Published : 06 Oct 2014 10:49 AM
Last Updated : 06 Oct 2014 10:49 AM
நடிகர் சங்கத்திற்காக ஆர்யா, ஜீவா, ஜெயம் ரவி, கார்த்தி ஆகியோருடன் இணைந்து நானும் ஒரே படத்தில் அடுத்த ஆண்டு நடிக்க இருக்கிறேன் என்று விஷால் கூறினார்.
ஹரி இயக்கத்தில் விஷால், ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'பூஜை' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 5 ) சென்னையில் நடைபெற்றது. மொத்த படக்குழுவும் இச்சந்திப்பில் பங்கேற்றது.
தீபாவளிக்கு 380 திரையரங்குகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், விஷால் நடிப்பில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் படம் 'பூஜை' தான் என்று இப்படத்தினை வெளியிடும் வேந்தர் மூவிஸ் நிறுவனம் சார்பில் டி.சிவா கூறினார்.
இச்சந்திப்பில் நடிகர் சத்யராஜ் பேசும்போது, "'தலைவா', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ராஜா ராணி' மற்றும் 'சிகரம் தொடு' போன்ற படங்களில் எனது கேரக்டர்களுக்கு அதிக பாராட்டு கிடைத்தது. இந்த மாதிரி வித்தியாசமான பாத்திரங்கள் கிடைத்ததற்கு எனது ஆரம்பகால இயக்குநர்களுக்கு தான் நன்றி சொல்லணும்.
ஹரி படப்பிடிப்பு என்றாலே மிலிட்டரி கேம்ப் மாதிரி தான் இருக்கும். எனக்கு அது தான் பிடிக்கும். எள் என்றால் எண்ணெயாக இருக்க வேண்டும். இப்படி பண்ணுங்க, அப்படி பண்ணுங்க என்று சொல்லும் இயக்குநர்களை விட, இது தான் உங்க பாத்திரம், எனக்கு இது தான் வேணும் என்று தெளிவாக சொல்லும் இயக்குநர்களிடம் பணியாற்றுவது மாதிரி ஒரு ஜாலியான விஷயம் எதுவுமே கிடையாது.
சமீபகாலமாக இந்தி, தெலுங்கு, இப்போ மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்திருக்கிறேன். இயக்குநர் ஹரி இந்தியா முழுவதும் ட்ரென்ட் செட்டர் ஆகிவிட்டார். அது தான் உண்மை. ஏனென்றால், இந்தி சினிமாவில் முன்பு மென்மையான படங்கள் வந்தது. இப்போது சல்மான்கான் போன்ற பெரிய நடிகர்களுக்கே ஹரியோட ட்ரெண்ட்டை தான் பாலோ பண்ணுகிறார்கள்.
'அவன் இவன்' படத்துல விஷால் கண்ணை அப்படி வைச்சுக்கிட்டு நடித்தது எவ்வளவு கஷ்டம் என்று எல்லாருக்கும் தெரியும். அந்தப்படத்தில் சண்டைக்காட்சிகளில் எல்லாம் அவ்வளவு கஷ்டப்பட்டு நடித்திருப்பார். 'அவன் இவன்' படத்திற்காக விஷாலுக்கு தேசிய விருது கிடைக்கவில்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு.
தேசிய விருது கிடைத்தால், கமல் சாருக்கு கிடைத்தது நமக்கும் கிடைச்சிருக்கு என்று சந்தோஷப்பட்டு கொள்ளலாம். கிடைக்கவில்லை என்றால் சிவாஜி சாருக்கே கிடைக்கவில்லை, நமக்கு எங்கே கிடைக்கப்போகிறது. நடிப்புக்கே நடிப்பு சொல்லிக் கொடுத்த சிவாஜிக்கே தேசிய விருது கிடைக்கவில்லை.
தமிழ் திரையுலகில் அதிகமாக காக்கி சட்டை மாட்டினது நானாக தான் இருப்பேன். அந்தளவிற்கு நிறைய படங்களில் போலீஸாக பண்ணிவிட்டேன். 'பூஜை'யிலும் போலீஸ் அதிகாரியாக தான் நடித்திருக்கிறேன்" என்று கூறினார்.
இயக்குநர் ஹிரி பேசும் போது, "இன்னும் 3 நாட்களில் படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து சென்சாராகி விடும். 'பூஜை' படத்தின் கதை கோயம்புத்தூரில் ஆரம்பித்து பிஹாரில் முடியும். 'தாமிரபரணி' படத்திற்கு பிறகு விஷாலுடன் இணைய வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். இந்தப் படம் சரியாக அமைந்தது. அதே போல் எனது படத்தில் வில்லன்களை 15 தூரத்துகிறார்கள் என்றால் 5 சுமோக்கள் சர்ர்ர்ர்ர்ர் என்று போகத்தான் செய்யும். அதை யாரும் தப்பாக நினைக்காதீர்கள். ஏனென்றால், எங்க ஊர் பக்கம் வந்தீர்கள் என்றால், அப்படித்தான் இருக்கும். அது தான் எனது படத்திலும் பிரதிபலிக்கிறது." என்றார்.
நடிகர் விஷால் பேசும்போது, "2007ல் ஹரி இயக்கத்தில் நான் நடித்த 'தாமிரபரணி' வெளியானது. அதனைத் தொடர்ந்து 7 ஆண்டுகள் கழித்து எங்களுடைய இணைப்பில் 'பூஜை' தயாராகி இருக்கிறது. என்னுடைய சினிமா வாழ்க்கையில், அதிக திரையரங்குகள் மற்றும் அதிக வியாபாரம் ஆனது 'பூஜை' தான். அதற்கு எங்களுடைய இணை தான் காரணம். பண்டிகை நாட்களில், குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து பார்ப்பது போன்று 'பூஜை' இருக்கும். தேதி முடிவு பண்ணி, படங்கள் தயாரிப்பது எனக்கு வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. அது நல்ல விஷயம், இனியும் தொடரும் என்று நம்புகிறேன்.
அடுத்த ஆண்டு நடிகர் சங்க கட்டிடத்திற்காக ஆர்யா, ஜெயம் ரவி, ஜீவா, கார்த்தி மற்றும் நான் இணைந்து ஒரு படம் நடிக்க திட்டமிட்டு இருக்கிறோம். அதற்கான கதை மற்றும் இயக்குநர் என எதுவும் முடிவாகவில்லை" என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT