Published : 17 Aug 2014 11:21 AM
Last Updated : 17 Aug 2014 11:21 AM
இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில் 1964-ம் ஆண்டு வெளிவந்து மிகப் பெரிய வெற்றி பெற்ற படம் ‘காதலிக்க நேரமில்லை’. இந்தப் படத்தின் 50-ம் ஆண்டு பொன்விழா, சென்னை காமராஜர் அரங்கத்தில் சனிக்கிழமை நடந்தது.
நடிகைகள் காஞ்சனா, ராஜஸ்ரீ, சச்சு, நடிகர் வி.எஸ்.ராகவன், பின்னணிப் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி, கே.ஜே.ஜேசுதாஸ் உட்பட அப்படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ரவிச்சந்திரனின் மனைவி விமலா, கிரேஸி மோகன், இயக்குநர்கள் மனோபாலா, சேரன், நடிகர் ஆனந்த்பாபு, காந்தி கண்ணதாசன், ஆல்பா மைண்ட் பவர் டாக்டர் விஜயலட்சுமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் சில காட்சிகளும், பாடல் களும் திரையிடப்பட்டன. ஒய்.ஜி. மெலோடி மேக்கர்ஸ் குழுவினரின் இசை நிகழ்ச்சியும் நடந்தது.
விழாவில் நடிகர், நடிகைகள் பேசியதாவது:
காஞ்சனா:
இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற படங்களைத் தந்தவர் இயக்குநர் ஸ்ரீதர். எங்கள் மீது வெளிச்சம் விழுவதற்கு காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர். அவர் மிகப் பெரும் சகாப்தம். எனது 75-வது பிறந்த நாளின்போது இந்தப் படத்தின் பொன்விழாவை கொண்டாடுவது பெருமையாக உள்ளது.
ராஜஸ்ரீ:
சித்ராலயா கோபு அலுவலகத்தில் இருந்து 1964-ல் ஒரு போன் வந்தது. ஒரு படம் எடுப்பதாகவும் நாளை காலை ஷுட்டிங் என்றும் கூறினார்கள். மறுநாள் ஷுட்டிங் சென்றபோது எனக்கு ஜோடியாக ரவிச்சந்திரன் என்ற புதுமுகம் நடிப்பதாக சொன்னார்கள். புது நடிகர் என்பதால் முதலில் யோசித்தேன். முதல் காட்சியே ‘அனுபவம் புதுமை’ பாடல் காட்சிதான். அந்தப் படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்தி, தெலுங்கிலும் மாபெரும் வெற்றி பெற்றது.
இயக்குநர் சேரன்:
சாதித்தவர்கள், பெரியவர்கள் எல்லோரும் ஒன்றுகூடி அமர்ந்திருக்கிற இந்த மேடையில் பங்கேற்பதில் மிக்க மகிழ்ச்சி. காஞ்சனா போன்ற நடிகைகளை இந்தக் காலத்தில் பார்க்க முடியாது. காலத்தால் மறக்க முடியாத இயக்குநர் ஸ்ரீதர். அன்றைய சினிமாவை புதிய கோணத்தில் காண்பித்தவர். இயக்குநர்களுக்காகப் படங்களை பார்க்க வைத்தவர்களில் முதன்மையானவர். அத்தகைய ஜாம்பவானை திரையுலகம் மறந்து வருகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
நிகழ்ச்சியை முன்னின்று நடத்திய நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் பேசும்போது, ‘‘என்னுடைய 16 வயதில் இந்தப் படத்தைப் பார்த்தேன். அன்றைய காலத்தில் என் வயது பிள்ளைகளுக்கு காதலைக் கற்றுக் கொடுத்தவர் இயக்குநர் ஸ்ரீதர். இப்படத்தில் நடித்த நடிகர்களுடன் இந்நிகழ்ச்சியை நடத்துவதில் பெருமைப்படுகிறேன்’’ என்றார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை ‘தி இந்து’, ஆல்பா மைண்ட் பவர், காஞ்சிபுரம் எஸ்.எம். சில்க்ஸ், ஸ்ரீராம் பிராப்பர்ட்டீஸ், ஹூண்டாய் மோட்டார் பிளாசா, அசோக் குரூப்ஸ், வெற்றி ரியல்ஸ், அப்பாஸ் கல்சுரல் ஆகியவை செய்திருந்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT