Published : 09 Oct 2014 02:41 PM
Last Updated : 09 Oct 2014 02:41 PM
படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்து டப்பிங் வரை நடிகர் ரஜினியின் காலம் தவறாமையையும் எளிமையையும் கண்டு வியந்திருக்கிறது, 'லிங்கா' படக்குழு.
அறிமுகமான காலத்தில் எப்படி இருந்தாரோ, அப்படியே இப்போதும் இருப்பது ரஜினி மட்டும்தான் என்கிறார்கள் தமிழ்த் திரையுலகினர். இதை உறுதி செய்யும் விதமாக, 'லிங்கா' படக்குழுவில் பணியாற்றிய ஒருவர் சுவையான தகவல்களை என்னிடம் பகிர்ந்துகொண்டார்.
காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை
படப்பிடிப்பு முடிந்தவுடன் டப்பிங் என்று வரும்போது, இன்றைய தலைமுறை நடிகர்கள் அனைவருமே காலை 10 முதல் மாலை 6 வரை நேரம் ஒதுக்குவார்கள். அதிலும் மதிய இடைவேளையில் ஒரு மணி நேரம் ஒய்வு என்று, டப்பிங் திரையரங்கில் உள்ள அறையில் உட்கார்ந்து கொள்வார்கள். ஆனால், 'லிங்கா' டப்பிங்கின்போது ரஜினி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை டப்பிங் பேசி வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார்.
டப்பிங்கின் முதல் நாள் சரியாக 8:55 மணி வந்துவிட்டார் ரஜினி. அங்கிருந்த படக்குழுவினரிடம், மணியைப் பார்த்துக்கொண்டே "என்ன டைம் ஆயிடுச்சா. கரெக்ட்டா வந்துட்டேன்ல?" என்று கேட்டிருக்கிறார். மதியம் உணவு இடைவேளை முடிந்தவுடன் ஒய்வு எல்லாம் எடுத்துக் கொள்ளவில்லை. "நான் இங்கு வந்தது டப்பிங் பேச, ஒய்வு எடுக்க அல்ல" என்று கூறிவிட்டார் ரஜினி. இரவு 9 மணி வரை தொடர்ச்சியாக பேசி இருக்கிறார். அவருடைய வேலை பக்தியை அனைவருமே வியந்திருக்கிறார்கள்.
இதற்கு முன்பாகவே, 'எந்திரன்' படத்தின் டப்பிங்கின்போது ரஜினி வருகிறார் என்றவுடன் டப்பிங் தியேட்டருக்கு மேலே ஓர் அறையில் ஏ.சி. எல்லாம் போட்டு ரஜினி ஒய்வு எடுக்க என்று தயார் செய்திருக்கிறார்கள். 'எந்திரன்' டப்பிங் முடியும்வரை, ரஜினி அந்த அறை பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. டப்பிங் தியேட்டருக்கு வருபவர்கள் சாப்பிடும் இடத்தில், உட்கார்ந்து சாப்பிட்டு அனைவரோடும் ஜாலியாக பேசிக் கொண்டிருந்திருக்கிறார்.
காஸ்ட்லி அறையை தவிர்த்த ரஜினி!
சமீபத்தில் ஸ்ரீப்ரியா, மீனா இருவரும் 'லிங்கா' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியோடு எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியானது. அந்த படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவருமே, "தயாரிப்பாளர் கஷ்டம் தெரிந்த ஒரே நடிகன்" என்று ரஜினியை புகழ்ந்திருக்கிறார்கள்.
'லிங்கா' படப்பிடிப்பு ஹைதராபாத்தில் ஒரு காஸ்ட்லியான ஹோட்டலில் நடைபெற்று இருக்கிறது. தெலுங்கு 'த்ரிஷ்யம்' ரீமேக் வெற்றியடைந்திற்காக படக்குழு பார்ட்டி வைத்துக் கொண்டாடி இருக்கிறது. பக்கத்து ஹோட்டலில்தான் ரஜினி படப்பிடிப்பு நடக்கிறது என்றவுடன் அங்கு சென்று புகைப்படம் எடுத்திருக்கிறார்கள்.
அந்தப் புகைப்படத்தில் ரஜினி கோர்ட், ஷுட் எல்லாம் போட்டுக்கொண்டு படு ஸ்டைலாக நடிக்க வேண்டும். அப்போது அந்த ஹோட்டலின் மாடியில் ரஜினிக்கு என்று ஓர் அறையை ஒதுக்கி இருக்கிறார்கள். ஷாட் முடிந்தவுடன் உதவி இயக்குநர், ரஜினியிடம் சென்று, "சார்.. நீங்கள் மாடியில் உள்ள அறையில் இருங்கள். ஷாட் ரெடியான உடன் கூப்பிடுகிறேன்" என்று கூறியிருக்கிறார். "யாரைக் கேட்டு ரூம் போட்டீர்கள். நான் இங்கிருந்து மேலே சென்று வர நேரமாகும். அதுமட்டுமன்றி, நீங்கள் ஷாட் ரெடி என்று ஒருவரிடம் சொல்லி, அவர் மேலே வந்து, நான் கீழே வந்து மேக்கப் போட்டு ரெடியாகி நடிக்க வேண்டும். எவ்வளவு நேரமாகும். நான் இங்கேயே இருக்கிறேன். எனக்கு ஒண்ணும் பிரச்சினையில்லை. ஷாட் ரெடியானவுடன் சொல்லுங்கள்" என்று ஒரமாக ஓர் இடத்திற்கு சென்று நின்று கொண்டு இருந்திருக்கிறார். அந்த கோர்ட் காலரில் எல்லாம் வியர்வை பட்டுவிடக் கூடாது என்று கழுத்தைச் சுற்றி ஒரு துண்டைக் கற்றிக் கொண்டு சுமார் அரை மணி நேரம் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். ஷாட் ரெடி என்றவுடன் நடித்துக் கொடுத்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT