Last Updated : 03 Oct, 2014 02:40 PM

 

Published : 03 Oct 2014 02:40 PM
Last Updated : 03 Oct 2014 02:40 PM

சினிமா ஆவலில் லைட்மேன் ஆகவும் துணிந்தேன்: நடிகர் விக்ரம் தன்னம்பிக்கை பேட்டி

சேது படத்துக்கு முந்தையச் சூழலில் இருந்து 'ஐ'-க்காக மேற்கொண்ட சிரத்தைகள் வரை நெகிழ்ச்சியுடன் பேட்டி அளித்திருக்கிறார், நடிகர் விக்ரம்.

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'ஐ' திரைப்படம் விரைவில் வெளியாகி இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்திருக்கிறார்.

இப்படம் குறித்து ஷங்கர் பல்வேறு பேட்டிகள் அளித்திருந்தாலும், படத்தின் நாயகனாக 'ஐ' குறித்து விக்ரம் எதுவும் பேட்டியளிக்கவில்லை. முதன்முறையாக ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு விக்ரம் பேட்டியளித்துள்ளார்.

அப்பேட்டியில் விக்ரம் கூறியது:

"ப்ராஸ்தடிக் மேக்கப் மற்றும் கிராபிக்ஸை அடுத்த தளத்திற்கு ஷங்கர் முன்னெடுத்துச் சென்றுள்ளார். இந்தப் படத்தின் கெட்டப்பினால் 3 வருடங்கள் நான் தலைமறைவாகவே இருந்தேன். எந்தப் புகைப்படத்திற்காகவும் போஸ் கொடுக்க முடியவில்லை.

இந்த கெட்டப் மிக ரகசியாமாகப் பாதுகாக்கப்பட்டது. படப்பிடிப்புத் தளத்தில் யார் செல்போனில் படம் பிடிப்பார்கள் என்பதை கணிக்க முடியாது என்பதால் எப்போதும் நானே அதை கண்காணித்து வந்தேன். ஒவ்வொரு முறை யாரேனும் செல்போனில் படமெடுக்கும்போதும் உதவியாளரை அமைதியாக அழைத்து சொல்வேன், அவர் சென்று அந்த கேமராவில் இருக்கும் படத்தை அழித்து விட்டு வருவார்.

மிருகம் போல மேக்கப் செய்து கொள்வது சற்று எளிதாக இருந்தது. ஆனால் உருவம் சிதைந்தது போல மேக்கப் செய்து கொள்வது கடினமாக இருந்தது. வெளிநாட்டுக் கலைஞர்களின் வேலை செய்யும் முறை என்னை வியக்க வைத்தது. ஒவ்வொரு ஷாட் எடுக்கும் போதும் அவர்கள் உடனிருந்தனர். நான் வேண்டாம் என்று சொன்னாலும் அங்கிருந்து நகர மறுத்தனர்.

பாலிவுட்டில் எப்படி வேலை செய்கிறார்கள் என்பது தெரியாது. ஏனென்றால் நான் நடித்த இரண்டு இந்திப் படங்களிலும் தென்னிந்திய சினிமாவைச் சேர்ந்தவர்களே வேலை செய்தனர். ஆனால் சிறிது தாமதமாக எழுந்து தளத்திற்கு வருவதற்கும் ஆசையாகத்தான் உள்ளது. ஆனால் அப்படிப்பட்ட தாமதத்திற்கு தமிழ் சினிமாவில் அனுமதி இல்லை.

நான் சிறு வயதிலிருந்தே நடிகர் ஆக வேண்டும் என்று பல முறை கடவுளிடம் கண்ணீர் சிந்தி வேண்டியிருக்கின்றேன். ஆனால் நடுவில் நடந்த விபத்தால் என்னால் ஏதும் செய்ய இயலாமல் போனது. சில நாட்கள் பாடகனாகவும் முயற்சி செய்திருக்கிறேன். தொடர்ந்து லைட்மேன், கேமரா உதவியாளர் என சினிமாவில் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற ஆவலில் இருந்தேன். டாக்டர்கள் என்னால் சாதாரணமாக நடக்க முடியாது என்று சொன்ன போதும், கண்டிப்பாக என்னால் முடியும் என்று நினைத்தேன். அப்போதுதான் சேது வாய்ப்பு வந்தது" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x