Published : 18 Oct 2014 03:13 PM
Last Updated : 18 Oct 2014 03:13 PM
எந்தவித பிரச்சினையும் இல்லாமல் 'கத்தி' வெளியாகுமா என்பதற்கு இன்று மாலை அல்லது இரவு முடிவு எட்டப்படும் எனத் தெரிகிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில், தயாராகி இருக்கும் படம் 'கத்தி'. லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார்.
இலங்கை அதிபர் ராஜபக்சே ஆதரவு பெற்ற நிறுவனம் தான் லைக்கா என்று படம் ஆரம்பித்ததில் இருந்து சர்ச்சைகள் சுற்றிக் கொண்டே இருக்கின்றன. படம் முடிவு பெறும் தருவாயில், இப்பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது.
தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் தற்போது இப்படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி, படம் வெளியானால் திரையரங்குகள் முன்பு ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்தார்கள்.
இந்நிலையில், 'கத்தி' படத்தின் பின்னணியில் ரசிகர்களுக்கு பல்வேறு கேள்விகளுக்கும் விடை தெரியாமல் இருக்கிறது. விடை தெரியாமல் இருக்கும் கேள்விகள்..
* படத்தை ஜெயா டி.வி நிறுவனம் வாங்கிவிட்டது என்று படக்குழு கூறிவந்தாலும், ஜெயா டி.வி நிறுவனம் "நாங்கள் எந்தவித ஒப்பந்தமும் போடவில்லை" என்று கூறப்பட்டு வருகிறது. அப்படியானால் டி.வி உரிமை யாரிடம் இருக்கிறது?
* 'கத்தி' படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஜெயா டி.வி மட்டும் தான் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்ற முறையில் நடைபெற்றது. அவ்வாறு ஜெயா தொலைக்காட்சி வாங்கியிருந்தால், அந்த இசை வெளியீட்டு விழாவை இந்நேரத்திற்குள் ஒளிபரப்பு செய்திருப்பார்களே.. ஏன் செய்யவில்லை?
* வெளியீட்டிற்கு இன்னும் மிகச்சில நாட்களே இருக்கும் நிலையில், பேட்டி என்று தொடர்பு கொண்டால், கண்டிப்பாக பேசுவார்கள். ஆனால், தற்போதைய நிலவரம், படக்குழு சம்பந்தப்பட்ட யாருக்கு போன் செய்தாலும், எல்லாருமே பிஸியாக இருக்கிறேன் என்று கூறுகிறார்கள் அல்லது அப்புறம் பேசுங்கள் என்று கூறிவிட்டு அடுத்த முறை போன் செய்யும் போது எடுப்பதில்லை. இதற்கான காரணம் என்ன?
* இதுவரைக்கும் 10 முதல் 15 புகைப்படங்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறார்கள். வழக்கமாக 100 முதல் 200 புகைப்படங்கள் வரை வெளியாகும். ஏன் இன்னும் புகைப்படங்களை வெளியிடவில்லை?
* ஒரு படத்திற்கு முக்கியமாக கருதப்படுவது படத்தின் ட்ரெய்லர். ஆனால், 'கத்தி' ட்ரெய்லர் இது வரை(அக்.18) வெளியாகவில்லை. என்ன காரணம்?
இவ்வாறு பல கேள்விகள் இருக்கும் நிலையில், இன்று காலை ஐங்கரன் கருணாமூர்த்தி திரையரங்க உரிமையாளர்களை சந்தித்து பேசிவருகிறார். இது குறித்து குரோம்பேட்டை வெற்றி திரையரங்க உரிமையாளர் தனது ட்விட்டர் பக்கத்தில், "'கத்தி' தீபாவளிக்கு வெளியாகுமா? லைக்கா பிரச்சினை தொடர்கிறது. இன்று இரவிற்குள் பேச்சுவார்த்தையில் நல்ல முடிவுகள் எட்டப்படும் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.
பல போராட்டங்கள் கடந்திருக்கும் 'கத்தி', தற்போது நிலவி வரும் இறுதிகட்ட போரட்டத்தையும் கடந்து உறையில் இருந்து திரைக்கு வருமா?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT