Published : 24 Oct 2014 02:39 PM
Last Updated : 24 Oct 2014 02:39 PM
பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிய 'தூய்மை இந்தியா' விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் பெயரை பரிந்துரை செய்திருக்கிறார் பாலிவுட் நடிகர் சல்மான் கான்.
அக்டோபர் 2-ம் தேதி காந்தி பிறந்த தினத்தில் 'தூய்மை இந்தியா' என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கினார் பிரதமர் மோடி. ஸ்வச் பாரத் அல்லது தூய்மை இந்தியா என்ற பிரதமர் நரேந்திர மோடியின் புதிய விழிப்புணர்வை மக்கள் இயக்கமாக அவர் மாற்ற தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார். இதற்காக இந்தியாவின் முக்கிய ஆளுமைகள் பெயர்களைக் கூறி, அவர்களும் தன்னுடன் இணையுமாறு கோரிக்கை விடுத்தார்.
சச்சின் டெண்டுல்கர், காங்கிரஸ் தலைவர் சஷி தரூர், தொழிலதிபர் அனில் அம்பானி, சல்மான் கான், பிரியங்கா சோப்ரா, கமல்ஹாசன், யோகா குரு ராம்தேவ் உள்ளிட்ட ஆளுமைகளை தனது தூய்மை இந்தியா சவாலுக்கு உதவுமாறு அழைப்பு விடுத்தார்.
அந்தச் சவாலை ஏற்று, அக்டோபர் 22-ம் தேதி தூய்மை இந்தியா திட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார் சல்மான்கான். அத்துடன் ஆமிர்கான், ரஜினிகாந்த் உள்ளிட்ட 9 பேருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து சல்மான் கான் கூறும்போது "நான் ஸ்வச் பாரத் விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு மேலும் 9 பேரை பரிந்துரைக்கிறேன். அவர்கள் மேலும் 9 பேரை பரிந்துரை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். முதலில் எனது ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் ரசிகர்கள். அவர்களால் கண்டிப்பாக மாற்றத்தைக் கொண்டு வர முடியும். மேலும் ஆமிர்கான், அசிம் பிரேம்ஜி, சந்தா கோச்சர், ஒமர் அப்துல்லா, பிரதீப் தூத், ராஜத் ஷர்மா, ரஜினிகாந்த் மற்றும் வினித் ஜெயின் ஆகியோருக்கு பரிந்துரை செய்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது சல்மான் கானின் பரிந்துரையை ஏற்று, மேலும் 9 பேருக்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன் எடுப்பாரா ரஜினி என்பது தான் பலரது கேள்வியாக இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT