Published : 26 Nov 2013 12:00 AM
Last Updated : 26 Nov 2013 12:00 AM
‘‘தமிழ்நாட்டில் வரும் 2015 ஆம் ஆண்டுக்குள் எயிட்ஸ் நோயே இல்லாமல் ஜீரோ சதவீதமாகக் கொண்டு வர வேண்டும் என்று தமிழ்நாடு எயிட்ஸ் கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருவதாக இணை இயக்குநர் லீலாகிருஷ்ணன் கூறினார்.
‘டீச் எயிட்ஸ்’ அமைப்பின் சார்பில் எச்ஐவி தொற்று விழிப்புணர்வு குறித்த அனிமேஷன் படம் திரையிடும் நிகழ்ச்சி சென்னையில் திங்கள்கிழமை நடந்தது. தமிழில் உருவாக்கப் பட்டிருக்கும் இந்த அனிமேஷன் படத்தில் நடிகர்கள் சூர்யா, சித்தார்த், நடிகைகள் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் குரல் கொடுத்திருக்கிறார்கள்.
டிசம்பர் 1 ம் தேதி உலக எயிட்ஸ் தினமாக அனுசரிப்பதை முன்னிட்டு இந்த அனிமேஷன் படக்காட்சியை, ‘டீச் எயிட்ஸ்’ அமைப்பு தமிழ்நாடு முழுக்க கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் திரையிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவெடுத்துள்ளது. இது குறித்த அறிவிப்பு நிகழ்ச்சியில், நடிகை அனுஷ்கா, ‘டீச் எயிட்ஸ்’ அமைப்பின் நிறுவனர் பியா சர்கார், தமிழ்நாடு எயிட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தின் இணை இயக்குநர் லீலாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகை அனுஷ்கா, ‘‘தமிழ் அனிமேஷன் படத்தில் என்னுடைய பங்களிப்பும் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. என்னுடைய கல்லூரிப் பருவத்தில், ஒரு கிராமத்தில் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை கோழிப் பண்ணையில் தனிமைப்படுத்தி வைத்ததை பார்த்தேன். அப்போது எனக்கும் இது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை.’’ என்றார்.
தமிழ்நாடு எயிட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தின் இணை இயக்குநர் லீலாகிருஷ்ணன் பேசுகையில்,
‘‘தமிழ்நாட்டில் வரும் 2015 ஆம் ஆண்டுக்குள் எயிட்ஸ் நோயே இல்லாமல் ஜீரோ சதவீதமாகக் கொண்டு வர வேண்டும் என்று எயிட்ஸ் கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. இதில் புறந்தள்ளுதல், ஒதுக்குதல், புதிதாக தொற்றுதல், இறப்பு இப்படி எதுவுமே இருக்கக்கூடாது என்பதிலும் தெளிவாக இருக்கிறோம். தற்போது தமிழ்நாடு முழுக்க 10,006 கல்லூரிகளில் எயிட்ஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். வரும் மார்ச் மாதத்திற்குள் புதிதாக, 700 கல்லூரிகளிலும், பல பள்ளிகளிலும் நடத்த இருக்கிறோம். எயிட்ஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்டம் தோறும் சிறப்பாக நடத்துவதில் தமிழ்நாடு முன்மாதிரியான மாநிலமாக இருக்கிறது.’’ என்றார்.
நிகழ்ச்சியின் முன்னதாக ‘டீச் எயிட்ஸ்’ அமைப்பின் நிறுவனர் பியா சர்கார் பேசியபோது, ‘‘எயிட்ஸை பாலியல் ரீதியான பிரச்சனை என்று கொண்டு போகாமல், உடலில் தொற்றும் உயிரியல் சார்ந்த ஒரு வைரஸ்தான் என்பதை நாங்கள் வலியுறுத்தி வருவதால், எளிதாக எல்லோரிடமும் எடுத்துச்செல்ல முடிகிறது.’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT