Last Updated : 13 Sep, 2014 03:24 PM

 

Published : 13 Sep 2014 03:24 PM
Last Updated : 13 Sep 2014 03:24 PM

ஐ எதைப் பற்றியது? - விக்ரம் சூசகம்

'ஐ' படத்தின் கதை எதைப் பற்றியது என்று நடிகர் விக்ரம் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

விக்ரம், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'ஐ' படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 15ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. ஷங்கர் இயக்கி இருக்கும் இப்படத்தின் இசையினை அர்னால்ட் வெளியிட இருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கும் இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

ரஜினி, கமல் உள்ளிட்ட பல்வேறு முன்னணி தமிழ் திரையுலக பிரபலங்கள் 'ஐ' இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். நேரு உள்விளையாட்டு அரங்கில் செப்.15ம் தேதி மாலை விழா நடைபெற இருக்கிறது.

இப்படம் குறித்து ஷங்கர் பல்வேறு பேட்டிகள் அளித்திருந்தாலும், நடிகர் விக்ரம் இப்படம் குறித்து எதுவுமே பேசாமல் இருந்தார். முதன் முறையாக தொலைக்காட்சி பேட்டி ஒன்றில், "'ஐ' என்றால் அழகு என்று அர்த்தம். விளம்பரம் மற்றும் மாடலிங் உலகம் குறித்து இப்படம் பேசும். ஒரு மாடல் உடைய கடுமையான உழைப்பும், வேதனையும் தான் படம். பிறக்கும் போதே மாடலாக வேண்டும் என்று இல்லாமல், நாயகன் எதிர்பாராத விதமாக எப்படி மாடலாகிறான், அதற்குப் பிறகு என்னவாகிறது என்பது தான் 'ஐ'.

இது ழுழுக்க முழுக்க ஷங்கரின் பாணியில் ஒரு த்ரில்லர் திரைப்படம் தான். ஒரு நடிகனாக, நடிப்பதற்கு எனக்கு நிறைய இடங்கள் இருக்கிறது. படம் பார்ப்பவர்கள் அதிர்ந்து போவார்கள். மூன்று முறை இப்படத்திற்காக எனது உடலமைப்பை மாற்றினேன். கதை மிகவும் பலமாக இருந்ததால், என்னுடைய கடுமையான உழைப்பைக் கொட்டியிருக்கிறேன். நான் இந்தப் படத்தை ரொம்ப ஆவலாக எதிர்நோக்கி இருக்கிறேன் " என்று விக்ரம் கூறியிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x