Last Updated : 24 Sep, 2014 12:05 PM

 

Published : 24 Sep 2014 12:05 PM
Last Updated : 24 Sep 2014 12:05 PM

இணையத்தில் லிங்குசாமிக்கு எதிராக அத்துமீறல்: இயக்குநர் வெங்கட்பிரபு கொந்தளிப்பு

அஞ்சான் திரைப்படம் வெளியாகி, அது தொடர்பான பேச்சுகள் அடங்கிய நிலையில், அப்படத்தின் இயக்குநர் லிங்குசாமி அளித்த பழைய தொலைக்காட்சிப் பேட்டியை முன்வைத்து, >சமூக வலைதளங்களில் கலாய்ப்பு பக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

தொடர்ச்சியாக, நையாண்டித்தனத்துடன் இயக்குநர் லிங்குசாமி மீதான கலாய்ப்புத் தாக்குதல்கள் மிகுந்துள்ள நிலையில், அவருக்கு ஆதரவுக் குரல் கொடுத்திருக்கிறார், இயக்குநர் வெங்கட்பிரபு.

இணையத்தில் இயக்குநர் லிங்குசாமிக்கு எதிரான கேலித் தாக்குதல்களை கடுமையாக சாடி, வெங்கட்பிரபு வெளியிட்டுள்ள பதிவு:

"நீங்கள் நினைப்பது போல, சினிமா இயக்குவது என்பது சாதாரண விஷயமில்லை. எங்களுக்கு எது சிறந்ததோ அதைச் செய்கிறோம். ஆனால், சில நேரங்களில் அது எடுபடுகிறது, பல நேரங்களில் அது எடுபடாமல் போகிறது.

லிங்குசாமி சார் ஒரு சிறந்த இயக்குநர். 'ஜி' படத்தில் அவரோடு பணியாற்றி இருக்கிறேன். எந்த ஓர் இயக்குநரும் கடவுள் அல்ல. கடவுளே சில தப்புகளைச் செய்கிறார். தீர்ப்பு சொல்வதற்கு நாம் யார்?

நீங்கள் சொல்வதெல்லாம் (லிங்குசாமியை கலாய்க்கும் இணையவாசிகள்) சிரிப்பாக இருக்கிறது. ஆனால், எதிலுமே அர்த்தமில்லை. உங்களைப் பொறுத்தவரை ஒரு படம் வெற்றியா இல்லையா என்பது மட்டும்தான்.

நீங்கள் நல்ல ரசிகர்களாக இருந்திருந்திருந்தால், 'தங்கமீன்கள்' ஒரு மகத்தான வெற்றிப் படமாகி இருக்குமே?

உங்களால் கிண்டல் மட்டுமே செய்ய முடியும். நாங்கள் உங்களைக் கலாய்க்க ஆரம்பித்தால்?

உங்களுக்காகத்தான் படம் இயக்குகிறோம் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், ஒரு நல்ல படத்தை ஏன் வெற்றி அடைய வைக்கவில்லை?" என்று கொந்தளித்து கேள்வி எழுப்பியிருக்கிறார் வெங்கட்பிரபு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x