Published : 29 Oct 2014 02:44 PM
Last Updated : 29 Oct 2014 02:44 PM
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'கத்தி' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அடுத்ததாக, சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் விஜய்.
விஜய் படங்கள் அனைத்தையும் கேரளாவில் விநியோகம் செய்துவரும் தமீன் பிலிம்ஸ் மற்றும் பி.டி.செல்வகுமார் ஆகியோர் இந்தப் படத்தை தயாரிக்கின்றனர்.
'கத்தி' படத்திற்கு வரவேற்பு கிடைத்ததிற்காக பத்திரிக்கையாளர்களுக்கு விஜய் நன்றி தெரிவிக்கும் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அப்போது விஜய்யுடன் தமீனும் வந்திருந்தார். அவரிடம் பேசியபோது கூறிய தகவல்கள்:
"நவம்பர் 10-ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. சென்னை ஈ.சி.ஆரில் பிரம்மாண்டமான அரண்மனை செட் போடும் பணிகள் நடைபெறுகிறது. அதில் விஜய்யுடன் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோருடன் சுமார் 300 நடனக் கலைஞர்கள் நடனமாட இருக்கிறார்கள். அந்தப் பாட்டு முடிந்தவுடன் சண்டைக்காட்சி ஒன்றையும் படமாக்க திட்டமிட்டு இருக்கிறோம்.
பலரும் சொல்லி வருவதுபோல் இது முழுக்க ஃபேன்டஸி படம் கிடையாது. ஸ்ரீதேவி கதாபாத்திரம் மட்டும்தான் ஃபேன்டஸியாக இருக்கும். மற்றபடி 'கில்லி' பாணியில் முழுக்க ஒரு கமிர்ஷியல் ஆக்ஷன் படம்தான். 'கில்லி' பிரகாஷ்ராஜ் பாத்திரத்தைவிட சுதீப் கதாபாத்திரம் பேசப்படும்.
விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோருடன் தம்பி ராமையா, ரோபோ சங்கர் உள்ளிட்ட 7 காமெடியன்கள் நடிக்க இருக்கிறார்கள்.
சண்டைப் பயற்சி இயக்குநர் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் வெளிநாட்டினர்தான். படத்தில் 5 சண்டைக் காட்சிகள் இருக்கிறது. லீ விட்டேகர் உள்ளிட்ட 3 பேர் வடிவமைக்க இருக்கிறார்கள்.
விஜய்யின் தற்போதைய வியாபாரத்தை கணக்கில் கொண்டு, படத்தின் பட்ஜெட்டை தீர்மானித்து இருக்கிறோம்" என்றார் தயாரிப்பாளர் தமீன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT