Published : 07 Oct 2014 01:13 PM
Last Updated : 07 Oct 2014 01:13 PM

இணையத்தில் 2014-ல் கவனிக்கத்தக்கவர் தனுஷ்: வைரஸ் அம்புகளில் முதலிடம்!

தமிழ் சினிமா நட்சத்திரங்களில், இணையவாசிகள் மத்தியில் நடப்பு ஆண்டில் அதிகம் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் தனுஷ்தான் என்பது தெரியவந்துள்ளது.

பிரபல 'ஆன்டி வைரஸ்' மற்றும் இணையப் பாதுகாப்பு நிறுவனமான மெக்கஃபே (McAfee) வெளியிட்டுள்ள 'வைரஸ் அம்புகள்' ஆய்வின் முடிவில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இணையத்தில் நடிகர் தனுஷ் பெற்றுள்ள இந்தச் சிறப்பிடம், கடந்த 2013-ல் நடிகை த்ரிஷா வசம் இருந்தது நினைவுகூரத்தக்கது.

திரையுலகத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை பற்றியும், தகவல்களைப் பற்றியும் உடனடியாக தெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற மக்களின் ஆர்வத்தை தவறான வழியில் உபயோகிக்கிறார்கள் இணைய குற்றவாளிகள்.

இணையத் தேடல்களின்போது, பயனாளிகளின் கவனத்தைத் திசைத்திருப்பவும், தங்கள் சம்பந்தப்பட்ட தவறான வலைதளங்களுக்கு அவர்களைக் கொண்டு செல்லவும் இணைய விஷமிகளால் வைரஸ்கள் உருவாக்கப்படுவது வழக்கம்.

இத்தகைய வைரஸ்கள் இருக்கும் தளத்திற்கு பயனர்களை வரவழைக்க, இணையத்தில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள், நடிகர்கள், நடிகைகளின் பெயர்கள் பயன்படுத்தப்படும். அந்த வகையில், நடப்பு 2014-ல் நடிகர் தனுஷின் பெயர் அப்படி அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மெக்கஃபே தனது ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளது.

தனுஷின் பெயரில் இருக்கும் செய்திகளை மக்கள் ஆர்வமாகச் சென்று பார்ப்பதால், அப்படிப் பட்ட இணப்புகளில் (லிங்க்) இருக்கும் தளங்களில் வைரஸ் பாதிப்பு இருக்கும். இத்தகைய வைரஸ்களால் சிக்கும் பயனாளிகள் தவறான வலைத்தளங்களுக்கு வலுக்கட்டாயமாக உந்திச் சென்று தங்களது தனிப்பட்ட தகவல்களையும் தரவுகளையும் இழக்க நேரிடுவது குறிப்பிடத்தக்கது. அந்த விவரங்களை இணைய விஷமிகள் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்வது உண்டு.

இப்படி இணையத்தில் இந்த ஆண்டு அதிக பரபரப்பை ஏற்படுத்திய தமிழ் சினிமா நட்சத்திரம் என்ற சிறப்பிடத்தை தனுஷுக்கு வழங்குவதாக மெக்கஃபே அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு இணைய மக்கள் மேற்கொண்ட தேடல்களில் பலவும் ஒரு பிரபலத்தின் பெயரோடு, படங்கள், வீடியோக்கள், செல்ஃபி போன்றவற்றை தேடியதன் விளைவாக இதுபோன்ற ஆபத்தான வலைதளங்களை அடைந்துள்ளனர்.

இந்த ஆய்வை பற்றி மேக்கஃபே துணைத் தலைவர் வெங்கட் கிருஷ்ணபுர் கூறும்போது, "இதுபோன்று பல நட்சத்திரங்களின் பெயர்களைக் கொண்டு தேடல்களை மேற்கொள்வதை அறிந்து, இணைய விஷமிகள், இணையத்தில் பிரபலங்களின் பெயர்களை பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் தவறான தளங்கள் மூலமாக பிரபலங்களுடைய ரசிகர்களின் விவரங்களை சேகரித்து, அவற்றைத் தவறான வழியில் பயன்படுத்துகின்றனர். புது படங்கள், டி.வி. நிகழ்ச்சிகள், பிரபலங்கள் உருவாக்கும் புதிய டிரெண்டுகளை தங்களுக்குச் சாதகமாக இணைய விஷமிகள் பயன்படுத்திக்கொள்கின்றனர்" என்றார்.

மெக்கஃபே-வின் இந்த ஆய்வில் முதலிடத்தில் இருக்கிறார் தனுஷ். அமிதாப் பச்சனுடன் இணைந்து தனுஷ் நடிப்பில் விரைவில் வெளிவர உள்ள 'ஷமிதாப்' திரைப்படம் இணையத்தில் பெரும் ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது. இந்த இணையத் தேடலில் 66 ஆபத்தான விளைவுகள் ஏற்பட்டுள்ளது.

தமிழ் சினிமா நட்சத்திர வரிசையில் நடிகர் ஆர்யா இரண்டாம் இடத்தில் உள்ளார். ஆர்யாவின் தயாரிப்பில் வெளியான 'அமர காவியம்' திரைப்படம் தமிழ்த் திரையுலக ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இதனை பற்றிய இணையத் தேடல்கள் 59 ஆபத்துகள் விளைந்துள்ளன.

சிம்புவுடன் நயன்தாரா இணைந்து நடிக்கும் 'இது நம்ம ஆளு' படம், நடிகை நயன்தாராவை இந்த ஆய்வில் மூன்றாம் இடத்தை பிடிக்கச் செய்துள்ளது. நயன்தாரா பற்றிய தகவல்களுடன் 58 ஆபத்து விளைவுகள் கண்டறியப்பட்டுள்ளன.

சமீபத்தில் தனுஷ், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் 1 மில்லியன் ஃபாலோயர்கள் என்ற மைல்கல்லை அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x