Published : 08 Aug 2018 06:33 AM
Last Updated : 08 Aug 2018 06:33 AM
அண்ணன் களைப்பாறிய இடம் அருகே தம்பி இளைப்பாறுவதே பொருத்தம் என்று நடிகர் விவேக் கூறியுள்ளார்.
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி, சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை மாலை காலமானார். அவருக்கு வயது 95.
மறைந்த கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது பெரும் சர்ச்சையாக உருவாகியுள்ளது. தமிழக அரசின் மறுப்புக்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள், திரை பிரபலங்கள் எனப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக விவேக் தன் ட்விட்டர் பக்கத்தில், ''நீடு புகழ் சகாப்தம்! நிரந்தர சரித்திரம்! முயற்சியின் அகரம்! முத்தமிழின் சிகரம்! எண்ணி எண்ணி வியக்கும் உழைப்பு! நீ ஈடு செய்ய முடியா இழப்பு.! கண்ணீரில் கரைகிறேன்! நம் நினைவுகளால் நிறைகிறேன்!
அண்ணன் களைப்பாறிய இடம் அருகே தம்பி இளைப்பாறுவதே பொருத்தம்! சட்டமும் அரசும் தயை கூர்ந்து அண்ணா சமாதி அருகே இடம் கொடுத்தல் நலம். அவர் தமிழை செம்மொழி ஆக்கி வள்ளுவனுக்கு கோட்டமும் சிலையும், தமிழ் மேதைகள் அனைவருக்கும் மெரினாவில் சிலை வைத்தவர் அன்றோ!'' என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT