Published : 16 Oct 2014 11:50 AM
Last Updated : 16 Oct 2014 11:50 AM
‘லிங்கா’ படத்தின் வேலைகள் வேகமாக முடிந்து வருகிறது. இப்படத்தை விரைவில் முடிக்க விரும்பும் ரஜினிகாந்த், அதற்காக காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை சுறுசுறுப்பாக டப்பிங் பேசி இளம் நடிகர்களையே திகைக்க வைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தைப் பற்றிய சில தகவல்களை ‘லிங்கா’ படக் குழுவினரிடம் இருந்து சேகரித்தோம். அவற்றில் சில...
# ‘லிங்கா’வில் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இதில் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு வருவது போல ஒரு வேடத்திலும், தற்கால தாதாவாக மற்றொரு வேடத்திலும் ரஜினி நடித்துள்ளார்.
# ‘லிங்கா’ படத்தின் கதையைப் பற்றிக் கேட்டால், “இப்படத்தில் ஒரு அணைப் பகுதியில் அடிக்கடி விபத்து, கொலை, கொள்ளைகள் நடக்கிறது. அந்த அணையைக் கட்டிய ரஜினியை அவமானப்படுத்தியதால்தான் இதெல்லாம் நடக்கிறது என்று அஞ்சி மக்கள் அவரைத் தேடுகிறார்கள். அந்த அணைப் பகுதிக்கு வரும் தாதா ரஜினி, அணைப் பகுதியில் இருக்கும் கொள்ளைக் கூட்டம்தான் இவை அனைத்தையும் செய்கிறது என்று கண்டுபிடிக்கிறார். கொள்ளைக் கூட்டத்தை அவர் ஒழித்தாரா... அணையைக் கட்டிய ரஜினி என்னவானார் என்பதுதான் படம்” என்கிறார்கள் படக்குழுவினர்.
# சுதந்திரத்துக்கு முன்பு வரும் ரஜினிக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹாவும், தற்கால ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்காவும் நடித்திருக்கிறார்கள். தற்போது ரஜினி, சோனாக்ஷி சின்ஹா பங்கேற்கும் ஒரு டூயட் பாடலை படமாக்கி வருகிறார்கள்.
# இப்படத்தில் ரஜினி, சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா, சந்தானம், கருணாகரன், விஜயகுமார், ராதாரவி என பலரும் நடித்திருக்கிறார்கள். சுதந்திரத்துக்கு முன்பு வரும் காட்சியில் லண்டன் நடிகையான லாரன்.ஜே.இர்வின் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.
# ரஜினி, சோனாக்ஷி சின்ஹா பங்கு பெறும் பொங்கல் விழா பாடல் காட்சியை பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.
# இப்படத்தின் இசையை ரஜினியின் பிறந்த நாளன்று வெளியிடலாமா என்று ஆலோசனை நடத்தி வருகிறார்கள். படம் பொங்கலில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.
# உடல்நிலை நன்கு தேறிவிட்டதால், ‘லிங்கா’ படத்துக்கு பிறகு இமயமலை செல்ல ரஜினி திட்டமிட்டுள்ளாராம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT