Last Updated : 03 Dec, 2013 02:46 PM

 

Published : 03 Dec 2013 02:46 PM
Last Updated : 03 Dec 2013 02:46 PM

‘மாணவர்களின் வலியைச் சொல்ல ஒரு படம்’

ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ‘முரட்டுக்காளை’ படத்தை அதே பெயரில் ரீமேக் செய்து திரைக்கு கொண்டுவந்த இயக்குநர் கே.செல்வபாரதி கொஞ்சம் இடைவெளிக்குப் பின் ‘காதலைத் தவிர வேறொன்றுமில்லை’ படத்தை உருவாக்கி வருகிறார். படத்தின் ஸ்டில்களைப் பார்த்தால் இது ‘பசங்க’ படத்தின் இரண்டாம் பாகமோ என்று நினைக்கத் தூண்டும் அளவுக்கு ஒரே மழலைப் பட்டாளம். டிசம்பரில் படத்தை வெளியிட அனைத்துக் கட்ட வேலைகளிலும் தீவிரமாக இருக்கும் அவர், ‘தி இந்து’வுக்கு அளித்த பேட்டி.

படத்தின் ‘புகைப்படங்களைப் பார்த்தால் பசங்களுக்கான படம் மாதிரி தெரியுதே?

ஆமாம் . சமீபத்தில் வந்த ‘மெரினா’, ‘பசங்க’ மாதிரியான படம்தான் இதுவும். 10, 12 வயது பசங்களை வைத்து நகரும் கதைக்களம். சென்னையில் ஆளாகும் மனநெருக்கடியான சூழலுக்கு நடுவே அதிகாலை எழுந்து டியூசன் செல்லும் குழந்தைகளின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் பிடித்திருக்கிறோம். அவர்களின் வலிகளைச் சொல்லும் படம் இது.

அதில் கொஞ்சம் காதலும் சொல்ல வேண்டுமே. அதற்காகவே நாயகன், நாயகி பயணப்படும் சம்பவங்களையும் கவிதையாகக் கோர்த்திருக்கோம். கதையில் காதல் என்றாலே வலி என்று நினைக்கும் நாயகன், வலி தரும் சுகம்தான் காதல் என்று சொல்லும் நாயகி. இவர்களுக்கு இடையே பாலமாக இருக்கும் டியூஷன் மாணவர்கள், அவர்கள் செய்யும் சேட்டைகள்தான் படம். என்னோட பெரும்பாலான படங்களில் நகைச்சுவைக்காக வடிவேலுவை நடிக்க வைத்துவிடுவேன். இந்தப்படத்தில் இமான் அண்ணாச்சியை காமெடியனாக்கி இருக்கிறேன். சில நாட்களுக்கு முன் ஒரு பள்ளி ஆசிரியரை கத்தியால் குத்திக் கொன்ற மாணவனின் கதாபாத்திரத்தையும் இந்தப் படத்தில் வைத்திருக்கிறோம். கத்தியை எடுக்க வேண்டிய சூழ்நிலை அவனுக்கு எப்படி ஏற்பட்டது என்பதையும் சின்ன ‘மெசேஜ்’ஆக சொல்லியிருக்கிறோம்.

புதிதாக வரும் குறும்பட இயக்குநர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்களின் போக்கை எப்படி கருதுகிறீங்க?

அவர்கள் போகிற வழியைத் தேடி இப்போ நாங்க போக வேண்டியிருக்கு. இப்போ எல்லோருமே உலகளாவிய தேடலில் இறங்கிட்டாங்க. இவங்களுக்கு நானும் ரசிகன் என்றே சொல்லலாம். சமீபத்தில் ‘மதுபானைக்கடை’, ‘அவள் பெயர் தமிழரசி’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ போன்ற படங்கள் எல்லாம் மிகச் சிறப்பாக எடுத்திருக்கிறார்கள்.

சமீபத்தில் ஒரு இளம் இயக்குநர் என்னிடம் கதை சொல்ல வந்தார். ஒரு அலுவலகத்துக்கு ஒருவர் நேர்காணலுக்கு போகிறார். அந்த டேபிளிலேயே கதை தொடங்கி முடிகிறது. அசந்து போய்விட்டேன். பேசாமல், இந்த இயக்குநர் சட்டையை கழட்டிவிட்டு, புது சட்டையை வாங்கி மாட்டிக்கிட்டு இந்த தம்பிகளிடம் ‘நாம உதவியாளனா சேர்ந்துகொள்ளலாம் போல இருக்கே’ என்று நினைக்கிற அளவுக்கு செய்றாங்க. இவர்களின் பலமே கதையை தயார் செய்துவிட்டு, பின் அதற்கான ஹீரோவைத் தேடுவதுதான்.

அடுத்ததாக என்ன படம் செய்கிறீர்கள்?

பிரியமானவளே 2 கதையை ரெடி பண்ணிக் கொண்டிருக்கிறேன். விமலுக்கு ஒரு கதை ரெடியாக இருக்கிறது. ‘கிழக்குச்சீமையிலே’ படத்துக்குப் பிறகு பிறந்தவீட்டின் உறவை ‘பளீர்’ என்று சொல்லும் ஒரு படம் மீண்டும் வரணும் என்று ‘எங்க மாமா’ தலைப்பில் ஒரு கதையும் ரெடி. இதில் சசிகுமார் நடித்தால் நன்றாக இருக்கும். அவரைப்பிடிக்கணும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x