்டர் படைத் தலைவன் ஒருவனும் அவனைத் தேடுகிறான். கடுமையாக அடிபட்டுக் கிடக்கும் 'ஓநாயை' ஒரு இளைஞன் தற்செயலாகக் காப்பாற்றுகிறான். அந்த இளைஞனைப் பொறியாக வைத்து ஓநாயைப் பிடிக்க போலீஸ் திட்டம் தீட்டுகிறது. அதைப் பயன்படுத்தித் தன்னுடைய வஞ்சத்தைத் தீர்த்துக்கொள்ள வில்லன் முனைகிறான். 'ஆட்டுக்குட்டி' யுடன் ஓடும் 'ஓநாய்' தப்பியதா என்பதுதான் கதை.
படத்தின் முதன்மைக் கதாபாத்திரமான 'ஓநாய்' தனது, முன்கதையைக் குழந்தைக்கு சொல்லுவதுபோலப் பார்வை யாளர்களுக்குச் சொல்கிறான். பார்வையாளர்கள் தங்கள் கற்பனைத்திரையில் விரித்துப் பார்க்கவைக்கிறது. திரையில் விரியும் காட்சிகள் தரும் அழுத்தத்தை விட, பார்வையாளர் கற்பனை செய்துகொள்ளக்கூடிய காட்சிகளின் அழுத்தம் இன்னும் அதிகமானது என்பதை உணர்த்தும் காட்சி இது. நீளத்தை சற்று குறைத்திருக்கலாம்.
இரவின் ரகசிய முகங்களைத் துல்லியமாகக் காட்சிபடுத்தியிருக்கிறது பாலாஜி வி. ரங்காவின் ஒளிப்பதிவு. ஒலியால் கதை சொல்லிச் செல்வதில், இளையராஜாவின் பின்னணி இசை ஜாலம் செய்திருக்கிறது.
தொங்குவது, பறந்து அடிப்பது போன்ற பூச்சுற்றல்களை உதறிவிட்டு, நளினமும் வேகமும் நிறைந்த கூர்மையான உடல் அசைவுகள் வழியாகச் கச்சிதமான சண்டைக் காட்சிகளை அமைத்திருக்கிறார் மிஷ்கின். அதே சமயம் இவர் கத்தியைக் காட்டி அழைத்ததும் ஒருவர் ஓடிவந்து அடி வாங்கி விழுவது போன்ற சில காட்சிகளை ரசிக்க முடியவில்லை.
ஒரு நடிகராகவும் மிஷ்கின் முத்திரை பதிக்கிறார். இறுக்கமான முகம், அமைதி, தேவைப்படும்போது மட்டும் வேகம் காட்டும் உடல் மொழி ஆகியவை பாத்திரத்துக்குப் பொருந்திப்போகின்றன. சிறுமிக்குக் கதை சொல்லும் காட்சியில் மனதைத் தொடுகிறார்.
மருத்துவக் கல்லூரி மாணவராக வரும் ஸ்ரீயும், சிபிசிஐடி அதிகாரியாக வரும் ஷாஜி, திருநங்கையாக வரும் பாரதி ஆகியோரும் மனதில் இடம்பிடிக்கிறார்கள்.
சில குறைகள் இருக்கவே செய்கின்றன. ஓநாய் அந்த இளைஞனை ஏன் இரவில் அழைக்க வேண்டும்? ஓநாயைக் கொல்லத் துடிக்கும் வில்லன் அந்தக் குடும்பத்தை ஏன் அழிக்க வேண்டும்? ஒரு கற்றுக்குட்டி இளைஞன் வீட்டுக்குள் வைத்து அவ்வளவு பெரிய அறுவை சிகிச்சை செய்வதும் சிகிச்சை முடிந்த சில மணிநேரங்களில் நோயாளி எழுந்து போவதும் நம்பக்கூடியதாக இல்லை.
இந்தக் குறைகளை மீறிப் படத்தை ரசிக்க முடிகிறது என்பதுதான் மிஷ்கினின் காட்சி மொழிக்குக் கிடைத்த வெற்றி.
இந்து டாக்கீஸ் தீர்ப்பு
தரமான படங்களை ரசிக்கும் பொறுமை கொண்டவர்களுக்கான படம் மட்டுமல்ல. பொழுதும் போகிறது நன்றாக.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT