Published : 13 Aug 2014 02:55 PM
Last Updated : 13 Aug 2014 02:55 PM
அஸ்வின், சிருஷ்டி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆகஸ்ட் 22ம் தேதி வெளியாக இருக்கும் 'மேகா' படத்தின் பத்திரிக்கையாளர் காட்சி சென்னையில் நடைபெற்றது. அக்காட்சி தொடங்கும் முன் இளையராஜா கலந்து கொண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
அச்சந்திப்பில் இளையராஜா பேசும்போது, "முதல்ல என்கிட்ட வரப்போ, எப்படி இருந்தாங்களோ.. இன்றைக்கு எப்படி இருக்காங்களோ.. அப்படிங்கிற ஆட்கள் நிறைய இருக்காங்க. அதுபற்றி ஒரு வருத்தமும் இல்லை, குறையும் இல்லை. அவன் பிரம்மாவாவே இருக்கட்டும். நமக்கு என்ன நஷ்டம்" என்றார்.
பேச்சை சற்று நிறுத்தியவர், இயக்குநர் கார்த்திக் ரிஷியை அழைத்து, " 'மேகா' முதல் ரீல் ரீ-ரிக்காடிங் முடிஞ்ச உடனே உங்களுக்கு எப்படியிருந்தது?" என்று கேட்டார். அதற்கு, "படம் நல்லா எடுத்திருக்கோம் அப்படினு நினைச்சுட்டு இருந்தேன். முதல் ரீல் ரீ- ரிக்காடிங் உடன் பார்த்த உடனே இது நான் எடுத்த படமா அப்படினு இருந்தது" என்று கூறினார் கார்த்திக்.
பின்னர் உடனே பேச்சைத் தொடர்ந்த இளையராஜா, "இப்படித்தான் எல்லா இயக்குநர்களுக்கும் கூறுவார்கள். நான் எடுத்த படமா என்று இயக்குநர் கூறினார் அல்லவா. அப்படித்தான் இருந்தது படமும். எவ்வளவோ படங்களுக்கு பின்னணி இசை பண்ணியிருக்கேன். நீங்கள் ஒரு தடவை பார்த்து 'த்தூ' என்று துப்பிய படத்தை எல்லாம் நான் 4 தடவை பார்த்து பின்னணி இசை பண்ணியிருக்கேன். ஏன்னா, ஒரு நாள் பின்னணி இசை இல்லாமல், ரீ-ரிக்காடிங் பண்ணும் போது இப்படி 4 தடவை பார்ப்பேன். அப்படி என்றால் என்னைப் போல பொறுமைசாலி இந்த உலகத்தில் எவனாவது இருக்கானா.
பாரதிராஜா 'முதல் மரியாதை' படம் எடுத்துட்டு, போட்டு காட்டுருப்போ அன்றைக்கு இருந்த மனநிலையில் எனக்கு அந்தப் படம் பிடிக்கவில்லை. பிடிக்கல போயிட்டேன். என்ன நீ படம் பாத்துட்டு போயிட்ட என்று பாரதிராஜா கேட்ட போது.. படம் இருக்கு என்று கூறி சமாளித்து விட்டேன்.
பின்னணி இசை வேலைகள் எல்லாம் நடந்துட்டு இருக்கு. எனக்கு படம் பிடிக்கவில்லை என்று அமைதியாக இருந்தார் பாரதிராஜா. கடைசி ரீலுக்கு முன்னாடி ஜெயில் காட்சிக்கு பின்னணி இசை முடித்து விட்டு, இங்கே வா.. வந்து பார் என்று கூறினேன். கடகடவென பாரதிராஜாவிற்கு கண்ணீர் கொட்டுகிறது. தமிழ் திரையுலகில் இருப்பவர்களுக்கு இந்த விஷயம் தெரியும். கண்ணீரோடு என் கையைப் பிடித்துக் கொண்டு "உனக்கு படம் பிடிக்காமலேயே இப்படி பண்ணியிருக்கியே.." என்று கேட்டார்.
பிடிச்சி இருந்தாலும் இப்படி தான் பண்ணியிருப்பேன். படம் எனக்கு பிடிக்குது, பிடிக்கல என்பது என்னோட பெர்சனல். ஆனால், இசை என் சரஸ்வதி. நான் என் தொழிலுக்கு துரோகம் பண்ண மாட்டேன். நான் கூப்பிட்டதும் ஓடி வருதே ஏழு ஸ்வரங்கள் அதுக்கு துரோகம் பண்ண மாட்டேன்" என்று பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT