Published : 16 Sep 2014 06:49 PM
Last Updated : 16 Sep 2014 06:49 PM
'ஐ' படத்தின் இசை வெளியீட்டு விழாவில், தமிழ் திரையுலகின் பிரம்மாண்டத்திற்கு ஹாலிவுட் நடிகர் அர்னால்டு குறிப்பிடத்தக்க பாடம் ஒன்றைக் கற்றுக் கொடுத்திருக்கிறார். அதுதான் 'காலம் தவறாமை'யின் அவசியம்.
ஹாலிவுட் நடிகர்களான ஜாக்கி சான் மற்றும் அர்னால்டு இருவருமே தமிழ்த் திரையுலகின் பிரம்மாண்ட படங்களின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல் நடித்த 'தசாவதாரம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட்டார் ஜாக்கிசான்.
அந்த விழாவில் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி, இந்தி நடிகர் அமிதாப் பச்சன், கமல், மலையாள நடிகர் மம்மூட்டி, விஜய், மல்லிகா ஷெராவத் ஆகியரோடு ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான்கலந்து கொண்டார்.
'தசாவதாரம்' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும்போது, கேசட் விளம்பரத்தைச் சுற்றிருந்த பேப்பரை கிழித்து அப்படியே கீழே போட்டு விட்டார்கள். யாருமே அதைக் கண்டு கொள்ளாமல் புகைப்படம் மற்றும் வீடியோவிற்கு போஸ் கொடுக்க ஆரம்பிக்க, ஜாக்கிசான் அந்தக் குப்பைகளைப் பொறுக்கி எடுத்து அங்கிருந்த குப்பைத் தொட்டியில் போடுவதற்கு நடந்து சென்றார். உடனே சுற்றிருந்த நடிகர்கள் சுதாரித்து அவரிடம் இருந்த பேப்பரை வாங்கி உதவியாளர் ஒருவரிடம் கொடுத்தனர்.
பிறகு, ஜாக்கிசான் இசை வெளியீட்டு விழாவிற்கு போஸ் கொடுத்து கொண்டு இருந்தாலும், குப்பைப் பேப்பரை வாங்கிச் சென்ற அந்த உதவியாளர் சரியாக குப்பைத் தொட்டியில் போடுகிறாரா என்பதைப் பார்த்து கொண்டே இருந்தார். 'தசாவதாரம்' இசை வெளியீட்டு விழாவில் இது மிகப்பெரிய விஷயமாக பேசப்பட்டது.
'ஐ' இசை வெளியீட்டு விழா...
'ஐ' இசை வெளியீட்டு விழாவை பொறுத்தவரை, ஒரு விழா எந்தவித முன்னேற்பாடும் இன்றி நடைபெற்றால் எப்படியிருக்கும் என்பதற்கு ஓர் உதாரணமாக இருந்தது. பிற்பகல் 3:30 மணியில் இருந்து 5:30 மணிக்குள் வந்துவிட வேண்டும் என்று டிக்கெட்களில் போடப்பட்டு இருந்தது. ஆனால், நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது மணி 7:30-யைத் தாண்டிவிட்டது.
இசை வெளியீட்டு விழா ஆரம்பிக்கும் முன்பு இசைக்கு ஏற்றவாறு ஒளி அமைப்பு மாறுவது காண்பிக்கப்பட்டது. ரஜினியை அழைத்து வந்து உட்கார வைத்துவிட்டுச் சென்று விட்டார்கள். சில நிமிடங்கள் தனியாக உட்கார்ந்து கொண்டு இருந்தார். பிறகு ஷங்கர், புனித் ராஜ்குமார் கடைசியாக அர்னால்டு அழைத்து வரப்பட்டார்.
நிகழ்ச்சியை உட்கார்ந்து பார்த்துக் கொண்டே இருந்த அர்னால்டு முன்பு பாடி பில்ட் ஷோ நடைபெற்றது. நிறைய பாடி பில்டர்கள் ஷங்கர் படங்களின் பாடல்களுக்கு ஏற்றவாறு பாடி பில்ட் நிகழ்ச்சியை அரங்கேற்றி, நேரடியாக அர்னால்டுக்கு மரியாதை செய்தார்கள். அப்போது, அவர்களோடு இணைந்து மேடையேறிய அர்னால்டு, தன்னுடைய பேச்சைத் தொடங்கினார்.
இதை கவனித்ததும், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய நடிகர் சிம்ஹா குறுக்கிட்டு, 'படத்தைப் பற்றிய பேச்சை அப்புறம் பேசலாம் சார்' என்று கூறவே, "நான் எப்போது என்ன பேச வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும்" என்று தொடங்கி தனது பேச்சைத் தொடங்கி முடித்து அரங்கினை விட்டு வெளியேறினார்.
இசையை வெளியிடுவதற்கு முன்பே அர்னால்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது, விழா ஏற்பாட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
'ஐ' படத்தின் இசை வெளியீடு விழா சிறப்பு விருந்தினர் இன்றி, ரஜினி இசையை வெளியிட புனித் ராஜ்குமார் பெற்றுக் கொண்டார். அந்த இசை வெளியீட்டின்போது கூட படத்தின் நாயகன் விக்ரமும், நாயகி ஏமி ஜாக்சனும் அங்கு இல்லை. 'ஐ' இசை வெளியீட்டு விழாவைக் காப்பாற்றியது என்னவோ ரஜினி மட்டுமே.
'தசாவதாரம்' இசை வெளியீட்டில் தூய்மையையும் எளிமையையும் கற்றுக் கொடுத்தார் ஜாக்கிசான், 'ஐ' இசை வெளியீட்டு விழாவில் 'காலம் தவறாமை'யை கற்றுக் கொடுத்திருக்கிறார் அர்னால்டு.
பிரம்மாண்டம் என்ற அடைமொழியுடன் அறங்கேற்றப்படும் தமிழ் சினிமாவின் இசை வெளியீட்டு விழாவில் எந்த ஒரு நிகழ்ச்சியும் சரியான நேரத்தில் ஆரம்பித்ததில்லை. இனியாவது விழித்துக்கொள்வார்களா?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT