Published : 01 Sep 2014 07:32 PM
Last Updated : 01 Sep 2014 07:32 PM
திரைத்துறையில் நான் அரசியல் செய்ததில்லை என்று நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் கமல் கூறினார்.
பாலாஜி தரணிதரன் இயக்கவிருக்கும் 'ஒரு பக்க கதை' படத்தின் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ். அவரை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தி வைக்கும் நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது.
நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஜெயராமின் மகனை அறிமுகப்படுத்தி வைத்தார்.
இவ்விழாவில் கமல்ஹாசன் பேசியது, "நான் இங்கு வந்ததிற்கு நட்பு, உறவு இரண்டுமே காரணம். என்னைப் பொறுத்தவரை சினிமா எனக்கு உறவும் கூட. சினிமாவில் இருக்கும் யாராக இருந்தாலும் சரி, என்னை எதிர்ப்பவர்கள், தூற்றுபவர்கள் என அனைவருமே குடும்பத்தில் சண்டைப் போட்டு விட்டு வெளியே இருப்பதாக தான் அர்த்தம். ஆகவே, சினிமா எனது குடும்பம். அதில் எனக்கு நெருங்கிய உறவு என்று இருக்கிறது. அது தான் ஜெயராம். அதுக்காக தான் இங்கே வந்திருக்கிறேன். இதுக்கூட பண்ணவில்லை என்றால் வேற வேலை என்ன இருக்கிறது.
எனக்கு நினைவு தெரிந்த முதல், நான் நடித்துக் கொண்டு இருப்பது சினிமாவில் மட்டுமே. அதற்கும் முன்னாடி வாசன் விஷுவல்ஸ் கம்பெனி ஆரம்பித்து விட்டார்கள். இந்த விழாவில் இயக்குநர் தவிர மற்ற அனைவருமே தயாரிப்பாளர்கள் தான் என்று நினைக்கிறேன். இங்கே இருப்பதிலே கெட்டிக்கார தயாரிப்பாளர் ஜெயராம் தான். காளிதாஸை தயாரித்திருக்கிறார்.
காளிதாஸ் என்ற பெயரில் இன்னொருவர் இல்லை என்பது பெரிய விஷயம். சினிமாவில் கணேசன் என்பது பொதுவான பெயர். அந்த பெயரில் பலர் இருக்கிறார்கள். மூத்த கணேசன் ஒருவர் அடித்துக் கொண்டு இருந்த நேரத்தில், அந்த பெயரில் வர பலர் பயந்தார்கள்.
சுஜாதா என்ற எழுத்தாளர், தனது மனைவி பெயரை வைத்துக் கொண்டதற்கு ரங்கராஜன் என்ற பெயரில் இன்னொரு பெரிய எழுத்தாளர் இருந்ததால் தான். எல்லாமே ப்ளான் பண்ணி தான் பண்ணுவார் ஜெயராம். அதனால் தான் மகனுக்கு காளிதாஸ் என்று பெயர் வைத்திருக்கிறார். இப்போ கூட பாருங்க. ஒரு பையன், ஒரு பொண்ணு, எல்லாமே ப்ளான் பண்ணித்தான் பண்ணுவார்.
இவரை அறிமுகப்படுத்தப் போவது இயக்குநர் தான். நான் சும்மா சுவிட்ச் ஆன் பண்ணுவது மாதிரி, இது தான் காளிதாஸ் என்று சொல்றேன். அவ்வளவு தான். DNAவில் எல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது. உழைப்பில் தான் நம்பிக்கை உண்டு. காளிதாஸிற்கு முன்னாடியே சினிமா அனுபவம் இருக்கிறது.
பணிவு மட்டும் கற்றுக் கொள்ளதீர்கள். சினிமாவில் உள்ள கஷ்ட, நஷ்டங்களை எல்லாம் கற்றுக் கொள்ளக் கூட வேண்டாம், புரிந்தாவது கொள்ளுங்கள். சினிமாவில் நானும் தயாரிப்பாளராக இருந்து வருகிறேன். 30 வருடங்களாக படம் எடுத்து வருகிறேன். நான் எடுத்த படங்கள் எல்லாமே நல்ல படங்கள். ஒன்று, இரண்டு படம் தோற்று போயிருக்கலாம். என்னுடைய வெற்றி நட்சத்திரத்தினால் வந்தது அல்ல. நல்ல நட்சத்திரங்களை மட்டும் கூட வைத்துக் கொண்டேன்.
வித்தியாசமான படங்களைப் பண்ணு, என்ன பாம்பா கடிச்சிட போகுது என்று எனக்கு சொல்ல வாத்தியார் இருந்தார். அதை தான் நான் பண்ணிட்டு இருக்கேன். வித்தியாசமான படங்களை தான் நான் விரும்புகிறேனோ இல்லையோ, ரசிகர்கள் விரும்புகிறார்கள். நான் விரும்புகிறேன் என்பதை கூட்டத்தோடு சொல்லிக் கொள்கிறேன். வித்தியாசத்தை தான் பார்க்கிறார்கள். அதனால் தான் நான் நடிக்க வந்தேன்.
எவ்வளவு நல்ல உணவுக் கொடுத்தாலும், அங்கே போய் சாப்பிட்டு பார்ப்போமே என்று நினைப்பார்கள். ஆகவே புதிதாக வருபவர்களுக்கு எத்தனை பெரிய ஜாம்பவான்கள் இருந்தாலும் வாய்ப்புகள் உண்டு. ஆனல், அந்த வாய்ப்பை நல்லபடியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். திரைத்துறை அரசியல் என்றால் என்னிடம் வந்து கேட்டுக் கொள்ளுங்கள். உங்கப்பாவிற்கு அதெல்லாம் தெரியாது. நான் பட்டுருக்கேன் அதனால் எனக்குத் தெரியும். நான் அரசியல் பண்ணியதில்லை." என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT