Published : 02 Sep 2014 09:44 AM
Last Updated : 02 Sep 2014 09:44 AM
எம்.ஜி.ஆர். நடித்த ’ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் 49 ஆண்டுகளுக்குப் பின் மறு வெளியீடு செய்யப்பட்டது. இதன் வெள்ளி விழா கொண்டாட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை கோலாகலமாக நடந்தது.
‘‘தோல்வியை எதிரிகளுக்கு பரிசளித்தே பழக்கப்பட்டவன் நான்’ ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் வில்லன் நம்பியாரைப் பார்த்து எம்.ஜி.ஆர். கூறும் வசனம்தான் இது. 49 ஆண்டுகளுக்கு பிறகு மறு வெளியீட்டில் வெள்ளி விழா கொண்டாடி மீண்டும் வெற்றி பெற்றுள்ளார் ‘ஆயிரத்தில் ஒருவன்’. 1965-ம் ஆண்டில் பத்மினி பிக்சர்ஸ் சார்பில் பி.ஆர்.பந்துலு தயாரித்து இயக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் அப்போது பெரும் வெற்றி பெற்றது. ஆனால், அப்போது தமிழகத்தில் நிலவி வந்த இந்தி எதிர்ப்பு போராட்ட பதற்றத்தால் வெற்றிவிழா கொண்டாட முடியாமல் போனது.
இப்போது, டிஜிட்டல் வடிவில் கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டது. ‘அதோ அந்த பறவை போல…’, ‘ஏன் என்ற கேள்வி…’ போன்ற இன்றைய தலைமுறையையும் ஈர்க்கும் பாடல்களை கொண்ட இத்திரைப்படம் 49 ஆண்டுகள் கழித்தும் பெரும் வெற்றி பெற்று வெள்ளி விழா கண்டுள்ளது. இதை முன்னிட்டு, முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துக்களுடன் சென்னை காமராஜர் அரங்கத்தில் திங்கள்கிழமை வெற்றிவிழா கொண்டாடப்பட்டது.
அதன் பின்னணியை விவரிக்கிறார் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்ட திரைப்பட விநியோகஸ்தர் ஜி.சொக்கலிங்கம். அவர், தி இந்து-விடம் கூறியதாவது:
பொக்கிஷம்
1965-ல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்து வெளியான ஆயிரத்தில் ஒருவன், 35எம்எம், மோனோ சவுன்ட் தொழில்நுட்பத்தில் வெளியான செல்லுலாய்ட் படைப்பாகும்.
அதனை இக்காலத் தொழில்நுட்பத்துக்கேற்ப மாற்றி வெளியிட முடிவு செய்தோம். திரையரங்குகள் தற்போது “கியூப் பார்மட்” என்னும் டிஜிட்டல் மயமாகிவிட்டதால், பழுதடைந்திருந்த அப்படத்தின் நெகடிவ் சுருள்களை அதற்கேற்ப சுத்தம் செய்து டிடிஎஸ், 5.1 சரவுண்ட், சினிமாஸ்கோப் உள்ளிட்ட பல நவீன மாற்றங்களுடன் வடிவமைத்தோம். இதற்கு 2 ஆண்டுகள் பிடித்தது. இது பொக்கிஷத்தை பாதுகாக்கும் முயற்சியாகும்.
கடந்த மார்ச் 14-ம் தேதியன்று தமிழத்தில் 122 திரையரங்குகளில் முதல்வரின் வாழ்த்துக்களுடன் வெளியிடப்பட்ட அந்த வெற்றிச்சித்திரம், சென்னை ஆல்பட் திரையரங்கில் 175-வது நாளை கொண்டாடுகிறது. சத்யம் திரையரங்குகளில் 175-வது நாளை நெருங்கிவிட்டது.
1965-ல் வெளிவந்தபோது சென்னை மிட்லண்ட், ஸ்ரீகிருஷ்ணா, மேகலா ஆகிய திரையரங்குகளில் வெற்றிகரமாக 100 நாட்களைக் கடந்து ஓடியது இப்படம். ஆனால், அப்போது இந்தி எதிர்ப்பு போராட்டம் காரணமாக வெற்றிவிழா கொண்டாடப்படவில்லை. அப்படத்தின் 100-வது நாள் நாளிதழ் விளம்பரத்தில் அது பற்றிய அறிவிப்பினையும் வெளியிட்டார் பந்துலு. சுமார் 50 ஆண்டுகள் கழித்து அது மீண்டும் மறுவெளியீடு செய்யப்பட்டு, தற்போது வெள்ளிவிழா கொண்டாடப்படுகிறது.
இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தபோது அவர் பாராட்டியது மட்டுமின்றி, வாழ்த்து மடலை அளிப்பதாகவும் கூறியது எனக்குக் கிடைத்த மாபெரும் பாக்கியம்.
இவ்வாறு சொக்கலிங்கம் கூறினார்.
எம்.ஜி.ஆர் தீவிர ரசிகர்கள்
திங்கள்கிழமை நடந்த இப்படத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியில், அப்படத்தில் பணிபுரிந்த எம்.எஸ்.விஸ்வநாதன், பி.சுசீலா உள்ளிட்டோர் பங்கேற்றனர். நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், இயக்குநர் பி.வாசு உள்ளிட்ட எம்.ஜி.ஆரின். ஏராளமான திரையுலக ரசிகர்கள் பங்கேற்று பேசினர். ஏராளமான ரசிகர்களும் பல்வேறு திரையரங்க உரிமையாளர்களும் வந்திருந்தனர்.
முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
திரைவானிலும் அரசியல் வானிலும் எவராலும் வெல்லமுடியாத வரலாற்றுச் சாதனை படைத்த எம்.ஜி.ஆருடன் இணைந்து நான் நடித்த முதல் தமிழ் வெற்றித் திரைப்படமான ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் நவீன தொழில்நுட்பத்துடன் எண்ணியியல் வடிவில் தயாரிக்கப்பட்டு மீண்டும் வெற்றிநடை போட்டு வெள்ளிவிழா கொண்டாட இருக்கிறது என்ற செய்தி பெருமகிழ்ச்சி அளிக்கிறது. 50 ஆண்டுக்கு பிறகும் சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை போல வாடாமல் இருக்கிற வாடா மலர் ‘ஆயிரத்தில் ஒருவன்’.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT