Published : 04 Feb 2014 12:00 AM
Last Updated : 04 Feb 2014 12:00 AM
பெரிய பட்ஜெட் படங்கள் மக்களிடையே சறுக்கி வரும் நிலையில், சின்ன பட்ஜெட் படங்கள் தமிழ் சினிமாவில் கோலோச்சும் காலமிது. தொடர்ச்சியாக சின்ன பட்ஜெட் படங்களைச் சரியாக திட்டமிட்டு வெளியிட்டு அதில் வெற்றியும் பெற்று வருகிறார் சி.வி.குமார். 2012ல் ‘அட்டகத்தி’, ‘பீட்சா’ , 2013-ல் ‘பீட்சா 2’ ‘சூது கவ்வும்’ என்று தொடர்ந்து வெற்றிப்படங்களாக கொடுத்த அவர் 2014-ல் ‘முண்டாசுப்பட்டி’, ‘தெகிடி’, ‘லுசியா’ என்று பரபரப்பாக படங்களைத் தயாரித்து வருகிறார். படவேலைகளில் பிஸியாக இருக்கும் அவரை ‘தி இந்து’வுக்காக சந்தித்தோம்.
இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்ற ‘லுசியா' படத்தை தமிழில் தயாரிக்கிறீங்க. தமிழுக்காக கதையில் எதுவும் மாற்றம் உண்டா?
கன்னட படத்தைப் போலவே தான் தமிழிலும் எடுக்க இருக்கிறோம். அந்தப் படத்தை நான் வாங்கியதற்கு காரணமே படத்தின் கதைதான். அவ்வளவு நல்ல கதையில் கண்டபடி கையை வைக்க நான் தயாரா இல்லை. படத்தை பெரிய பொருட்செலவில் எடுக்கத் திட்டமிட்டு இருக்கிறோம். 'லுசியா' இயக்குநர் பவண் குமாரே காசு இல்லாம பண்ணாம விட்டுட்டேன் அப்படினு சில விஷயங்களைச் சொன்னார். அதை தமிழ்ல பண்ணத் திட்டமிட்டு இருக்கிறோம்.
‘பீட்சா’வில் கார்த்திக் சுப்புராஜிடம் இணைந்து பணியாற்றிய பிரசாத் ராம் இப்படத்தை இயக்க இருக்கிறார்.
தொடர்ச்சியா வித்தியாசமான கதைக்களம் உள்ள படங்களைத் தயாரிக்க என்ன காரணம்?
நிறைய கதைகள் கேட்பேன். எனக்கு எந்த கதை பிடிக்குதோ அந்த கதையைப் படமா பண்றேன். இப்படி வித்தியாசமான கதைகளைத்தான் தயாரிக்கணும் அப்படின்னு திட்டமிட்டெல்லாம் பண்றது கிடையாது.
பெரிய பட்ஜெட் படங்கள் தயாரிக்கிற திட்டம் ஏதும் இருக்கா?
என்னோட பலம் நல்ல சின்ன பட்ஜெட் படங்களைத் தயாரிக்கிறது. முதல் விஷயம் சின்ன பட்ஜெட் படங்கள் ஹிட் ஆயிடுச்சேன்னு பெரிய பட்ஜெட் படங்களைத் தயாரிச்சேன்னா மாட்டிக்குவேன். ரெண்டாவது பண முதலீடு. பெரிய நடிகர்கள், இயக்குநர்கள், டெக்னீஷியன்கள் இப்படி எல்லாரோட சம்பளம் போக , படப்பிடிப்பு போக பணம் வேணும்.
நான் சினிமாவை ஒரு வியாபாரமாதான் பாக்குறேன். ஷுட்டிங் நடக்குறப்ப ஒருநாள் கூட காசு இல்லாம ஷுட்டிங் நிக்கக்கூடாது. இப்படி நிறைய விஷயங்கள் பக்காவா ப்ளான் பண்ணினாத்தான் நான் போட்ட காசு எனக்கு திருப்பி வரும். இந்த மாதிரி விஷயங்கள பெரிய பட்ஜெட் படங்கள்ல பண்ண முடியாது. அதனால இப்போதைக்கு பெரிய பட்ஜெட் படங்கள் வேண்டாம்னு முடிவு எடுத்திருக்கேன்.
மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ் ஸ்டார் உங்களோடு இணைந்து படம் தயாரிக்க திட்டமிட்டு இருப்பது பற்றி?
கார்ப்பரேட் நிறுவனங்கள் தமிழ்ல படங்கள் தயாரிக்க வர்றது நல்ல விஷயம்தான். அவங்களுக்கு தயாரிக்க நல்ல கதைகள் தேவைப்படுது. அந்த மாதிரி ஒரு பெரிய நிறுவனம் எங்களை தேர்ந்தெடுத்திருப்பது சந்தோஷமாதான் இருக்கு. தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிச்ச ஒன்றரை வருஷத்துலயே இந்த மாதிரி அங்கீகாரம் கிடைச்சுருக்கு.
எல்லாரும் நடிகர், இயக்குநர், ஒளிப்பதிவாளர் அப்படினு ஆசைப்படுறப்ப உங்களுக்கு ஏன் இந்த சினிமா தயாரிப்பு ஆசை?
எனக்கு கிரியேட்டிவ்வா யோசிக்க தெரியாது. நான் வியாபாரம் பண்றவன். ஏதாவது ஒன்றை பாத்தேன்னா அத வைச்சு எப்படி மார்க்கெட்டிங் பண்ணலாம்னு தான் யோசிப்பேன். எனக்கு என்ன தெரியுமோ அதைதானே பண்ண முடியும். அதான் சினிமா தயாரிப்புல இறங்கிட்டேன்.
முதல் படம் பண்றப்போ வீட்டுக்கு தெரியாம தான் பண்ணினேன் அப்படினு சொன்னீங்க. இப்போ உங்க வீட்டுல என்ன சொல்றாங்க?
பணத்தை எல்லாம் கொண்டு போய் வீணாக்கிருவானோ அப்படினு பயந்தாங்க. இப்போ நல்லா வந்துட்டான் அப்படினு சந்தோஷமாயிட்டாங்க. எனக்கு குடும்பம் எல்லாம் மதுரை அப்படிங்குறதுனால அவங்களோட நேரம் செலவழிக்க முடியறதில்லை. ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை தான் வீட்டுக்கே போறேன். அதான் அவங்களுக்கு வருத்தம்.
முதல் படம் தயாரிக்கிறப்போ இவ்வளவு சீக்கிரம் தயாரிப்பில் வளர்வோம்னு எதிர்பார்த்தீர்களா?
இவ்வளவு பெரிசா வளர்வோம் அப்படினு நான் எதிர்பார்க்கல. ஆனா, தொடர்ச்சியா படம் பண்ணனும் அப்படின்னு திட்டம் வைச்சுருந்தேன். ஒரு படம் பண்ணிட்டு விட்டுற கூடாது, 4 படங்கள் பண்ணிட்டு அப்புறமா முடிவு பண்ணலாம்னு தான் யோசிச்சேன். வியாபாரத்துல இருந்து வந்ததுனால, சினிமா தயாரிப்புக்குள்ள வந்த உடனே முதல்ல ஒரு பிராண்ட் உருவாக்கணும்னு திட்டம் போட்டேன்.
சினிமா தயாரிப்பு அப்படிங்குறது மிகப்பெரிய பொறுப்பு. அதை எப்படி இவ்வளவு திட்டமிட்டு கரெக்டா ப்ளான் பண்றீங்க?
என் கூட நிறைய பேர் வேலை செய்றாங்க. எல்லாம் வேலையையும் நானேதான் செய்வேன் அப்படினு நான் செய்யறதில்லை. நான் அவங்களை எல்லாம் மேனேஜ் பண்ணுவேன். என்னோடு பணியாற்றிய எல்லா இயக்குநர்களுமே அவங்களோட வேலையை ரொம்ப திறமையா பாத்தாங்க. காசு வாங்கறேன், வேலை பாக்குறேன் அப்படிங்கறது எல்லாம் தாண்டி இது என்னோட கம்பெனி அப்படினு எல்லாருமே வேலை பாக்குறாங்க. நான் மட்டும் தனி ஆளா எதுவும் பண்ணிடல. எல்லாமே என்னோட டீம்தான். எனக்கு யாரையுமே முதல்ல தெரியாது.
கதையைத் தேர்வு செய்வது மட்டும்தான் என்னோட வேலை. அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி அதை படமா வெளிவர வரைக்கும் என்னோட டீம் அவ்வளவு உழைக்கிறாங்க. நான் இப்போ ஜெயிச்சு நிக்கிறேன் அப்படின்னா... எனக்கு பின்னாடி என்னோட இயக்குநர் ஜெயிச்சு நிக்கிறாரு.. இப்படி ஒவ்வொருத்தர் வெற்றிக்கு பின்னாடியும் இன்னொருத்தர் இருக்காரு. சினிமால ஒருத்தரோட வெற்றி அப்படினு சொல்லவே முடியாது.
ஒட்டு மொத்தமா டீம் அப்படினு தான் சொல்லமுடியும். அது எந்த படமா இருந்தாலும் சரி, தயாரிப்பாளரா இருந்தாலும் சரி தனியா இது வெற்றி அப்படினு சொல்ல முடியாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT